ஏ. பெரியதம்பிப்பிள்ளை

From Tamil Wiki
பெரியதம்பி பிள்ளை

ஏ.பெரியதம்பி பிள்ளை (8 ஜனவரி 1899 - 2 நவம்பர் 1978) ஈழத்து தமிழறிஞர், கவிஞர். இதழாளர், பேச்சாளர்

பிறப்பு, கல்வி

மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் பெரியதம்பிப்பிள்ளை. மண்டூரில் வெஸ்லியன் மிஷன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார். உயர்கல்வியை கல்முனையில் கற்றார்.

யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் காவிய பாடசலையில் பயின்றார். அங்கே சி. கணபதிப்பிள்ளை சக மாணவர். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பண்டிதர் மயில்வாகனனாரிடத்திலும் (சுவாமி விபுலானந்தர்) பாடங்கேட்டு வந்தார். ஆறுமுக நாவலர் மரபில் வந்த தமிழறிஞர் ம.வே. மகாலிங்கசிவம் இவருடைய ஆசிரியர்.

தனிவாழ்க்கை

பெரியதம்பி பிள்ளை 1926 ஆம் ஆண்டு முதல் திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இலக்கியப் பணி

மரபுக்கவிதைகள் எழுதிய பெரியதம்பி பிள்ளை ‘புலவர்மணி கவிதைகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டார். சுவாமி விபுலானந்தர் பற்றிய "யாழ்நூல் தந்தோன்", "விபுலானந்த மீட்சிப் பத்து" என்னும் கவிதை நூல்களை எழுதினார். பகவத் கீதைக்கு மூன்று பாகங்களிலாக உரை எழுதினார்.

ஆன்மிகம்

சுவாமி விபுலானந்தர், யோகர் சுவாமிகள் ஆகியோருடன் அணுக்கம் கொண்டிருந்தார். சைவம், வேதாந்தம் ஆகியவற்றை கற்றறிந்தவர்

பொதுப்பணி

தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்காக இலங்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட 20 அம்சத் திட்டக் குழுவில் பங்காற்றினார்.

விருதுகளும் பட்டங்களும்

  • 1950 ஆம் ஆண்டில் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றம் "புலவர்மணி" என்னும் விருது வழங்கிக் கவுரவித்தது.
  • புலவர்மணி என்று பட்டம் பெற்றிருந்தார்
  • 1962ல் கர்மயோகம் நூலுக்காக இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு

இலக்கிய இடம்

இலங்கையில் சுவாமி விபுலானந்தர் உருவாக்கிய இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தவராக பெரியதம்பி பிள்ளை மதிப்பிடப்படுகிறார்

நூல்கள்

கவிதை
  • யாழ்நூல் தந்தோன்
  • விபுலானந்த மீட்சிப்பத்து
  • ஈழமணித் திருநாடு
  • கொக்கட்டிச் சோலை தான்தோன்றிஸ்வரர் பதிகம்
  • திருமாமாங்கப் பிள்ளையார் பதிகம்
  • ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம்
  • சித்தாண்டிக் கந்தசுவாமி பதிகம்
  • திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பதிகம்
  • காளியாமடு விநாயகர் ஊஞ்சல்
  • புலவர்மணிக் கவிதைகள்
உரைநடை
  • பகவத்கீதை உரை மூன்றுபாகங்கள்
  • கர்மயோகம் (1962, சாகித்திய மண்டலப் பரிசு)