ஏசுவின் தோழர்கள்

From Tamil Wiki
ஏசுவின் தோழர்கள்

ஏசுவின் தோழர்கள் (1988) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். போலந்தின் அரசியல் சூழலின் பின்னணியில் எழுதப்பட்டது. ஜனநாயகத்தின் உள்ளே செயல்படும் சூழ்ச்சிகளையும் தனிமனிதர்கள் சிக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களையும் விவாதிக்கிறது

எழுத்து, வெளியீடு

இந்திரா பார்த்தசாரதி இந்நாவலை 1988-ல் தினமணி கதிர் வார இதழில் தொடராக எழுதினார். பின்னர் தமிழ்ப்புத்தகாலயம் இதை 1991-ல் நூலாக்கியது.

பின்னணி

இந்திரா பார்த்தசாரதி 1981முதல் 1986 வரை போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்ற்றினார். அது சோவியத் ஒன்றியம் வலுவிழந்து வந்த காலகட்டம். ருஷ்யாவில் ரிஸ்த்ராய்க்கா, கிளாஸ்நாஸ்த் ஆகிய சீரமைப்பு இயக்கங்கள் அதிபர் மிகாயேல் கோர்பசேவ் முன்முயற்சியால் உருவாயின. 1980-ல் போலந்தில் தொழிலாளர் கிளர்ச்சிகள் உருவாகி அவை சாலிடாரிட்டி (ஒற்றுமை) என்னும் அமைப்பாக திரண்டன. அதற்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறைகள் தொடங்கின. போலிஷ் தொழிலாளர் ஐக்கிய கட்சி 1989-ல் தொடங்கப்பட்டது லெ வலேசா (Lech Wałęsa) தலைமையில் அது போலந்தின் சுதந்திரத்தை அடைந்தது. இந்திரா பார்த்தசாரதி அக்கிளர்ச்சியும் ஒடுக்குமுறையும் நிகழ்ந்த ஐந்தாண்டுக்காலத்தில் போலந்தில் இருந்தார். அதை பின்னணியாகக் கொண்டு இந்தாவலை எழுதினார்.

கதைச்சுருக்கம்

பேராசிரியர் ஒருவர் போலந்துக்குச் செல்கிறார், அங்கே அவர் இந்திய தூதரகத்தை ஒட்டிய மேல்மட்ட வாழ்வில் சந்திப்பவர்கள் இக்கதைமாந்தர்கள். தூதரக அதிகாரி நரேன், திருமலை நரசிம்மாச்சாரி தாதாச்சாரி என்னும் டி.என்.டி, அவர் மகள் ஆஷா ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். ஆஷாவின் அம்மா போலந்து குடிமகள். அவர் இந்தியாவிற்கு வந்தபோது சில குண்டர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதனால் மனச்சிதைவு கொண்டு இறக்கிறாள். ஆஷாவை போலந்து பண்பாட்டில் வளர்க்கவேண்டும் என ஆஷாவின் அம்மாவின் விருப்பம். ஆஷா கடுமையான இந்திய வெறுப்பாளர்.

ஒரு கட்டத்தில் ஆஷா தனது வேர்களைத் தேடி இந்தியாவிற்குப் பயணமாகிறாள். அப்பயணத்தில் அவள் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயிலில் தன் மூத்த அத்தையைச் சந்திக்கிறாள். அத்தை தன் குடும்பத்தை கைவிட்டுச்சென்ற டி.என்.டி மேல் எந்த வெறுப்பும் இல்லாமல் இருக்கிறாள். அந்த உறவு அவள் எண்ணங்களை மாற்றுகிறது. டி.என்.டி மரணமடைகிறார். இந்நாவல் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடுவே இந்தியப்பண்பாடு, போலந்தின் அரசியல் ஆகியவை விவாதிக்கப்படும் வடிவத்தில் அமைந்துள்ளது. போலந்து மக்கள்தான் ஏசுவின் தோழர்கள் என குறிப்பிடப்படுகிறார்கள்.

மொழியாக்கம்

Comrades of Jesus- KV Ramanathan (மொழியாக்கம்)

இலக்கிய இடம்

ஏசுவின் தோழர்கள் இந்தியாவுக்கும் போலந்துக்குமான ஒரு பண்பாட்டு உரையாடலாக அமைந்துள்ளது. போலந்தின் கலங்கிய அரசியல்சூழலில் இருந்து இந்தியாவின் மாறாத பழமை வாழ்க்கையை பார்க்கும்பார்வையை முன்வைக்கிறது. பெரும்பாலும் கருத்துக்கள் சார்ந்த உரையாடலாக அமைந்த நாவல்.

உசாத்துணை