being created

மஹா விகட தூதன்

From Tamil Wiki
Revision as of 14:27, 20 November 2022 by ASN (talk | contribs) (Para Added, Images Added, Inter Link Created; External Link Created)

‘விகட தூதன்' என்ற பெயரில் 1886-ல், சென்னையில் தொடங்கப்பட்ட இதழ், பின்னர் 1893-ல், ‘மஹாவிகடதூதன்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. தலித்துகளின் உரிமை, முன்னேற்றம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளியானது. இதன் ஆசிரியர் பா. அ. அ. ராஜேந்திரம் பிள்ளை. மிக நீண்ட காலம் வெளியான இவ்விதழ் 1927-ல் நின்றுபோனது.

பதிப்பு, வெளியீடு

சூரியோதயம் (1869), பஞ்சமன் (1871), சுகிர்தவசனி (1872), இந்துமத சீர்த்திருத்தி (1883) போன்ற தலித் இதழ்களின் வரிசையில் வெளியான இதழ் மஹாவிகடதூதன். 1886-ல், சென்னையில், ‘விகட தூதன்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ், 1893-ல், ‘மஹா விகட தூதன்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பெயர் மாற்றத்திற்கான காரணங்களை அறிய இயலவில்லை. இதன் வெளியீட்டாளர், உரிமையாளர் மற்றும் ஆசிரியராக பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளை இருந்தார்.

இதழின் ஆண்டுச் சந்தா இரண்டு ரூபாய் எட்டு அணா. 1893-ல் இதன் 1500 பிரதிகள் விற்பனையானது. இனாம் ஏதும் கொடுக்காமலேயே இவ்விதழ் 2500 பிரதிகள் வரை அக்காலத்தில் விற்பனை ஆனதாக எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு, 1925 டிசம்பர் லோகோபகாரி இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் [1].

இடையில் ஏற்பட்ட அச்சக உரிமைப் பிரச்சனையால் இதழ் அச்சகத்தின் பங்குதாரர்களுள் ஒருவராக இருந்த ஆல்பர்ட் டி சில்வா கைக்குச் சென்றது. இதழுக்கான ஆசிரியராக டி.ஐ. சுவாமிக்கண்ணு பிள்ளை நியமிக்கப்பட்டார். 1910 வரை இவர் ஆசிரியராக இருந்தார். அதன் பின் மீண்டும் இதழுக்கு பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளை உரிமையாளர் ஆனார். 1886-ல் தொடங்கப்பட்ட இவ்விதழ் 1927 வரை, தொடர்ந்து 41 ஆண்டுகள் வெளிவந்தது. பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளையின் மறைவோடு மஹா விகட தூதன் நின்று போனது.

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள் 1869-1943, ஜெ.பாலசுப்பிரமணியம், காலச்சுவடு வெளியீடு

உள்ளடக்கம்

இவ்விதழின் பிரதிகள் எதுவும் கிடைக்காததால் இதன் முழுமையான செய்திகளை அறிய இயலவில்லை என்றாலும், காலனிய அரசு ஆவணங்களில் இந்த இதழின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான தகவல்களைப் பெறமுடிவதாக, இந்த நூல் குறித்து ஆய்வு செய்திருக்கும் ஜெ.பாலசுப்பிரமணியம் தனது ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள் 1869-1943’ நூலில் குறிப்பிட்டுள்ளார் [2].

மஹா விகடனிலிருந்து செய்திக் குறிப்பு : இகபரசுகசாதனி இதழ், 1903

இதழ் குறித்த செய்திகள்

மஹா விகட தூதன்  இதழின் ஆசிரியரான பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளை குறித்து தனது ‘சென்று போன நாட்கள்’ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு. அதில் அவர், “தமிழ்ப் பத்திரிகைகளே அபூர்வமாயிருந்த பழங்காலத்தில் புதுவிதமாகப் பத்திரிகையை ஸ்தாபித்து, ஆரம்பத்தில் கொண்ட கொள்கையையும், பத்திரிகையின் ஒரு தனி அமைப்பையும் கடைசிவரையிலும் கலங்காது காத்து, ஒரே சீராய், ஒழுங்காய், தலைமையாய், பிரபலமாய் நடத்தி அரும்புகழ்பெற்ற ஆசிரியர்களுக்குள் முதன்மையாக நிற்பவர் ஜநவிநோதிநிப் பத்திரிகையின் ஆசிரியரான திவான் பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் அவர்களாவர். அவருக்குப் பின் சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீமான் ஜீ. சுப்பிரமண்ய ஐயரவர்களாவர். அதற்குப்பின் மூன்றாவதாக ஸ்ரீமான் பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை அவர்களைக் குறிப்பிடலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பூலோகவியாசன் இதழின் ஒரு குறிப்பிலிருந்து இந்த இதழ் (மஹா விகட தூதன்) தலித்துகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டது என்று அறியமுடிகிறது. அயோத்திதாசப் பண்டிதரும், ரெவரண்ட் ஜான் ரத்தினமும் இணைந்து நடத்திய திராவிடப் பாண்டியன் இதழ், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் இதழ் ஆகியவற்றோடு இது கருத்துப் போர் நடத்தியதும் புலனாகிறது.” என ஜெ.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

இந்த இதழின் பிரதிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், தமிழில் அக்காலத்தில் வெளியான பல இதழ்கள், நூல்கள் ‘மஹா விகடன் தூதன்’ இதழிலிருந்து பல செய்திகளை எடுத்தாண்டுள்ளன.

அகட விகட போதனை

கவிஞர் சுரதா தொகுத்துள்ள ‘முன்னும் பின்னும்' நூலில் மஹா விகட தூதன் இதழில் இடம் பெற்ற சில செய்திகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் [3].

மஹா விகட தூதன் - மூன்றாம் பாகத் தொகுப்பில், 1888 பிப்ரவரி 11ம் தேதியிட்ட இதழில், ‘அகட விகட போதனை' என்ற தலைப்பில் வெளியான குறிப்பு.

  1. கள் குடிக்காதவன் கங்காளி
  2. கஞ்சா குடியாதவன் காதகன்
  3. கூத்தி வீடு போகாதவன் கோமாளி
  4. கோலி விளையாடாதவன் கோட்டுமா
  5. வேசி வீட்டுக்குப் போகாதவன் வெறியன்
  6. தாம்பூலம் தரியாதவன் தறிதலை
  7. சுருட்டு பிடியாதவன் சோம்பேறி
  8. காகிதமாடாதவன் கழுதைப் பிறப்பு
  9. சூதாடாதவனுக்கு சுவர்க்கமில்லை
  10. விகட தூதனைப் படியாத வீடு விடியாது

- விகடக் குட்டி

எரிநக்ஷத்திரம் - விண்வீழ்க்கொள்ளி

கவிஞர் சுரதா தொகுத்த, ‘தமிழ்ச்  சொல்லாக்கம்’ நூலில் இருந்து, ஜான் டானியல் பண்டிதர் எழுதி, மஹா விகட தூதன் 4-4-1891 தேதியிட்ட இதழில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி பற்றிய குறிப்பு [4] .

எரிநக்ஷத்திரம் - விண்வீழ்க்கொள்ளி

சில சமயங்களில் விண்வீழ்க் கொள்ளிகள் இப்பூமியில் விழுகின்றன. அப்போது அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கையில் அவைகள் சாதாரணமான கற்களாகவே இருக்கின்றன. இவைகளைப் பல பொருட்காக்ஷி சாலையில் நாளைக்குங் காணலாம்.

உசாத்துணை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள் 1869-1943, ஜெ.பாலசுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

இகபரசுகசாதனி: தமிழ் இணைய மின்னூலகம்

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.