under review

தேவநேயப் பாவாணர்

From Tamil Wiki
தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் (பிப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) ஞா.தேவநேயப் பாவாணர். தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுனர், பன்மொழி வித்தகர். நாற்பதுக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். தனித்தமிழ் இயக்கத்திற்கு பங்காற்றியவர். ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

தேவநேயப் பாவாணரின் பாட்டனார் முத்துசாமி தன் மனைவி வள்ளியம்மாளுடன் சங்கரன்கோயில் - திருநெல்வேலி சாலையிலுள்ள பனைவடலி என்னும் ஊரிலிருந்து திருநெல்வேலியில் இருந்து கோயில்பட்டி செல்லும் சாலையிலுள்ள வாகைக்குளம் என்ற ஊரில் சமயப்பணியாற்றி வந்த தோக்கஸ் ( Rev Stokes) என்பவரின் பண்ணையில் தோட்டக்காரராக பணியாற்றினார். அவருக்கு குழந்தை பிறந்த சிலநாட்களிலேயே அவரும் அவர் மனைவியும் மறைந்தனர். தோக்கஸ் துரை அந்தக் குழந்தையை ஞானமுத்து தோக்கஸ் என்று பெயரிட்டு வளர்த்தார். ஞானமுத்து அங்கேயே கல்வி பயின்று சங்கரன்கோயிலில் ஆசிரியரானார். அவருடைய முதல் மனைவி சொக்கம்மாள் இலங்கையைச் சேர்ந்தவர், அவர் இலங்கைக்கே திரும்ப விரும்பி ஞானமுத்துவை பிரிந்து சென்றார். தோக்கஸ் துரை கோயில்பட்டி அருகே உள்ள பாண்டவமங்கலத்தில் உபதேசியாராக இருந்த குருபரம் என்பவரின் மகள் பரிபூரணம் அம்மையாரை ஞானமுத்துவுக்கு மறுமணம் செய்து வைத்தார்.

பெப்ரவரி 7, 1902-ல் ஞானமுத்து ஆசிரியருக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாவது குழந்தையாகவும் நான்காவது மகனாகவும் சங்கரன்கோவிலில் பிறந்தார். இயற்பெயர் தேவநேசன். இவருடைய ஐந்து வயதில் தந்தை இறந்து போனார். தொடர்ந்து அன்னையும் மறைந்தார். தேவநேயர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஆம்பூரில் மணம்முடித்து வாழ்ந்துகொண்டிருந்த தன் அக்காளின் பொறுப்பில் வளர்ந்தார். ஆம்பூர் மிசௌரி இவாஞ்சலிக்கல் லுத்தரன் மிஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் சங்கரன்கோயில் சாலையில் முறம்பு என்னும் இடத்தில் மதப்பணியாற்றி வந்த ரெவெ யங் (Rev Young) என்னும் மதபோதகரின் உதவியால் பாளையங்கோட்டை சி.எம்.எஸ் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். பள்ளியிறுதி முடித்ததும் தேவநேயர் ரெவெ யங் நடத்தி வந்த முறம்பு சீயோன்மலை பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஆம்பூரில் தான் படித்த உயர்நிலைப் பள்ளியிலேயே 1921ல் ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கிருந்துகொண்டு 1924ல் மதுரைத் நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்ப் பண்டிதர் தேர்வு எழுதினார். அதிலுள்ள மூன்று படிநிலைகளில் மூன்றாம் படிநிலை தேர்வை நேரடியாகவே எழுதி இரண்டாம் வகுப்பில் வெற்றிபெற்றார், அவர் மட்டுமே அத்தேர்வில் வென்றிருந்தார்.

திருநெல்வேலி தமிழ்ச்சங்க தனித்தமிழ்ப்புலவர் தேர்வை 1926ல் மூன்றாம் வகுப்பில் வென்றார், வென்றவர் இவர் மட்டுமே. சென்னை பல்கலை கழகத்தில் பி.ஓ.எல் படிப்பை முடித்தார். எம்.ஓ.எல் படிப்புக்கு திராவிடமரபு தோன்றிய இடம் கடல்கொண்ட தென்குமரி நிலம்தான் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தபோது போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அதை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. 1952ல் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தேவநேயப் பாவாணர் தன் அக்கா முடிவுசெய்த எஸ்தர் (எசுத்தர்) என்னும் பெண்ணை முதலில் மணர்ந்தார். நெல்லை அருகே கரிவலம்வந்த நல்லூரின் அருகே உள்ள புறக்கடையான்பட்டி என்னும் ஊரைச்சேர்ந்தவர் அவர். மணவாள தாசன் என்னும் மகன் பிறந்து ஓராண்டுக்குள் எஸ்தர் மறைந்தார். பாவாணர் அதன்பின் தன் அக்காவின் மகளான நேசமணியை 1930ல் மணந்துகொண்டார். நச்சினார்க்கினிய நம்பி, சிலுவைவென்ற செல்வராசன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் ஆகியோர் இவரின் பிள்ளைகள் ஆவர். பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் ஓராண்டிலேயே மறைந்தான். 1963-ல் பாவாணர் காட்பாடியில் சிறிதுகாலம் பணியில்லாமல் இருந்த காலகட்டத்தில் அவர் மனைவி இறந்தார்.

ஆம்பூர் நடுநிலைப்பள்ளி, பெரம்பூர் கலவல கண்ணன் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி, மன்னார்குடி ஃபின்லே பள்ளி ஆகியவற்றில் பணியாற்றினார். மன்னார்குடி பள்ளியில் பொருளியல் நெருக்கடி மிகுந்து வேலையில் இருந்து நிற்கவேண்டியிருந்தபோது தன்னை விட வறுமையில் இருந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்காக வேலையை விட்டார். அதன் பின் பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழாசிரியரானார். 1943 முதல் ஓராண்டுக்காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1944-ல் தொடங்கி 12 ஆண்டுகள் சேலம் நகராட்சிக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். சேலத்தில் பணியாற்றியபோதுதான் பெருஞ்சித்திரனார் தேவநேயப் பாவாணரின் மாணவரானார். 1956 முதல்1961 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார்.

இலக்கியப்பணிகள்

இளமையிலேயே மறைமலையடிகள் மீது தேவநேயப் பாவாணர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரை தமிழை மீட்கவந்தவராக கருதினார். மறைமலையடிகளின் தனித்தமிழியக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஸ்கீட் (Skeat, Walter W) எழுதிய Principles of English Etymology என்னும் நூலைப் படித்த தேவநேயப் பாவாணர் அந்த நூலின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களின் பிறப்பு பற்றி ஆய்வு செய்து "செந்தமிழின் சொற்பிறப்பியல் நெறிமுறை” என்ற கட்டுரையை திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவந்த செந்தமிழ்ச் செல்வி இதழில் 1931 ஜூன் மாதம் எழுதினார். தமிழுக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் சொல் பிறப்பியல் பற்றியும் ஆய்வு செய்தார்.

பாவாணர் தமிழ்மொழி ஆய்வு, தமிழ்ப் பண்பாட்டாய்வு தொடர்பாக 26 நூல்களை எழுதியுள்ளார். 1934-ல் பள்ளியாசிரியராய் இருந்தபோது மாணவர்களுக்காக உரைநடையில் இலக்கண நூல் ஒன்றை வெளியிட்டார். இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, இலக்கணங்களைப் பற்றிய எளிய அறிமுக நூல். கட்டுரை எழுதுவது எப்படி, பிழைகள் இல்லாமல் இலக்கண முறைப்படி எழுதுவது எப்படி என்னும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூலை 1936இல் வெளியிட்டார்.

பழந்தமிழாட்சி (1952), தமிழ்நாட்டு விளையாட்டுகள் (1959) தமிழர் திருமணம் (1956) ஆகிய மூன்று நூல்களும் வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் தொடர்பானவை. தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள் பற்றிய முழுமையான முதல் நூல் இவருடையதுதான். பொதுவாகச் சொல்லின் அமைப்பை வைத்தே வேர்ச்சொல்லைக் கண்டுபிடித்தது மாதிரியே விளையாட்டின் பெயரை வைத்துத் தோற்றத்தை ஆராய்கிறார் விளையாட்டுகளின் தோற்றத்தைப் பழைய இலக்கியங்களில் தேடுவது எனும் முயற்சியை இந்நூலில் காணலாம்.

தமிழரின் திருமணம் என்னும் நூலில் தமிழரின் திருமண நிகழ்வில் ஆரியரின் செல்வாக்கு புகுந்ததையும் தமிழரின் பழைய திருமணமுறையையும் ஆராய்கிறார். இதே நூலில் பாவாணர் நடத்திவைத்த திருமணம் தொடர்பான அனுபவத்தகவல்களும் உள்ளன. பிற்காலத்தில் இந்த நூல் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கிறது. குறிப்பாக ம.பொ.சி. தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் இதை விமர்சித்தார். 1967-ல் வரலாற்றையும் மொழிநூலையும் இணைத்து எழுதப்பட்ட முயற்சி தமிழர் வரலாறு என்ற தலைப்பில் நூலாக வந்தது. குமரிக்கண்டம், தமிழரின் பெருமை, மதி நுட்பத்தை இதில் விளக்குகிறார்.

தமிழர் மதம் என்னும் நூல் (1972) கில்பர்ட் ஸ்லேட்டர் என்ற திராவிடவியல் ஆராய்ச்சியாளரின் கருத்தை ஒத்துச் செல்வது. ஸ்லேட்ட ர் கூறிய While the Aryans were Dravidanised in Culture, the Dravidians were Aryanised in Language என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தமிழர் மதம். தமிழ் இலக்கிய வரலாறு (1979) என்ற நூல், தமிழ் இலக்கியப் பின்னணியைத் தலைக்காலம் (கி.மு. 50000 முதல் கி.மு. 1500வரை), இடைக்காலம் (கி.மு. 1500 முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் (கி.பி. 19ஆம் நூற்றாண்டு), இக்காலம் (கி.பி. 20ஆம் நூற்றாண்டு) எனப் பகுத்துக் கூறுகிறது. தலித் இலக்கியங்களை வரலாறாக எழுதத்தக்கவர் யாவர் என்ற விவாதக் குறிப்பும் இந்நாலில் உள்ளது. இந்நூல் மானுடவியல், மொழிநூல் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களைப் பார்ப்பதாக கூறுகிறது. 1968-ல் தனித்தமிழ்க் கழகம் நிறுவப்பட்டபோது அதன் தலைவராகப் பாவாணர் இருந்தார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றவர்.

ஆய்வுகள்

  • 1944-ல் பாவாணர் எம்.ஓ.எல். ஆய்வுக்காக 'திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே' என்ற தலைப்பில் ஓர் ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
  • 1956-57-களில் பாவாணர் சொல்பிறப்பியல் அகர முதலி குறித்த ஆய்வை முறைப்படி செய்தார். ஆனால் ஆய்வு முழுமை பெறத் தடை இருந்தது.
  • 1930ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் பாவாணர் ஈடுபட ஆரம்பித்தார்.
  • 1940-ல் வெளிவந்த ஒப்பியல் மொழிநூல் பண்டைத் தமிழகம், தமிழரின் தோற்றம் பற்றி விளக்குகிறது.
  • 1944-ல் திராவிடத்தாய் என்னும் நூல் தமிழைத் திராவிட மொழிகளின் தாயாக உருவகித்து, அதை நிலைநாட்டுவதற்காக எழுதப்பட்டது. இதில் பிற திராவிட மொழிச் சான்றுகளும் உண்டு.
  • 1949-ல் சொல்லாராய்ச்சிக் கட்டுரை என்னும் நூல் தமிழ் வடமொழிக்குக் கடன்பட்டதல்ல என்று கூறுவதற்காகவே எழுதப்பட்டது.

விருதுகள்

  • பாவாணர் 1971-ல் 'செந்தமிழ் ஞாயிறு' என்ற பட்டத்தைப் பெற்றார்.
  • 1980-ல் எம்.ஜி.ஆர். இவருக்கு 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தைக் கொடுத்தார்.

மறைவு

ஜனவரி 5,1981 உடல் நலம் சரியில்லாது அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே ஜனவரி 15, 1981-ல் காலமானார்.

நூல்கள்

  • திரட்டு நூல்கள் 12
  • மண்ணில் விண் அல்லது வள்ளுவன் கூட்டுடைமை
  • திருக்குறள் தமிழ் மரபு (1969)
  • தமிழர் வரலாறு
  • வடமொழி வரலாறு
  • இலக்கணக் கட்டுரைகள்
  • தமிழியற் கட்டுரைகள்
  • மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
  • மொழிநூற் கட்டுரைகள்
  • பண்பாட்டுக் கட்டுரைகள்
  • தென்சொற் கட்டுரைகள்
  • செந்தமிழின் சொற்பிறப்பியல் நெறிமுறை - 1938
  • தலைமைத் தமிழ் (தனிச் சொற்கள்; தொகுதிச் சொற்கள்)
  • மறுப்புரை மாண்பு
  • தமிழ் வளம்
  • பாவாணர் நோக்கில் பெருமக்கள்
  • பாவாணர் உரைகள்

ஆங்கிலம்

  • The Manifold Defects of the Madras University Tamil Lexicon (1961)
  • The Primary Classical Language of the World (1966)
  • The Language Problem of Tamilnad and Its Logical Solution என்ற (1967)
  • The Lemurian Language and its Ramifications (1984)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.