வீ. நடராஜன்
வீ. நடராஜன் மலேசியாவில் வரலாற்று ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், அகழ்வாராய்ச்சியாளர், வழக்கறிஞர் என அறியப்படுகிறார். வீ. நடராஜன் மலேசியாவின் வரலாற்றுத் தளமான ‘பூஜாங் பள்ளத்தாக்கு’ குறித்து ஆய்வு செய்ததால் ‘பூஜாங் நடா’ என்றும் மலேசிய வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
வீ. நடராஜன் ஏப்ரல் 10, 1945இல் சுங்கை பட்டாணியில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் வீரையா தேவர், தாயார் பெயர் விஜயலெட்சுமி. வீரையா தேவர் - விஜயலெட்சுமி இணையருக்குப் பிறந்த 8 பிள்ளைகளில் நடராஜன் மூத்த மகன் ஆவார்.
வீ. நடராஜன் தமது ஆரம்பக் கல்வியைச் சுங்கை பட்டாணியில் உள்ள தேசிய வகை இப்ரஹிம் பள்ளியில் பெற்றார். படிவம் 1 முதல் படிவம் 5 வரை இப்ரஹிம் இடைநிலைப்பள்ளியில் கற்றார். பின்னர் ஆறாம் படிவத்தை அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தான் அப்துல் ஹலிம் காலேஜ்ஜில் முடித்தார். வீ. நடராஜன் 1965ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை மலாயா பல்கலைகழகத்தில் கல்வி துறையில் டிப்ளோமாவையும் வரலாற்று துறையில் இளங்கலையும் படித்தார். 1969ஆம் ஆண்டு மலாயா பல்கலைகழகத்திலிருந்து பட்டாரியாக வெளியேறினார். 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் நடராஜன் 1984ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்(Buckingham) பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பயின்று லண்டனில் லின்கன் இன்னில்(Lincoln Inn) வழக்குரைஞராக இருந்தார்.
தனிவாழ்க்கை
வீ. நடராஜன் 1985ஆம் ஆண்டு கமலா(இங் கெம் சொங்) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். நடராஜன் - கமலா இணையருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். நடராஜன் 1969ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இப்ரஹிம் இடைநிலைப்பள்ளியில் படிவம் 6 மாணவர்களுக்கான வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1977இல் ம.இ.காவின் மூலம் அரசியலில் ஈடுபட்டார். 1979ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். ஆசிரியர் பணியிலிருந்து விலகிய நடராஜன் 1984ஆம் ஆண்டு சட்டத்துறை பயின்று வழக்கறிஞராகச் செயலாற்றினார். நடராஜன் 2011ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள தமது வழக்கறிஞர் அலுவலத்தைத் தன் மகனிடம் ஒப்படைத்தார்.
பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வு
நடராஜன், 1961ஆம் ஆண்டு நடராஜன் 4ஆம் படிவம் பயிலும்போது, தமது வரலாற்று ஆசிரியரின் தூண்டுதலினால் பூஜாங் பள்ளத்தாக்கைக் காணச் சென்றார். அதன் வழி, நடராஜனுக்கு பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த ஆர்வம் ஏற்பட்டது. 1967ஆம் ஆண்டு மலாயா பல்கலைகழகத்தில் வரலாற்று துறையில் இறுதியாண்டு பயிலும்போது நடராஜன் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த ஆய்வினை தமது இறுதியாண்டிற்கான ஆய்வுக்கட்டுரையாகத் தயாரித்துப் படைத்தார். 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமது மாணவர்களைப் பூஜாங் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்று, பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்து உரையாற்றினார். 1970ஆம் ஆண்டு கெடா வரலாற்று இயக்கம், கெடா சுற்றுலா துறை போன்றவற்றில் இணைந்து, பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்து உரைகள் வழங்கினார்.
மலேசியாவில் இந்தியர்களின் நிலையைக் குறித்துத் தொடர்ந்து தவறான தகவல்கள் பரவி வருவதைக் கேட்ட நடராஜன், 2010யில் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். 2011ஆம் ஆண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சி பிரிவின் தலைமை பேராசிரியரைச் சந்தித்துத் தமக்கு வேண்டிய தகவல்களை நூல்நிலையத்தின் மூலம் பெற்றார். பின்னர் மலாய் கலாச்சார மற்றும் நாகரீகம் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு மையம், யு.கே.எம். பல்கலைக்கழகத்தில் இருப்பதை அறிந்த நடராஜன், அத்துறையின் பேராசிரியரின் துணையோடு இன்னும் சில தகவல்களைத் திரட்டினார். 2011ஆம் ஆண்டு ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ என்ற தலைப்பில் பூஜாங் பள்ளத்தாக்குப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ என்ற நூல் ‘சோழன் வென்ற கடாரம்’ என்ற தலைப்பில் தமிழில் எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
பூஜாங் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு
டிசம்பர் 1, 2013-ல் பூஜாங் பள்ளத்தாக்கின் தளமான சுங்கை பத்து தோட்டத்தில் அமைந்துள்ள சண்டி ஒரு வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தால் உடைக்கப்பட்டதை அறிந்த நடராஜன், தமது நூலில் உள்ள தகவல்கள் மற்றும் புகைபடங்களை ஆதாரமாகக் கொண்டு அத்தளத்தினை அழித்தவர்கள் மீது புகார் செய்தார். நடராஜனின் அந்த நடவடிக்கையினால் பூஜாங் பள்ளத்தாக்கிள் உள்ள தளங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் ஈடுபாடு
1977இல் ம.இ.காவின் முன்னாள் தலைவர் சுப்ரமணியத்தின் கோரிக்கையை ஏற்று, நடராஜன் ம.இ.கா.வில் இணைந்தார். 1979ஆம் ஆண்டு சாமிவேலு வென்ற பிறகு, நடராஜன் ம.இ.காவிலிருந்து விலகினார். பின்னர், பிபிபி கட்சியில் சேர்ந்தார். இறுதியாக தமது 65ஆவது வயதில் அரசியலிருந்து விலகினார்.
பொதுச் சேவை
1970இல், நடராஜன் தமது 25வது வயதில் கெடாவில் தேசிய ஆசிரியர் பணிக்கழக துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அங்கு தமிழ்ப் பள்ளிகளிருந்து வெற்றி பெற்ற இந்திய பிரதிநிதிகள் இல்லாததால் நடராஜன் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். நடராஜன் இரவு நேர வகுப்புகளை இந்திய மாணவர்களுக்காக ஆரம்பித்தார். பாழடைந்த, பழைய செயின்ட் தெரெசா பள்ளியில் இரவு நேர வகுப்புகளை நடராஜன் சில ஆசிரியர்களின் துணையோடு நடத்தினார். படிவம் 6இல் இந்திய மாணவர்கள் இணைய இந்த வகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.
2019ஆம் ஆண்டு சுங்கை பட்டாணியில் தமது தந்தை கட்டிய சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவராகச் செயலாற்றினார். சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் தேவைக்காகப் பண உதவி பெற்றுத் தருதல் போன்றவற்றை நடராஜன் செய்கிறார்.
பங்களிப்பு
நடராஜன் தொகுத்த நூலினால் பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள கலை பொருட்களும் வரலாற்றுச் சின்னங்களும் நூலுறுவில் வரலாற்று ஆவணங்களாக நிலைத்துள்ளன.
விருது
- டர்ஜா டத்தோ’ செத்தியா டிராஜா கெடா (Darjah Dato' Setia Diraja Kedah)
- சமாதான நீதிபதி (Justice of Peace)
நூல்கள்
- ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ (2013)
- ‘சோழன் வென்ற கடாரம்’ (2013)
உசாத்துணை
மலேசிய முத்தமிழ்ச் சான்றோர்கள் தொகுதி 2, 2019.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.