மயில் இராவணன் கதை

From Tamil Wiki
Revision as of 17:27, 22 October 2022 by Navingssv (talk | contribs)

மயில் ராவணன் கதை தமிழகத்தில் வழக்கில் உள்ள இராமாயண நாட்டார் கதை. இராவணனின் தம்பி பாதாளத்தில் வாழும் மயில் ராவணன் இராம, லட்சுமணனைக் கடத்தி வந்து காளிக்குப் பலிக் கொடுத்ததாகவும், அனுமன் விஸ்வரூபம் கொண்டு பாதாள உலகம் சென்று இருவரையும் மீட்டு திரும்பியதாகவும் அமைந்த கதை. அனுமனுக்கு திமிதி என்னும் மச்சகன்னியில் பிறந்த மச்சவல்லபன், ராவணனின் தங்கை மகன் நீலமேகன் போன்றவர்களின் உபகதைகளையும் உள்ளடக்கியது.

பார்க்க: மச்சவல்லபன் போர்

கதை

இலங்கையில் ராவணனுடன் நிகழ்ந்த போரில் ராமன் அதிகாயன், மகாமாயன், நிகும்பன், அகும்பன் ஆகியோரை வீழ்த்தினான். ராவணனன் இதனையறிந்து பெரும்படையைத் திரட்டிக் கொண்டு ராமனுடன் போர் செய்ய யுத்தக் களத்திற்கு வந்தான். ராவணனுக்கும், ராமனுக்கும் போர் நிகழ்ந்தது. ராவணனின் அம்புகள் அனைத்தையும் தாண்டி ராமன் ராவணப் படைகளை நிர்மூலமாக்கினான். ராவணன் தனியனாக அரண்மனைத் திரும்பினான். அரண்மனையில் அமைச்சர்களிடம் நடந்ததைக் கூறினான். அதில் அமைச்சர்கள் ராவணனிடம், “பாதாளத்தில் இருக்கும் உங்கள் ஒன்றுவிட்ட தம்பி மயில் ராவணன் உள்ள வரை நீங்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும். அவன் ராமன், லட்சுமணன் இருவரையும் காளிக்கு பலிக் கொடுத்து வெல்வான்” என்றனர்.

அப்போது தான் நினைவு வந்தவனாய் தசகண்ட ராவணன் தம்பி மயில் ராவணனை அழைத்தான். அண்ணன் அழைத்ததும் பாதாள உலகிலிருந்து இலங்கைக்கு வந்தான் மயில் ராவணன். இலங்கை நகர் சிதைந்து கிடப்பதைக் கண்டு அண்ணனிடம் நட்ந்ததை வினவினான். தசகண்ட ராவணன் நடந்ததைக் கூறியதும், “கவலையை விடு நாம் இச்சிறுவர்களுக்காக அஞ்ச வேண்டியதில்லை. இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களை காளிக்குப் பலிகொடுத்து மீள்வேன்” எனச் சொல்லி அண்ணனிடம் ஆசிப் பெற்று பாதாள இலங்கைக்குச் சென்றான். அவனது அமைச்சனைக் கலந்தாலோசித்தான்.

மயில் ராவணன் இலங்கைக்கு வந்துச் சென்றதை சீதைக்கு காவல் நின்ற விபீஷணனின் மகள் திரிசடை அறிந்தாள். அவள் வாயு தேவனிடம் நடந்ததைக் கூறினாள். “மயில் ராவணன் ராம, லட்சுமணனை பதினைந்து நாழிகைக்குள் பாதாள இலங்கைக்குக் கொண்டுச் செல்லும் ஆற்றல் கொண்டவன். அவன் இருவரையும் சிறை செய்வதாக சபதம் கொண்டிருக்கிறான். இதனை ராம, லட்சுமணனிடம் சொல்லிவிடு” என்றாள். வாயு தேவன் அவற்றை விபீஷணனிடம் சொன்னான்.

விபீஷணன் அனைத்தையும் ராம, லட்சுமண, அனுமனிடம் கூறினான். பக்கத்திலிருந்த சுக்ரீவன் மயில் ராவணனைப் பற்றிச் சொல்லும்படி விபீஷணனிடம் கேட்டான்.