first review completed

குமிழி ஞாழலார் நப்பசலையார்

From Tamil Wiki
Revision as of 20:01, 10 October 2022 by Logamadevi (talk | contribs)

குமிழி ஞாழலார் நப்பசலையார்,  சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கிய தொகை நூலான அகநானூறுவில்  இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

குமிழி ஞாழலார் நப்பசலையார், குமிழி என்னும் ஊரில் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காதலினால் மகளிரடத்தில் ஏற்படும் பசலை என்பதை சிறப்புற உரைப்பதால் நல்பசலையார் என்று குறிப்பிட, அது,  நப்பசலையார் என மருவியிருக்கக்கூடும்.  இவர் ஒரு பெண் புலவர். இவர், “குமுழி ஞாழல் நப்பசையார்” என்றும் அழைக்கப்பட்டார். குமிழி ஞாழலார், அகநானூற்றில் ஒரு பாடல் (பாடல்: 160) மட்டும் பாடியுள்ளார்.

பாடல்

குமிழி ஞாழலார் நப்பசலையார் பாடிய ஒரு பாடல் சங்க காலத்து நூலான அகநானூறுவில் 160-வது பாடலாக  இடம் பெற்றுள்ளது.

அகநானூறு 160

ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?

நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.

அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்

குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த

கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை

பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:

முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல

வாவு உடைமையின் வள்பின் காட்டி,

ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி

செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி

நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,

பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,

இர வந்தன்றால் திண் தேர்; கரவாது

ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்

அரவச் சீறூர் காண,

பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.

எளிய உரை;

நிறைசூலுற்ற ஆமை, அடும்பினைக் கொடிசிதைய இழுத்து வளைந்த கழியிடத்து வெள்ளிய மணல் மேட்டின் பக்கத்தே சேர்த்து (அதன் கண்),  யானைக்கொம்பினாற் செய்த வட்டின் வடிவமுடைய புலால்நாறும் முட்டையை,   அதனிடத்தினின்று குஞ்சு வெளிப்படும் அளவு,  பாதுகாத்திருக்கும்  சோலையையுடைய கடற்கரைத் தலைவனது வலிய தேரானது, அம்பின் வேகம்போலச் செல்லுதலைப் பழகிய அழகிய நடையினையுடைய குதிரைகள், தாற்றினால் குத்தப்பெறின் வேகம் அளவு கடத்தலை அஞ்சி,  கடிவாளத்தினால் குறிப்பிக்க, மெல்ல வரவு உடைமையின் - மெல்லத் தாவிச் செல்லுதல் கொண்டமையின், செழுமை வாய்ந்த நீரினையுடைய குளிர்ந்த கழியினைக் கடக்குங்கால், அத்தேர் உருளையின் கூரிய முனையால் அறுக்கப்பெற்ற பொதிந்த அரும்புகளையுடைய நெய்தல், பாம்பின் மேலேதூக்கிய தலையைப்போல வாடி மேலெழ, இதுகாறும் இராக்காலங்களில் வந்து கொண்டிருந்தது; இன்று அத்தேர்) பாயும் குதிரைவேகத்தாற் சிறப்புற்று, மறையாமல், ஒல்லென ஆரவாரம்செய்யும் ஏவல் இளையரொடு, வலிய வாயினாலே அலராகிய ஒலியைச்செய்யும் சிறிய ஊர்ப் பெண்டிர் காண பகலிலே வந்தது; (அதனால்); எனது நிலையில்லாத நெஞ்சம் நடுங்கியது, அது இரங்கத்தக்கது, ஒடுங்கிய கரியகூந்தலையுடைய தோழியே!  நினக்கும் அவ்வாறு நெஞ்சம் நடுங்கியதோ?

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.