under review

நபிமொழி மாலை

From Tamil Wiki
Revision as of 17:40, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நபிமொழி மாலை (பதிப்பு: 1977) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்

வெளியீடு

கா. அப்துல்கபூர், 1976 - 80-ல், கும்பகோணத்தில் உள்ள அல்-அமீன் என்னும் உறைவிடப்பள்ளியில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியபோது நபிமொழி மாலை நூலை இயற்றினார். சிங்கப்பூரில் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்நூலை, சென்னை, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள திரீயெம் பப்ளிஷர்ஸ் நிறுவனம், 1977-ல் பதிப்பித்தது.

கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை - 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலிலும் நபிமொழி மாலை பனுவல், அப்துல்கபூர் இயற்றிய பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. இந்நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

நபிமொழி மாலை நூல், நபிகள் நாயகத்தின் நல்லுரைகள் நானூற்றை உள்ளடக்கியது. இந்நூல், இயலுக்கு நூறு பாடல்கள் வீதம் நான்கு இயல்களைக் கொண்டது. அவை,

  • அருளியல்
  • பொருளியல்
  • வாழ்வியல்
  • ஒழுக்கவியல்

ஒவ்வொரு இயலிலும் பத்து அதிகாரங்கள் இடம்பெற்றன.

அருளியல் அதிகாரங்கள்
  • திருக்குர்ஆன்
  • நபிமொழி
  • இறைஉணர்வு
  • இறை புகழ்
  • தொழுகை
  • நோன்பு
  • ஈகை, ஜக்காத், ஹஜ்
  • இறைஞ்சல் இயல்பு
  • இறைஞ்சல் பொது
  • இறைஞ்சல் சிறப்பு
பொருளியல் அதிகாரங்கள்
  • கல்வி - அறிவு
  • அறிஞர்
  • பொருளீட்டல்
  • செல்வமும் வறுமையும்
  • வணிகமும் வணிகரும்
  • ஈகை
  • ஆட்சி
  • பிறர்நலம் பேணல்
  • ஆகா வருவாய்
  • ஈமான் - மூமீன்
வாழ்வியல் அதிகாரங்கள்
  • பெற்றோரும் பிள்ளைகளும்
  • பெண்கள்
  • திருமணம்
  • விருந்தினர் - அயலார்
  • உணவு
  • உணவுமுறை
  • உணவின் ஒழுங்குகள்
  • உள்ளமும் உடலும்
  • உடையும் உறையுளும்
  • மருந்து
ஒழுக்கவியல் அதிகாரங்கள்
  • நற்குண நற்செயல்
  • நல்லவை
  • தீயவை
  • இனியவை
  • இன்னாதவை
  • கொடியவை
  • கடிபவை
  • ஆய்க
  • உணர்க
  • தெளிக

ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம், நபிமொழி மாலை நூலில் நானூறு பாடல்கள் இடம் பெற்றன.

உள்ளடக்கம்

நபி மொழி மாலை நூல், இஸ்லாமிய வேதமான திருக்குர் ஆன் மற்றும் நபிகளின் ஹதீஸ் எனப்படும் அறவுரைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. பிஞ்சுநெஞ்சங்கள் மனனம் செய்வதற்கு ஏதுவாக தான் இம்மாலை இலக்கியத்தை உருவாக்கியதாக கா.அப்துல்கபூர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.

நபி மொழி மாலையில் நேர்மையாக, உண்மையாக, அறவழியில் வாழ்வது, கல்வி கற்பது, ஒழுக்கத்துடன் வாழ்வது, நேர்மையாகப் பொருளீட்டுவது, பிறருக்கு உதவுவது, தனித்து உண்ணாமல் ஒன்றாய்க் கூடி உண்பது, வியர்வை உலரும் முன் அதற்கான கூலியை அளிப்பது, குர் ஆன் வழி நடப்பது, இறை வணக்க வழிபாடுகளை முறையாகச் செய்வது, புனித யாத்திரையை மேற்கொள்வது போன்றவை பற்றிய செய்திகள் இடம்பெற்றன.

பாடல்

நபிமொழிகள்

திருமறை ஓதுக மானிடரே
தீர்ப்பு நாளில் மானிடர்க்காய்
பரிந்துரை பகரும் அறிவீரே
பகரும் அண்ணல் நபிமொழியாம்

பயனில் கல்வி ஈகையறப்
பல்கிய செல்வம் போலாகும்
உயரிய உரைகள் பொழிகின்ற
உத்தமர் அண்ணல் நபிமொழியாம்

திடமாய் அறத்தின் வழிநின்று
திரவியம் தன்னைத் தேடுவது
கடமையில் உயர்ந்த கடமையென
கவினே சிறக்கும் நபிமொழியாம்

வாய்மை வழுவா முறையோடு
வருவாய் தேடி வாழ்வோரை
தூய்தாம் இறைமிக விரும்பிடுவான்
துன்பம் போக்கும் நபிமொழியாம்

நாற்பது நபிமொழி நினைவாக்கி
நலமாய் அவ்வழி நடந்திடுவோர்
ஏற்புடை உலமாக் கூட்டத்தில்
இருப்பார் என்பது நபிமொழியாம்

அறிவைத் தேடல் தொழுகையினும்
அரிய நோன்பு உயர்ஹஜ்ஜூ
இறையின் பாதைப் போரினுமே
ஏற்றம் என்பது நபிமொழியாம்

மதிப்பீடு

நபிமொழி மாலை இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இஸ்லாமியர்கள் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களையும் பின்பற்றி எப்படிச் சரியாக வாழ்வது என்ற செய்திகளைக் கூறும் அற வழி நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
  • நபிமொழி மாலை, கா. அப்துல்கபூர், திரீயெம் பப்ளிஷர்ஸ், அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை, முதல் பதிப்பு: 1977
  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2025, 10:16:51 IST