புதுமைப்பித்தன் தழுவல் விவாதம்

From Tamil Wiki
Revision as of 16:03, 3 August 2025 by Jeyamohan (talk | contribs)

புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் ( ) புதுமைப்பித்தனின் பலகதைகள் தழுவல்களே என்று விமர்சகர்கள் உருவாக்கிய குற்றச்சாட்டும் அதையொட்டி புதுமைப்பித்தன் ஆய்வாளர்கள் அளித்த விளக்கமும் புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் எனப்படுகிறது.

விமர்சகர் சிட்டி புதுமைப்பித்தனின் கதைகளில் பல மாப்பசான் முதலிய பிரெஞ்சு ஆசிரியர்களின் கதைகளின் தழுவல்கள் என்ற விவாதத்தை எழுப்பினார். தமிழ்படித்த பெண்டாட்டி, பயம், நொண்டி, நல்ல வேலைக்காரன், கொலைகாரன் காய், அந்த முட்டாள் வேணு ஆகியவை மாப்பசான் கதைகளின் தழுவல்கள் என்றும் பித்துக்குளி, கொன்றசிரிப்பு ஆகியவை ராபர்ட் பிரௌனிங் கதைகளின் தழுவல்கள் என்றும் கூறினார். புதுமைப்பித்தன் இந்த தழுவல்கதைகளை தழுவல்கள் என்று சொல்லியே வெளியிட்டார் என்றும், ஆகவே அவை இலக்கிய மோசடிகள் அல்ல என்றும், அவை அவர் பெயரிலும் வெளியாகவில்லை என்றும் வேதசகாயகுமார் விளக்கினார். புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின் ஸ்டார் பிரசுரம் அவருடைய கதைகளை பல தொகுதிகளாக வெளியிட்டபோது இந்தக் கதைகளும் புதுமைப்பித்தன் பெயரில் சேர்க்கப்பட்டமையால்தான் அவர் மூலம் சுட்டாமல் தழுவி எழுதினார் என்னும் குற்றச்சாட்டுக்கு இடம் அமைந்தது என்று வேதசகாயகுமார் கூறினார். ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நூல்களிலேயே புதுமைப்பித்தன் எழுதிய தழுவல் கதைகள் அவர் பெயருடன் சேர்க்கப்பட்டன என்றும், ஒரே ஒரு தழுவல் கதையை மட்டும் புதுமைப்பித்தன் என்ற பெயரில் வெளியிட்ட புதுமைப்பித்தன் அதில் மாப்பசான் கதையின் தழுவு என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருந்தார் என்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.