கடுந்தொடைக் காவினார்
கடுந்தொடைக் காவினார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கடுந்தொடைக் காவினார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
கடுந்தொடைக் காவினார் பாடிய பாடல் அகநானூறில் 109 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டும் பொருட்டு தலைவியை பிரிந்து பாலை நிலத்தில் பயணிக்கும் தலைவன், அவ்வழிப்பாதையின் கொடுமையை கண்டு தனக்கு தானே ஆறுதல் கூறி கொள்வதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
ஆடவர் பொருளீட்ட செல்லும் வழியின் முற்காலத்தின் வளமும் பின் அது பாலையாக மாறிய காட்சியும் காட்டப்பட்டு, அங்கு வாழும் ஆறலைக் கள்வரின் வாழ்க்கை முறையும் சொல்லப்படுகிறது.
- ஓங்கி உயர்ந்த காட்டின் கால்கள் போல் அமைந்த நீண்ட மரங்களை கொண்ட சோலை வனக்காடு அது. நீண்ட தந்தமுடைய யானைகள் காட்டு மரங்களை முறித்து தழைகளை உண்ணும். மரக்கிளைகளில் அணில்கள் ஒன்றுடனொன்று தாவி விளையாடும். அப்பகுதி வறண்டு போய்விட்டது.
- வறட்சியினால் அங்கே குடியேறிய ஆறலை கள்வர், அவ்வழி செல்வோரை ஒளிரும் வெண் முனை கொண்ட அம்புகளை ஏவி கொன்று பொருட்களை கவர்ந்து செல்வர். கள்வரால் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் அமைந்த பதுக்கைகள் வழி நெடுக காணப்படும். அப்பதுக்கைகள் அவ்வழியில் செல்வோருக்கு கள்வரிடம் இருந்து பதுங்கி மறைந்து கொள்ளும் இடங்களாகவும் பயன்படும்.
- கள்வர்கள் கைப்பொருள் இல்லாத வழிப்போக்கர்களை உயிருடன் விட்டுவிட்டால் அதற்கு தண்டமாக யானையின் தந்தத்தையும் புலி தோலையும் மன்னனுக்கு வரியாக செலுத்த வேண்டும். அத்தகு கொடும் வழியில் சென்று ஆடவர் பொருளீட்டல் வேண்டும்.
பாடல் நடை
அகநானூறு - 109
- திணை: பாலை
- கூற்று: இடைச்சுரத்துத்தலைமகன்தன்நெஞ்சிற்குச்சொல்லியது.
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணகத்தார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- அகநானூறு - 109:Tamilvu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.