being created

சமண சமயப் பெண் துறவிகள்

From Tamil Wiki
Revision as of 23:21, 23 August 2022 by ASN (talk | contribs) (Para Added)

துறவு நெறியைப் போற்றும் சமயம் சமணம். சமண சமயத் துறவியர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் சமணப் பெண் துறவியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சமண சமயப் பெண் துறவியர்களின் பொதுப் பெயர்கள்

நந்திய பிண்டி வாமன்

நன்னெறி வழாது நோற்பாள்

கந்தியே அவ்வை அம்மை

கன்னியே கெளந்தி என்ப

- எனச் சூடாமணி நிகண்டு பெண் துறவியின் பொதுவான பெயர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. “பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்” என்கிறது பிங்கல நிகண்டு. சமண சமயப் பெண் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்கனைகள் அல்லது கந்தியார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி நீலகேசியில் குறிப்புகள் காணப்படுகின்றன. ‘குரத்தி' என்ற பெயரும் சமணப் பெண் துறவிகளுக்கு உண்டு. குரு என்பதன் பெண்பாற் பெயரே குரத்தி.

“சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை

நாமங் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்துத் தவப்பெண்”

- என்கிறது கயாதர நிகண்டு.

தமிழ் இலக்கியங்களில் சமணப் பெண் துறவிகள்

தமிழ் இலக்கியங்களில் சமணப் பெண் துறவியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இச்சமணப் பெண் துறவியர், தலையை மழித்து வெண்மை நிற ஆடையை உடுத்தியிருந்தனர். இவர்கள் சமய, இலக்கண, இலக்கிய நூல்களை நன்கு கற்றவர்களாக இருந்தனர். நாட்டின் பல இடங்களுக்கும் பயணம் செய்து சமண சமயம் சார்ந்த உண்மைகளை, அறக்கருத்துக்களை மக்களுக்கு போதிப்பதை இவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.

சிலப்பதிகாரம்: கவுந்தி அடிகள்

சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கவுந்தியடிகள், ஒரு சமணசமயப் பெண் துறவியாவார். கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டு மதுரைக்குச் செல்லுமுன் இவரைச் சந்திக்கின்றனர்.

“ஒரு மூன் றவித்தோன் ஓதிய ஞானத்

திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா

காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு

நாமம் அல்லது நவிலா தென்னா

ஐவரை வென்றோன் அடிஇணை அல்லது

கைவரக் காணினும் காணா என்கண்”

- என்ற பாடலும்,

திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்

செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து

கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த

ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி”

- என்ற பாடலும், மற்றும் காப்பியம் முழுவதும் இடம்பெற்றிருக்கும் சமண சமய அறக் கருத்துக்களும் இவர் சமணம் சார்ந்த துறவி என்பதை உணர்த்துகின்றன.

நீலகேசி - நீலகேசி

நீலகேசி காப்பியத்தில் இடம் பெறும் நீலகேசி, முனிசந்திர முனிவரின் அருளாற்றலால் பேய் வடிவம் நீங்கி, ஞானம் பெற்றுச் சமண சமயம் சேர்கிறாள். பின் தனக்கு ஞானமளித்த குருவிற்கும், அருக தேவனுக்கும் நன்றியைச் செலுத்தும் வகையில் பல நாடுகளுக்கும் பயணப்பட்டு பலரோடு வாதித்து வென்று சமணநெறியைப் பரப்புகிறாள்.

யசோதர காவியம் - அபயமதி

அபயமதி, அபயருசி இருவரும் உடன் பிறந்தவர்கள். அபயமதி ஒரு பெண் துறவி. இவர்கள் முற்பிறவியில் ‘மாக்கோழி’யைப் பலியிட்ட காரணத்தால் பல்வேறு பிறவிகள் எடுத்து இறுதியில் ஞானம் அடைந்து துறவியாகின்றனர். இவர்களது வரலாற்றைக் கேட்ட மன்னன் மாரிதத்தன் முதலானோரும் துறவியாயினர்.

சீவக சிந்தாமணி - பம்பை

சீவக சிந்தாமணியில் இடம் பெறும் சமணப் பெண் துறவி பம்பை. இவர் பெண் துறவியர்கள் தங்கும் சமணப்பள்ளிக்குத் தலைவியாய் இருந்தார்.இவர் தாமரையின் ’அகவிதழ்’ போல அமர்ந்து அறவுரை கூற, ஏனைய துறவியர், ‘புறவிதழ் ' போல அமர்ந்து கேட்டதாகத்  திருத்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய சமணப் பள்ளியில் தான் சீவகனின் தாய் விசயமாதேவியும், வளர்ப்புத் தாய் சுநந்தையும், மேலும் ஆயிரம் பெண்டிரும் துறவியாயினர்.

நாககுமார காவியம் - பிரிதி தேவி

பிரிதி தேவி, நாககுமார காவியத்தில் இடம் பெறும் பெண் துறவி. இவர், சயந்தர மன்னனின் துணைவி. இவர் ஸ்ரீமதி என்னும் ஆர்யாங்கனையை வணங்கித் துறவு பூண்டார்.

பிரிதி தேவியின் மருமகளான இலக்கணை என்பவரும், துறவு மேற்கொண்டதாக நாககுமார காவியம் குறிப்பிடுகிறது.

இது பற்றி,

“கமல மல ராணிகர் நற் காட்சியிலக் கணையும்

துமிலமனைப் பதுமையெனுந் துறவாடி பணிந்தாள்”

- என்று கூறுகிறது.

பதுமஸ்ரீ என்னும் ஆர்யாங்கனையை வணங்கி, ’இலக்கணை’ துறவு மேற்கொண்டாள்.

மேருமந்தர புராணம் - இராமதத்தா தேவி

இவர் மேருமந்தர புராணத்தில் இடம் பெறுகிறார். சாந்தமதி, ஹிரண்யமதி என்னும் இரு ஆர்யாங்கனைகளின் அறவுரையால் துறவு பூண்டார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.