being created

சிந்தாமணி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:48, 22 August 2022 by ASN (talk | contribs) (Para Added, Images Added)
சிந்தாமணி இதழ்

பெண்கள் நலனை முன்னிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களுக்காகவே நடத்தப்பட்ட இதழ் ‘சிந்தாமணி’ இதன் ஆசிரியர் வி. பாலம்மாள். 1924-ம் ஆண்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டது.

வி. பாலம்மாள்

பதிப்பு, வெளியீடு

1924-ல் சிந்தாமணி இதழ் தொடங்கப்பட்டது. இதழின் நோக்கமாக பாலம்மாள், “நம் தமிழ்நாட்டுச் சகோதரிகளின் அபிவிருத்தியை முக்கியக் காரணமாகவும் மற்ற விஷயங்களைப் பொதுவாகவும் உத்தேசித்து இத்தமிழ் மாதப் பத்திரிகையை வெளியிட முன்வந்திருக்கிறேன். அவசியமான சகலவிஷயங்களும் இதிலடங்கியிருக்கும் என்ற காரணம் பற்றி இதற்குச் சிந்தாமணி என்று பெயரிடலாயிற்று. சிந்தாமணியில் பெண்கல்வி, மாணவர் முன்னேற்றம், தொழிலாளர் நிலைமை, நீதிமொழிகள், சுகாதாரம், நவீனக் கதைகள், புராண ஆராய்ச்சி முதலிய பலவிஷயங்களும் வெளிவருமாகையால் தமிழ்நாட்டிலுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் என் முயற்சியை ஆதரித்து என்னைக் கௌரவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிந்தாமணி - ஏப்ரல் 1926 இதழ்

உள்ளடக்கம்

நூலின் முகப்புப் பக்கத்தில், “தமிழ் நாட்டுப் பெண்மணிகளின் முன்னேற்றத்தை முக்கியமாகக் கொண்டு வெளிவரும் ஓர் உயர்தர மாதாந்தத் தமிழிப் பத்திரிகை” என்ற குறிப்பு காணப்படுகிறது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘மலர்’ என்பதும், மாதத்தைக் குறிக்க ‘இதழ்’ என்பதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பாரதியாரைப் போலவே பாலம்மாளும் சந்தாத் தொகையை வெவ்வேறு வகையில் நிர்ணயித்துள்ளார்.

மகாராஜாக்களுக்கு வருஷ சந்தா - ரூபாய் 50/-

ஜமீந்தார்களுக்கு வருஷ சந்தா - ரூபாய் 30/-

போஷகர்களுக்கு வருஷ சந்தா - ரூபாய் 25/-

நன்கொடையாளருக்கு வருஷ சந்தா- ரூபாய் 15/--

அபிமானிகளுக்கு வருஷ சந்தா - ரூபாய் 10/-

உள்நாடுகளுக்கு வருஷ சந்தா - ரூபாய் 5/-

வெளிநாடுகளுக்கு வருஷ சந்தா - ரூபாய் 6/-

முழுக்க முழுக்க பெண்களின் நலன் சார்ந்து வெளியான இவ்விதழில், பெண்களுக்குக் கல்வி தேவை என்பதை வலியுறுத்திப் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பெண்கல்வி, பெண்கல்வியின் அவசியம், தற்காலப் பெண் கல்வியில் சீர்திருத்தம், கட்டாயக் கல்வியும் பெண் மக்களும், பெண் மக்களுக்கு எத்தகைய கல்வி தேவை, பெண்கல்வி அத்தியாவசியம் எனப் பல தலைப்புகளில் ஆகஸ்ட் 1924 முதல் ஆகஸ்ட் 1927 வரை தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

கட்டுரைகளோடு கூடவே இதழில் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பின் இந்தச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘கற்பக மலர்’ என்ற பெயரில், கற்பகமலர்-1, கற்பகமலர்-2, கற்பகமலர்-3 என்று தனித் தனி தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. தமிழர்கள் வசித்த வெளிநாடுகளிலும் ‘சிந்தாமணி’ இதழுக்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது என்பதை வாசகர் கடிதங்கள், கட்டுரைகள் காட்டுகின்றன.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.