under review

தாசில்தார் நாடகம்

From Tamil Wiki
Revision as of 20:57, 13 August 2022 by ASN (talk | contribs) (Link Created)
தாசில்தார் நாடகம்

'தாசில்தார் நாடகம்' சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியாரால் எழுதப்பட்ட நூல். இது 1868-ல் அச்சானது. தாசில்தார், கணக்குப் பிள்ளை, மணியக்காரர் முதலானோரின் ஊழல்களை முதன் முதலில் மக்களுக்கு விரிவாக வெளிப்படுத்திய நாடக நூல் இது.

பதிப்பு, வெளியீடு

மக்கள் சிலரிடையே நிலவி வந்த ஒழுக்கக் கேடுகளைக் கண்டு மனம் வருந்திய காசி விஸ்வநாத முதலியார், அவர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான கருவியாக நாடகங்களைப் பயன்படுத்தினார். முதலில் ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தை எழுதியவர், அடுத்து ‘தாசில்தார் நாடகம்’ என்ற படைப்பை வெளியிட்டார். இது 1868-ல் அச்சானது. இந்த நாடக நூலில் வரும் எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே உள்ளன.

நாடகத்தின் நோக்கம்

இந்த நாடகத்தின் நோக்கம் குறித்து காசி விஸ்வநாத முதலியார், நூலின் முகவுரையில், “சிலர் ஒரு எருமையானது தண்ணீர் குடிக்கப் போன குட்டையைக் கலக்கிச் சேறாக்கித் தன்னுடலெலாஞ் சேற்றைப் பூசிக்கொண்டு நடக்கிற வழியெலாஞ் சேறாக்கி, வழியிற் போகிறவர்கள் வருகிறவர்கள் பேரிலுஞ் சேற்றைப் பூசித் தன்னைக் கட்டுகிற கொட்டத்தில் – கட்டுத்தறி – புல் – இதுகளையெல்லாஞ் சேறாக்கி – கட்டிப் புல் போட வந்த தன் எஜமானனுக்குஞ் சேறு பூசி வைப்பது போலக் கிடைத்த உத்தியோகத்தில் பண ஆசையினால் லஞ்சம் வாங்க ஆரம்பித்துத் தங்களுடைய பேர்களையும் துரைத்தனத்தார்களுடைய பேர்களையும் கெடுப்பதுமல்லாமல் அநேக அக்கிரமங்களுக்கு உட்பட்டு அநேக ஜனங்கள் அநியாயமும் துன்பமும் நஷ்டமும் அடையும்படி செய்து வருகையால் அவைகளைப் பல விவகாரங்களிலும், அவரவர் நடத்தைகளிலுமறிந்தும் அனுபவமுடைய அநேகராலும் நொந்தவர்களாலும் சொல்லக் கேட்டும் உணர்ந்தவனா யிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தாசில்தார் , முன்சீப் , போலீஸ் , கோயில் குருக்கள் , கோயில் தர்மகர்த்தா, பிராமணர்கள் , கணக்குப்பிள்ளை முதலானோருடைய ஊழல்களையும் , “ஜமாபந்தி” நடக்கும்போது நடக்கும் தில்லுமுல்லுகளையும் இந்நாடகத்தில் காசி விஸ்வநாத முதலியார்  எடுத்துக்காட்டியுள்ளார் . அது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த எண்ணியே இந்த நாடகத்தை எழுதியுள்ளார்.

இதன் இரண்டாம் பதிப்பை, காசி விஸ்வநாத முதலியாரின் மகன் சோமசுந்தர முதலியார் தனது ‘ஸ்டார் ஆஃப் இந்தியா பிரஸ்’ மூலம் வெளியிட்டுள்ளார்.

நூல் அமைப்பு

வசனமும் பாடல்களும் கொண்டதாக இந்த நாடகம் அமைந்துள்ளது. நாடகப் பாத்திரங்கள் அவரவர்கள் தகுதிக்கேற்பவும், கல்விக்கேற்பவும் சமூக நிலைக்கேற்பவும் கொச்சை மொழி, ஆங்கிலம் கலந்த மொழி என்று பல விதங்களில் உரையாடுகின்றனர். நகைச்சுவை அம்சத்துடன் இந்த நாடகம் அமைந்துள்ளது.

ஆவணம்

தமிழ் இணைய நூலகத்தில் இந்தப் புத்தகம் சேகரிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.