சைவம் (இதழ்)

From Tamil Wiki
சைவம் - இதழ்

சென்னை சிவனடியார் திருகூட்டம் என்றழைக்கப்படும் சைவ மஹா சபையின் மாதாந்திர இதழ் சைவம்.  இவ்விதழ், சென்னை ஏழுகிணறு பகுதியில், 1914ல் ஆரம்பிக்கப்பட்டது. இதழின் நோக்கம் சைவத்தின் பெருமையைப் பரப்புவதும், பழமையைப் போற்றுவதும் ஆகும்.

பதிப்பு, வெளியீடு

1914-ல் ஆரம்பிக்கப்பட்ட சைவ மஹா சபையின் மாதாந்திர இதழான சைவத்திற்கு, ‘இருக்கம் ஆதிமூல முதலியார் ஆசிரியராக இருந்தார். சைவத்தின் உயர்வு, சைவ சமயத்தின் உண்மை, அதனைப் பரப்பச் செய்ய வேண்டியது பற்றிய கட்டுரைகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்

’சைவம்’ இதழில் பெரிய புராணம் தொடராக வெளியாகியுள்ளது. சாத்திர விளக்கம், நாம விளக்கம் என பல விளக்கக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சிவஞான போதம், தேவார, திருவாசகப் பாடல் விளக்கங்கள், நூல் அறிமுகப் பகுதி போன்றவையும் இடம் பெற்றுள்ளன. இதழின் தலையங்கம் ஒன்றில், சந்தாதார்களுக்கு கீழ்க்காணும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இதழின் ஆசிரியரான இருக்கம் ஆதிமூல முதலியார்.

சந்தாதாரர்களுக்கு விஞ்ஞாபனம்

இக்காலத்தில் சைவ சமயபரிபாலனம் செய்வாரில்லை. கை ஒழுக்கங்கள் குன்றிப்போயின. ஒவ்வோர் காலத்தில் ஒவ்வொர் சைவாபிமானிகள் வெளிப்பட்டுச்செய்யும் முயற்சிகளும் அவ்வவர்களோடு அழிகின்றன. இப்படியே அடியேன் செய்யும் முயற்சிகளும் என்னோடேயழிந்து போகலாம். ஆதலால் நான் இப்போது தொடங்கி நடத்திவருவன என்றும் நிலைபெற்று மேலுமேலும் விருத்தியடையுமாறு பெருமுயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன். நான் இன்னும் இரண்டொரு வருடம் உயிரோடிருந்தால் இம்முயற்சி இறைவனருளால் முற்றுப்பெறும். இதற்கிடையில் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில் என்மனம் செல்லவில்லை. அவரவர்கள் பலபல உதவிகளை நாடி எழுதுங் கடிதங்களைக் கவனிக்கவும் இயலவில்லை. பத்திரிகை தாமதித்து அனுப்பநேரிடுகிறது. இக்குறைகளை சிலகாலம்வரை அன்பர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன். - இ. ஆதிமூல முதலியார்.

சைவம் இதழ்த் தொகுப்பு

பங்களிப்பாளர்கள்

உசாத்துணை

பங்களிப்புகள்