முருகு சுப்ரமணியன்

From Tamil Wiki

முருகு சுப்ரமணியன் ( ) பாரதிதாசன் வழிவந்த மரபுக்கவிஞர். பொன்னி இதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

முருகு சுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாப்பட்டு என்னும் ஊரில் வாழ்ந்த முருகப்பன், சிவகாமி ஆச்சிக்கு (5.10.1924-இல்) பிறந்தார். திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 – ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தபோது அவர் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமிருந்து தமிழார்வத்தை அடைந்தார். 1942 – ல் முருகு சுப்ரமணியம் முதலாண்டு பல்கலைக்கழக வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டார்

இலக்கியப்பணி

முருகு சுப்ரமணியம் படிப்பு முடியும் முன்னரே இளந்தமிழன் என்னும் மாதம்இருமுறை இதழைத் தொடங்கினார். கையெழுத்துப்படியாக இந்த ஏடு ஏறத்தாழ மூன்றாண்டுகள் வெளி வந்தது. இளந்தமிழன் ஆசிரியர் முருகு என பெயர் குறிப்பிடப்பட்டிருதது. அதுமுதல் முருகு சுப்பிரமணியன் என அழைக்கப்பட்டார்.

இதழியல்

இளவயது முதல் பாரதிதாசன் மீது பற்று கொண்டிருந்தார். திராவிட இயக்க ஈடுபாடும் இருந்தது. 1944 – 45 ஆம் ஆண்டுகளில் காரைக்குடியில் வெளி வந்த குமரன் என்னும் வார இதழில் முருகு சுப்ரமணியம் துணையாசிரியராகவும் நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். குமரன் இதழாசிரியர் சொ.முருகப்பா அவர்களிடம் இதழியலை கற்றார்.

1947 – இல் பொங்கல் நாளையொட்டி பொன்னி என்னும் இதழைத் தொடங்கினார். பாரதிதாசன் பரம்பரை என கவிதைகளை வெளியிட்ட பொன்னி அதன்பொருட்டு வரலாற்றில் இடம்பெற்றது. 1953 ஆம் ஆண்டு பொன்னி நின்றது.

1953 – ஆம் ஆண்டு முருகு சுப்ரமணியம் மலேசியா சென்றார். தமிழ்நேசன் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1954 – இல் சிங்கப்பூர் சென்று தமிழ்முரசு என்னும் நாளிதழில் துணையாசிரியரானார். மலேசியாவில் வெளிவந்த தமிழ்நேசன் இதழின் தலைமையாசிரியர் பொறுப்பை 1962 – முதல் ஏற்றார்.

பாரதிதாசனிடம் செல்வாக்கு

முருகு சுப்ரமணியம் பாரதிதாசனின் பார்வையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர் என்று நாரா நாச்சியப்பன் தன்னுடைய தேடிவந்த குயில் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். “முருகு சுப்பிரமணியன் பாரதிதாசனின் விசிறி. ஆனால் தனித்தமிழ் பரப்புவதில் உறுதியான நோக்கம் உடையவர்: அவர் இளைஞர். பாரதிதாசனோ பெருங் கவிஞர். இருந்தா லும் அவர்கள் இருவரும் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள் வதில் வயது தடையாக இருக்கவில்லை. முருகு சுப்பிரமணியன் தனித் தமிழை வற்புறுத்திப் பேசுவார். பாவேந்தர் அதற்கு மறுப்புரை வழங்குவார்.

முருகு சுப்பிரமணியன், மறைமலை யடிகளாரின் நூல் களைப் படித்துப் பார்க்குமாறு பாவேந்தரை வற்புறுத்துவார். தம்மிடமிருந்த நூல்களையும்-அவற்றின் பகுதிகளையும் படித்துக் காட்டுவார். பாவேந்தரோ தனித்தமிழ் நடை முறையில் கையாள இயலாது என்று அடித்துச் சொல்வார். சில தனித்தமிழ்ச் சொல்லாக்கங்களைக் கிண்டலும் செய்வார். பாவேந்தர் தொடர்ந்து மறைமலையாரின் நூல்களைப் படித்தார்.

மறைமலையடிகளாரின் சமயக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத பாவேந்தர், மொழிக் கொள்கையை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். இனித் தனித் தமிழிலேயே நூல்கள் எழுதுவது என்று உறுதி பூண்டார். உறுதி ஏற்ற பிறகு வெளிவந்த அவருடைய நூல்கள் முழுவதுமே. உரை நடை, பாட்டு எல்லாமே-தனித்தமிழ் நூல்களாக வெளி வந்தன. ஒரு நூலைத் தனித்தமிழ்த் தந்தையான மறைமலை யடிகளாருக்கே 'திருமுன் படையல்' ஆக்கினார். பாரதியாரைத் தன் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட பாவேந்நர் பிறகு பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண் டார்”.

மறைவு

முருகு சுப்ரமணியம் 1984 ஏப்ரல் 10 – இல் இயற்கை எய்தினார்.

உசாத்துணை