கூத்தநூல்

From Tamil Wiki
கூத்தநூல்

கூத்தநூல் (சாத்தனார்): இது சாத்தனார் என்னும் கவிஞர் எழுதிய நாடக இலக்கண நூல். இந்நூலை ஏட்டுச்சுவடியில் இருந்து உரையெழுதிப் பதிப்பித்தவர் ச.து.சு.யோகியார். இது சங்ககால நூல் என்னும் தரப்பு உண்டு. ஆனால் பிற்காலத்தைய நூல், பெரும்பாலும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கூத்தநூல் என்னும் பெயரில் இன்னொரு நூல் உள்ளது. அதன் ஆசிரியர் கூத்தநூலார் என அழைக்கப்படுகிறார். அந்நூல் காலத்தால் இந்நூலுக்கு பழையது.


பார்க்க:கூத்தநூல் (கூத்தநூலார்)

பதிப்பு வரலாறு

ச.து.சு. யோகியார் 1968ல் கூத்தநூலின் ஏட்டுப்பிரதியை ஈரோட்டில் கண்டெடுத்தார். அவர் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் எழுதினார். மேலும் சில விளக்கவுரைகள் அந்நூலுக்கு எழுதவும், அதை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யவும் ச.து.சு.யோகியார் எண்ணியிருந்தார். அதற்குள் அவர் மறைந்தார்

ச.து.சு.யோகியாரின் இறப்புப்புப்பின் மகாவித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை பதிப்பாசிரியராக அமைந்து இந்நூலை வெளியிட்டார்.மத்திய சங்கீத நாடக அகாடமியும், மாநில சங்கீத நாடக சங்கமும் சேர்ந்து இதை பதிப்பித்தன. ச.து.சு.யோகியாரின் மனைவி இதை இரண்டம் முறையாக பதிப்பித்தார். கூத்தநூலின் இரண்டாம் பகுதியை ச.து.சு.யோகியாரின் கைப்பிரதியில் இருந்து அவருடைய மனைவி 1987ல் வெளியிட்டார்.

தன் இறுதி நாட்களில் பெருமுயற்சியுடன் ச.து.சு.யோகியார் இந்நூலுக்கான உரையை எழுதியதாகவும் கையெழுத்துப் பிரதியை அச்சிட எண்ணி முதலில் தட்டச்சு செய்வதற்கு கொடுத்தபோது தட்டச்சு செய்பவரின் மனைவி தவறுதலாக அந்தக் கையெழுத்துப் பிரதியை எரித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. உடல் நலம் குன்றியிருந்த ச.து.சுயோகியாரிடம் மிகுந்த தயக்கத்தோடும் வருத்தத்தோடும் மருத்துவர் வழியாக இத்தகவலை சொன்னார்கள். மனம் தளராமல் மீண்டும் 1800 சூத்திரங்களுக்கும் விளக்கவுரை எழுதி நிறைவு செய்தார்.

நூலாசிரியர்

இந்நூலை எழுதச்செய்தவன் தென்னவன் (தென்னவன் வேண்ட) என பாயிரம் குறிப்பிடுகிறது

… முன்னைநூல் ஆய்ந்து

செந்தமிழ் நிலத்தும் சேர்பல நிலத்தும்

வந்தமெய்க் கூத்தின் வகைஎல்லாம் கண்டு

கூத்தநூல் நான்முகக் கூத்தன் சாத்தன்

வேத்தவை எல்லாம் வியப்பத் தந்ததே

என்னும் வரிகள் இதை எழுதியவர் சாத்தன் என்று கூறுகின்றன. தென்னவன் என்பது பாண்டியனைக் குறிப்பிடுகிறதா என்று ஆய்வாளர்கள் உறுதி செய்யவில்லை.

காலம்

நூலின் நோக்கம்

கூத்தநூலின் உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தை அந்நூலின் பாயிரம் இவ்வாறு குறிப்பிடுகிறது மந்திர மாமலை யந்திரத் தவிசில்

வடக்குப் பரிதி கிடக்கப் போம்வழி

நால்வர்க்குத் தந்திர நான்மறை கூறும்

கூத்தனும் கூத்தியும் இயற்றிய கூத்தைக்

கண்டான் அகத்தியன் கண்ணுதல் செப்ப

இயற்றினான் கூத்தின் இலக்கண வைப்பே.

வடக்கே நால்வருக்கு தந்திர வேதம் சொன்ன கூத்தின் இயல்பைச் சொல்லும் நூல் இது. கூத்தனும் கூத்தியும் ஆக சிவனும் உமையும் ஆடிய கூத்தை அகத்தியன் கண்டான். சிவன் சொல்ல அகத்தியன் எழுதியது கூத்தநூலின் முதல் வடிவம். அந்நூலின் வழிநூல் இது என ஆசிரியர் சொல்கிறார்.

முன்னோடி நூல்கள்

அகத்தியரே கூத்துக்கு முதல் இலக்கணம் இயற்றியவர் என்பது கூத்தநூலின் முன்னுரையில் கூறப்படுகிறது ( அகத்தியன் இயற்றிய ஆகத்திய முதல்நூல்) அதை தொடர்ந்து சிகண்டி இயற்றிய தேன்இசை சார்பு எனும் நூல் வழிநூலாகச் சொல்லப்படுகிறது. தொடந்து

பேரிசை நாரை குருகு கூத்து

சயந்தம் குணநூல் முறுவல் சயிற்றியம்

தண்டுவம் நந்தியம் பண்ணிசை தக்கம்

தாளம் தண்ணுமை ஆடல்மூ வோத்தும்

வழிநூல்

என வழிநூல்களின் பட்டியலை நூலாசிரியர் சொல்கிறார். அவற்றை கற்று கூத்தநூல் இலக்கணத்தை உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார்

… அவற்றின் வழிவகை வகுத்துக்

கூத்தின் விளக்கம் கூறுவன் யானே (2)




‘கூத்தநூல்‘ என்பதை யோகியார் ‘கூத்தனூர்’ எனக் கொண்டு விளக்கிக் கூறுவார் (1968, ப.10). நான்முகக் கூத்தன்: ‘கூத்தைப் படைப்போன் நான்முகக் கூத்தன்’ (3:115). வேத்தவை: நாட்டிய நாடக அரங்கங்கள் (1968, ப.10)

உள்ளடக்கம்

கூத்தநூல் 9 பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது. அதை கூத்தநூலின் பொருளடக்கமாக ச.து.சு.யோகியார் வகுத்துச் சொல்கிறார்.

  • 1. சுவை நூல்: (கலையின் தெய்வீக உணர்ச்சிகளை விவரிப்பது)
  • 2. தொகை நூல்: (நாட்டிய வடிவங்களின் தொகுப்பு)
  • 3. வரி நூல் (கிராமிய நாட்டியங்கள்)
  • 4. கலை நூல் (கைகால்களின் நாட்டிய அமைப்பு)
  • 5. கரண நூல்: (நாட்டியக் குறிப்புகளின் தொகுப்பு)
  • 6. தாள நூல்: (காலவரையளவு)
  • 7. இசை நூல்
  • 8. அவை நூல்: (அரங்கமைப்பு வர்ணனை)
  • 9. கண் நூல்: (கருத்து விளக்கம்)

உசாத்துணை

அண்ணாவியார் இணையதளம். கூத்தநூல் அறிமுகம் [1]