தமிழ் கலைக்களஞ்சியம்

From Tamil Wiki
Revision as of 12:06, 1 May 2022 by Jeyamohan (talk | contribs)
கலைக்களஞ்சியம்
தூரன்
டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார்

தமிழ்க் கலைக்களஞ்சியம் ( ) தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமும் இதுதான். டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்தபோது பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து வெளியிட்டார்

கலைக்களஞ்சியங்கள்

இந்திய மொழிகளில் மரபான முறையில் அமைந்த கலைக்களஞ்சியங்களும் அகராதிக்களும் உள்ளன. அகராதிகளும் சிறிய கலைக்களஞ்சியங்களும் நிகண்டுக்கள் எனப்பட்டன. கோசம் (தொகைநூல்) என்னும் பெயருடைய சிறு கலைக்களஞ்சியங்கள் வெவ்வேறு துறைகள் சார்ந்து உருவாக்கப்பட்டிருந்தன. எல்லா தலைப்புகளையும் உள்ளடக்கியதும் ஆங்கில கலைக்களஞ்சிய முறைப்படி அகரவரிசையில் அமைந்ததுமான தமிழின் முதல் கலைக்களஞ்சியம் என்று கூறத்தக்கது அபிதான கோசம். 1902ல் ஈழத்து தமிழறிஞரான மானிப்பாய் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை இதை உருவாக்கினார். தொடர்ந்து ஆ.சிங்காரவேலு முதலியார் உருவாக்கிய அபிதான சிந்தாமணி இன்னும் விரிவான கலைக்களஞ்சியமாக வெளிவந்தது. என்சைக்ளோப் பீடியா பிரிட்டானிகா போல அறிவியல், பண்பாடு, கலை, வரலாறு என அத்தனை பேசுபொருட்களையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு கலைக்களஞ்சியம் தமிழுக்கு தேவை என்று உணர்ந்து உருவாக்கப்பட்டது பெரியசாமித் தூரன் ஆசிரியராக தொகுத்த தமிழ் கலைக்களஞ்சியம். இதுவே தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளிலும் இதுவே முதலில் வெளிவந்த கலைக்களஞ்சியம்

தொடக்கம்

சென்னையில் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் (1947) தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்). அந்த மாநாட்டில் தங்குதுரி பிரகாசம் மற்றும் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் (1946 -1949) கல்வி அமைச்சராகப் பணியாற்றி வந்த தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் பங்கெடுத்தார். அவர் தூரனுக்கு அணுக்கமானவர். அவர் நிறுவிய ராமகிருஷ்ணா கல்விநிலையங்களில் தூரன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவினாசிலிங்கம் செட்டியார் அந்த மாநாட்டிலேயே ஒரு கலைக்களஞ்சியப் பணியை தொடங்கும் செய்தியை அறிவித்தார். 1946 ல் அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியில் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை பரப்பவும், அறிவியலை தமிழில் கற்பிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. கலைக்களஞ்சியம் உருவாக்க ஒரு துணையமைப்பு உருவாக்கப்பட்டு கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் பெரியசாமித் தூரன் நியமிக்கப்பட்டார்.

பணி

கலைக்களஞ்சியப் பணி ஆரம்பித்து முதல் தொகுதி ஆறு ஆண்டுகள் கழித்து வந்தது. பின் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு தொகுதி என 9 தொகுதிகள் வந்தது. ஒரு தொகுதியில் 750 பக்கங்கள், பத்து தொகுதிகள்; 1200க்கு மேற்பட்ட அறிஞர்கள் எழுதிய 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 20,000 கலைச்சொற்கள் என அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் தான் இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியம்.

பொதுக் கலைக்களஞ்சியப் பணி முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார் தூரன். இந்த வேலை 7 ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வந்தன. பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் வந்தபோது (1963) முதலமைச்சர் காமராசர் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.

சிக்கல்கள்

பெரும்பாலும் தூரனின் கலைக்களஞ்சியத்தை நீர்த்துப்போன மொழியில் நகலெடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவற்றின் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியம் என்ற தகுதிக்குள் வராதவை.

பயன்கள்

அவரது கலைக்களஞ்சியங்கள் வரத்தொடங்கியபின்னரே தமிழில் பொது அறிவு துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. அவற்றை பெரும்பாலும் தமிழாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாமே தூரனின் கலைக்களஞ்சியத்தின் மறு பிறப்புகள்.