under review

பன்னிரு பாட்டியல்

From Tamil Wiki
Revision as of 13:36, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
பன்னிரு பாட்டியல்

பன்னிரு பாட்டியல் (பொ.யு 9-ஆம் நூற்றாண்டு) பாடல் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூல் இது. பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்வகையின் இலக்கணத்தைக் கற்பிக்கும் இலக்கணத்துறை.

ஆசிரியர், காலம்

பன்னிரு பாட்டியல் என்று பெயரிட்டு இந்நூலைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. இதன் பெயர்க் காரணம் இன்னது என்றும் தெரியவரவில்லை. இது மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், கன்னல், புள் என்னும் பன்னிரண்டு பொருத்தங்களைப் பற்றிக் கூறுவதால் பன்னிரு பாட்டியல் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பது சில ஆய்வாளர் கருத்து.

இந்நூலின் அமைப்பை வைத்துப் பார்த்தால் இது ஒரு பாடநூலாக பிற்காலத்தில் தொகுக்கப்பட்டது என்று தெரிகிறது. அதுவரை வெவ்வேறு கல்விநிலையங்களில் பயிலப்பட்ட நூல்களில் இருந்து அக்காலத்துக் கல்வித்தேவைக்கேற்ப இது தொகுக்கப்பட்டுள்ளது. ஆகவே சங்ககால பாட்டியல்நூல்களும் பின்னர் சமணர் காலத்து பாட்டியல்நூல்களும் இதில் உள்ளன.

நூல் அமைப்பு

இந்நூல் பாயிரம் தவிர்த்து 360 பாக்களைக் கொண்டுள்ளது. மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

எழுத்தியல்

எழுத்தியல் 96 பாடல்கள் கொண்டது. எழுத்து, வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல், புள், நாள் என்னும் ஒன்பது பொருத்தங்கள் பற்றிக் கூறுகின்றது

சொல்லியல்

சொல்லியல் 59 பாடல்கள் கொண்டது. சீர்க்கணம், மங்கலம், சொல் என்னும் மூன்று பொருள்கள் விளக்கப்படுகின்றன.

இனவியல்

இனவியல் 205 பாடல்கள் கொண்டது. பலவகையான பாக்கள் பற்றியும் பாவினங்கள் பற்றியும் கூறுகின்றது. 68 வகையான சிற்றிலக்கியங்கள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

தொகுக்கப்பட்டிருப்பவை

முதல்நூல்கள்

இந்நூல் முந்தையகால இலக்கண நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு

ஆகிய முந்தைய காலத்தைய நூல்களில் இருந்து எடுத்த பாடல்களின் தொகை இது.

முதல்நூலாசிரியர்கள்

இதிலுள்ள முதல்நூல்களை இயற்றியவர்கள்

  • அகத்தியர்
  • அவிநயனார்
  • இந்திரகாளியார்
  • கபிலர்
  • கல்லாடர்
  • கோவூர் கிழார்
  • சீத்தலையார்
  • செயிற்றியனார்
  • சேந்தம் பூதனார்
  • நற்றத்தனார்
  • பரணர்
  • பல்காயனார்
  • பெருங்குன்றூர்க் கிழார்
  • பொய்கையார்
  • மாபூதனார்

என்னும் 15 புலவர்கள்.

உசாத்துணைகள்


✅Finalised Page