first review completed

தம்பிரான் வணக்கம்

From Tamil Wiki
Revision as of 00:20, 29 April 2022 by Jayashree (talk | contribs)
Thambiran vanakkam.jpg

தம்பிரான் வணக்கம் தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். 1578-ல் ஹென்ரிக் ஹென்ரிகஸ் ((Henrique Henriques) என்ற போர்த்துகீசிய பாதிரியார் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். இது கிறிஸ்துவ வழிபாட்டுப் புத்தகம் ஆகும்.

முதல் தமிழ் அச்சுப் புத்தகம்

தம்பிரான் வணக்கம் அக்டோபர் 20, 1578-இல் வெளியிடப்பட்டது. இந்திய மொழிகளில் முதலில் அச்சிலேறிய புத்தகம் இதுதான். ஐரோப்பிய மொழிகள் தவிர்த்த மொழிகளில் முதலில் அச்சிலேறிய புத்தகமும் இதுதான் என்று கூறப்படுகிறது.  (ஆதாரம்: ஆங்கில விக்கிபீடியா கட்டுரை [1]மட்டுமே, இன்னும் வலுவான ஆதாரம் தேவை.)

இந்தப் புத்தகம் Doctrina Christam என்ற வினாவிடை வடிவத்தில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டு (catechism) புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. 24 பக்கங்களும், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளும் கொண்ட புத்தகம். 10x14 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது. போர்ச்சுக்கலில் இருந்து கொண்டு வரப்பட்டு கொல்லத்தில் இருந்த ஒரு அச்சு எந்திரத்தினால் பதிக்கப்பட்டது. இதற்கு தேவையான காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இன்று ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. அது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஹவ்ட்டன் (Houghton) நூலகத்தில்[2] இருக்கிறது. மின்பிரதி[3] கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:

ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து...

முந்தைய முயற்சிகள்

இதற்கு முன்பும் ஒரு தமிழ் புத்தகம் 1554-ல் வெளிவந்திருக்கிறது, ஆனால் அது போர்ச்சுக்கீசிய வரி வடிவத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் பெயர் Carthila e lingoa Tamul e Portugues. இன்று இந்தப் புத்தகத்தின் ஒரே ஒரு பிரதி மட்டும் போர்த்துகலில் பெலம் (லிஸ்பன்) நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஹென்றிகே ஹென்றிகஸ்

ஹென்றிகஸ் 1520-ல் பிறந்தவர். 1546-ல் இந்தியா வந்தார். ஃப்ரான்சிஸ் சேவியரின் கீழே பணி புரிந்திருக்கிறார். முதலில் கோவாவிலும் பிறகு தூத்துக்குடியிலும் பணி. தம்பிரான் வணக்கத்துக்குப் பிறகு 1579-ல் கிறிஸ்தியானி வணக்கம் என்று வழிபாட்டு நூலையும் பிறகு கிறிஸ்துவப் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் (அடியார் வரலாறு, 1586) தமிழில் புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறார். மதமாற்றப் பணி வெற்றிகரமாக நடக்க உள்ளூர் மொழியில் பேசுவதும் வழிபடுவதும் முக்கியம் என்று கருதி இருக்கிறார், அதுவே இந்த முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருந்தது. தமிழுக்கு ஒரு இலக்கணமும், அகராதியும் எழுதியதாகச் சொல்லப்படுகிறது, அவை தொலைந்துவிட்டன. 1600-ல் மறைந்தார். அவரது கல்லறையை இன்றும் தூத்துக்குடியில் காணலாம்.

தொடர்புடைய சுட்டிகள்

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.