first review completed

சாய்வு நாற்காலி(நாவல்)

From Tamil Wiki
Revision as of 05:27, 28 April 2022 by Tamizhkalai (talk | contribs)
jeyamohan.in
jeyamohan.in

சாய்வு நாற்காலி எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய நாவல். சாகித்ய அகாடமி விருது பெற்றது. தென் தமிழக அரபிக் கடலோர கிராமமொன்றில் இஸ்லாமிய வீட்டில், நிலவுடைமை சமூகத்தின் கடைசி ஜமீன்தாரான, செல்வமெல்லாம் தேய்ந்து போன பின்பும் அதிகார மமதையிலும் இந்திரிய சுகங்களிலும் மூழ்கும் முஸ்தபாக்கண்ணுவின், அவரது குடும்பத்தின் விழ்ச்சியைச் சொல்வதன் ஊடே இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய திருவிதாங்கூர் அரசை, அக்கால சமூகத்தைச் சித்தரிக்கும் நாவல்.

ஆசிரியர்

சாய்வு நாற்காலி நாவலின் ஆசிரியர் தோப்பில் முகமது மீரான் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019) தமிழ், மலையாள எழுத்தாளர். ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு, துறைமுகம், அஞ்சுவண்ணம் தெரு ஆகிய புதினங்களை எழுதினார். வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் மொழியாக்கம் செய்தார்.

உருவாக்கம்,பதிப்பு

தான் அனுபவத்தில் கண்ட மனிதர்களின் சாயல் சாய்வு நாற்காலி யில் உண்டு என்று முகமது மீரான் குறிப்பிட்டிருக்கிறார். 1995-ல் எழுதி முடிக்கப்பட்ட சாய்வு நாற்காலி டிசம்பர், 1995-ல் அவரால் சொந்தமாகப் பதிப்பிக்கப்பட்டது. காலச்சுவடு முதல் பதிப்பை நவம்பர், 2006 -ல் வெளியிட்டது.

கதைச் சுருக்கம்

தென்பத்தன் என்னும் கடலோர கிராமத்தின் இரண்டரை நூற்றாண்டுக்கால கதைக்கு அதன் காரணவர்கள் சாய்ந்து அமரும் சாய்வு நாற்காலி மௌன சாட்சியாய் நிற்கிறது.நாயகன் முஸ்தபாக்கண்ணுவின் முப்பாட்டன் பவுரீன் பிள்ளை அரசர் மார்த்தாண்ட வர்மாவின் நன்மதிப்பாலும், அணுக்கத்தாலும் மாளிகையும்,நிலபுலன்களும். தருணங்களில் மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களும் கிடைக்கப் பெற்றவர். பவுரீன் பிள்ளைக்குப் பின் அவர் தலைமுறை அபுல்ஹசன், காசிம் பிள்ளை,நூர்முகம்மது, முஸ்தஃபாக்கண்ணு என்று நீள்கிறது. கூடவே பெண்களை அடித்துத் துவைக்கும் அதபுப் பிரம்பும்,

காசிம் பிள்ளையின் நான்காவது மனைவி சவுதாயியின் மகன் நூர் முகம்மது. முஸ்தபாக்கண்ணு வும் தங்கை ஆசியாவும் நூர் முகம்மதுவின் மூன்றாவது மனைவி பெற்ற மக்கள். பழைய வீட்டிலிருந்த மரம், உத்தரங்களைப் பயன்படுத்தி நூர்முகம்மது சவுதா மன்சில் என்ற உயரமான மாளிகையைக் கட்டுகிறார். அவரது காலம் வரை செல்வம் தங்கி இருக்கிறது. .திருமணமான ஆசியா பொன்னரைஞாணத்துக்கான தன் கோரிக்கை நிறைவேறாமல் கணவனுடன் சவுதா மன்சிலில் தங்கி விடுகிறாள்.

கடைசி விழுதான முஸ்தபாகக்கண்ணு பெண் சுகம், வெட்டி கௌரவம், ருசி கொண்டு அடங்காத நாக்கு,  எளியவர்களையும் பெண்களையும் காலடியில் நசுக்கும் வன்முறை இவற்றின் மொத்த உருவம். ஒரே மகன் சகிக்காமல் வீட்டை விட்டுச் சென்று விடுகிறான். சக்கோலி தின்பதற்காகவும் குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் வேலைப்பாடு மிக்க புகழ்பெற்ற சப்பரமஞ்சக் கட்டிலும், ஜன்னல், கதவுகளும் ,காரணவரின் அடையாளமான வாளும், தாம்பாளமும். தரவாட்டின் கௌரவமான சந்தன அலமாரியும் விலை போகின்றன..

மனைவி மரணப்படுக்கையில் இருக்க, ஐந்து தலைமுறைகளுக்குச் சாட்சியாக இருந்த சாய்வு நாற்காலியையும் விற்று, தன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ரைஹானத்தை பெண் கேட்டுச் செல்பவரின் மேல் காறி உமிழ்ந்த அவளது தாய் துப்பிய எச்சில் தெறிக்கிறது

கதை மாந்தர்

  • பவுரின் பிள்ளை- குடும்பத்தின் முதல் காரணவர், பெரும் வீரர். மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவர்
  • அபுல் ஹசன் - பவுரீன் பிள்ளையின் மகன்
  • காசிம் பிள்ளை - அபுல் ஹசனின் மகன்
  • சவுதாயி - காசிம் பிள்ளையின் நான்காவது மனைவி, நூர் முகம்மது வின் தாய்
  • நூர் முகம்மது - காசிம் பிள்ளையின் மகன்
  • ஆமீனா - நூர் முகம்மதுவின் மூன்றாவது மனைவி, முஸ்தபாக்கண்ணுவின் தாய்
  • முஸ்தபாக்கண்ணு - நூர் முகம்மதுவின் மகன்
  • ஆசியா - முஸ்தபாக்கண்ணுவின் தங்கை
  • செய்தகம்மது - ஆசியாவின் கணவன்
  • நபீசா - ஆசியாவின் மகள்
  • மரியம் பீவி - முஸ்தபாக்கண்ணுவின் மனைவி
  • சாகுல் ஹமீது - முஸ்தபாக்கண்ணுவின் மகன்
  • ரைஹானத் - பணிப்பெண்
  • பத்மநாபதாசன் மார்த்தாண்ட வர்மா - திருவிதாங்கூர் அரசர்
  • எட்டு வீட்டுப் பிள்ளைமார் - மருமக்கள்தாயத்தை எதித்து கலகம் செய்தவர்கள், மன்னரின் நேர் வாரிசுகள்

இலக்கிய இடம், மதிப்பீடு

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தின் கன்யாகுமரி மாவட்டத்தின் கடலோர மண் சார்ந்த இஸ்லாமியக் கலாசாரத்தையும், ,வாழ்க்கையையும், வட்டார வழக்கையும் மிக யதார்த்தமாக, வரலாற்றுப்பூர்வமாக, பதிவு செய்திருக்கிறார் முகமது மீரான்.சாய்வு நாற்காலி இந்திரிய சுகத்திற்கு அடிமையான நிலவுடமைச் சமுதாயத்தின் வீழ்ச்சியை அதன் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணு வின் வாயிலாகச் சொல்லும் படைப்பு. மார்த்தாண்டவர்மா ராஜா காலத்தில் ஆரம்பித்து சுதந்திர இந்தியாவில் முடியும் கதை, முஸ்தபாக்கண்ணுவின் நனவோடை வழியாக முன் பின்னாகப் பாயும் நினைவுகளின் மீட்டலாகப் பரவுகிறது.

கதையில் குடும்பத்தின் இருநூறு ஆண்டு கால வரலாற்றை ஐந்து தலைமுறை மூலம்  ஆசிரியர் சொல்கிறார்.  இந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி என மட்டும் பார்க்காமல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் தொடரும் மன ஓட்டத்துக்கான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

நாவலில் கதை நடந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலை, சூழ்ச்சிகள்,அரசாட்சி, சமூகம், கலாசாரம் பற்றிய சித்திரம் துலங்கி வருகிறது. மருமக்கள் தாயத்தை எதிர்த்து நடந்த கலவரங்கள், நாடாளும் மார்த்தாண்டவர்மா மகாராஜா, மக்கள் தாயத்துக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார், ராஜாவுக்கு துணை நின்றதால் பெரும் செல்வந்தரானவர்கள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்களை உட்பட தின்று முடிக்கும் குடும்பத் தலைவர், பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை, ஒரு காலகட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கிறது சாய்வு நாற்காலி.

அரபுத் தொன்மங்கள்,ஜின்கள், கடலில் பாய் விரித்துத் தொழுத மடாயி பாவா என்று நாவல் முழுதும் பின்னிப் பரவி வரும் மாய யதார்த்தக் கூறுகள் இந்த நாவலுக்கு ஒரு கனவுத் தன்மையைக் கொடுக்கின்றன

முதலாளித்துவத்தின் பெரும் எச்சமாகவே நாவல் முழுக்க வரும் முஸ்தபாக்கண்ணுவின் பாத்திரம் தமிழின் சிறந்த பாத்திரப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது."முஸ்தபாக்கண்ணு ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம்" என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஐந்து தலைமுறைகளுக்கு மௌன சாட்சியாக, காரணவர்கள் சாய்ந்திருந்த சாய்வு நாற்காலியும், பெண்களை அடித்து, பணிய வைக்கும் அதபு பிரம்பும், தரவாட்டின் கௌரவமான சந்தன அருமாலியும், மகாராஜா தந்த வாளும் உயிருள்ள பாத்திரங்கள் அளவுக்கே முக்கியமான கதாபாத்திரங்கள். முகமது மீரான் ஒரு நேர்காணலில் "என்னைப் பொறுத்தவரை அதுல ஒவ்வொரு கதாபாத்திரமும்….மனிதனைவிட கம்பு, பிரம்புலாம் பேசும். சாய்வு நாற்காலி..அது பேசும். அவைகள்தான் கதாபாத்திரம்; மனிதர்களல்ல. இந்த கதாபாத்திரங்கள் பேசுறதுக்காகத்தான் மனிதர்களை படைச்சிருக்கேன். இதுபோல இன்னொன்னு – அதே formலே – என்னாலெ படைக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.

எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம்' என நடக்கும் இஸ்ராயில் நாவலின் இறுதியில் சொல்லும் சொற்கள், சமூக மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறன.மகாராஜா திருமனசு அமைத்துக் கொடுத்த பாதையில் அனைத்தையும் இழந்த முஸ்தபாக்கண்ணு தூக்கி வரப்படும்போது அவரைத் தூக்கி வரும் மீனவர்களைப் போலவே வாசகனும் காலத்தைச் சுழல வைக்கும் மைய அச்சின் தன்மையை உணர்கிறான்.

நாவல் முழுக்க எளியவர்கள் நசுக்கப்படுவதும், பெண்கள் மோசமாக ஒடுக்கப்படுவதும் விரவிக் கிடக்கின்றன. அந்தக் கண்ணீரும் சாபமும் சவுதா மன்ஸிலின் வீழ்ச்சிக்கு அடிகோலியவை.


'அல்லல்பட்டு ஆற்றாத கண்ணீர் அதுவன்றோ

செல்வம் உடைக்கும் படை

'

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.