கமல்ஹாசன்
கமல்ஹாசன் (7 நவம்பர் 1954 ) தமிழ் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், தமிழில் திரைக்கதை என்னும் தனித்த இலக்கியவடிவத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். கவிதைகள் எழுதியிருக்கிறார்.
பிறப்பு, கல்வி
கமல்ஹாசன் 7 நவம்பர் 1954ல் ராமநாதபுரம் பரமக்குடியில் வழக்கறிஞர் தொழில்செய்தவரும், காங்கிரஸ் அரசியல்செயல்பாட்டாளருமான டி.ஸ்ரீனிவாச ஐயங்காருக்கும் ராஜலட்சுமிக்கும் பிறந்தார். கமல்ஹாசனுக்கு முதலில் பார்த்தசாரதி என்று பெயரிடப்பட்டது, பின்னர் அது கமல்ஹாசன் என்று மாற்றப்பட்டது. கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வழக்கறிஞரும், தேசியவிருது பெற்ற நடிகரும் ஆவார். இன்னொரு அண்ணன் சந்திரஹாசன் வழக்கறிஞர், அவரும் சில படங்களில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் சகோதரி நளினி ஒரு பரதநாட்டியக் கலைஞராக இருந்தார்.
பரமக்குடியில் தொடக்கக் கல்வி பயின்ற கமல்ஹாசன் பின்னர் அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது சென்னை முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் ஹிந்து மேல் நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். தன் சகோதரர்களைப் போலன்றி இளமையிலேயே பள்ளிக்கல்வியை விட்டுவிட்டு திரைத்துறையில் தீவிரமாக ஈடுபட்டார்.
தனிவாழ்க்கை
கமல்ஹாசன் 1978ல் தன் 24 ஆவது வயதில் நடனக்கலைஞரான வாணி கணபதியை மணந்தார். வாணி கணபதியை மணமுறிவு செய்தபின் 1988 ல் நடிகை சரிகாவுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு அக்ஷரா, சுருதி என இரு மகள்கள். சரிகா பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.
நாடக வாழ்க்கை
ஔவை டி.கே.ஷண்முகம் நடத்திய டி.கே.எஸ் நாடக சபாவில் இளம்நடிகராகப் பங்குபெற்றார். நாடக உருவாக்கத்தின் எல்லா தளங்களிலும் ஈடுபட்டார்
திரைப்பட வாழ்க்கை
கமல்ஹாசன் 1960ல் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமாகி அப்படத்துக்காக தேசியவிருது பெற்றார். 1962ல் வெளிவந்த கண்ணும் கரளும் கமல்ஹாசனின் முதல் மலையாளப் படம்.
நடனக்கலைஞர், பாடகர், நடிகர் என்னும் நிலைகளில் கமல்ஹாசன் அறுபத்திரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் ஈடுபட்டு வருகிறார். திரைப்பட நடிப்புக்காக மூன்றுமுறை தேசியவிருது பெற்றார். 1990ல் பத்மஸ்ரீ விருதும் 2014ல் பத்மபூஷன் விருதும் பெற்றார்.
அரசியல்
கமல்ஹாசன் தொடக்கம் முதலே தன் அரசியல் நிலைபாடுகளை முன்வைத்து வந்தார். காந்தியிடமும் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரிடமும் இணையான ஈடுபாடு கொண்டவர். தேசியப்பார்வை, இயற்கையுடன் ஒட்டிய வளர்ச்சி, அதிகாரப்பரவலாக்கம், ஜனநாயகவழியிலான மக்களியக்கம் ஆகியவற்றில் காந்தியையும் சமூகநீதி, பகுத்தறிவு, மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் ஆகியவற்றில் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரையும் தன் முன்னோடிகள் என்று குறிப்பிடுகிறார். 21 பெப்ருவரி 2018 ல் மக்கள் நீதி மையம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கினார்.
இதழியல்
கமல்ஹாசன் மையம் என்னும் இதழை தொடங்கி சிலகாலம் நடத்தினார். அதில் வெவ்வேறு சமூகப்பிரச்சினைகளைப் பற்றிய தன் கருத்துக்களை எழுதினார்
திரைக்கதைகள்
தமிழிலக்கியத்தில் கமல்ஹாசனின் இடம் அவருடைய திரைக்கதைகளால் உருவாவது. கமல்ஹாசன் இளமைக்காலம் முதலே நவீன இலக்கியத்துடனும் இலக்கியவாதிகளுடனும் தீவிரமான தொடர்பிலும் உரையாடலிலும் இருந்தார். சுஜாதா, பாலகுமாரன், ஞானக்கூத்தன், புவியரசு, ரா.கி.ரங்கராஜன் , தொ.பரமசிவன் என அவருடைய இலக்கிய நட்புவட்டம் பெரியது. ஜெயகாந்தனுடனும் அணுக்கம் இருந்தது. சந்தநயம் கொண்ட கவிதைகளும் எழுதியிருக்கிறார்
தமிழிலும் மலையாளத்திலும் வெளிவந்த தொடக்ககால மாற்று சினிமா முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். 1981ல் கமல்ஹாசன்- சாருஹாசன் தயாரிப்பில் வெளிவந்த ராஜபார்வை கமல்ஹாசன் நேரடியாக திரைக்கதையில் பங்களிப்பாற்றிய முதல் படம்.அபூர்வ சகோதரர்கள் (1989) திரைக்கதையிலும் பங்களிப்பாற்றினார்.
கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய முதல்படமாக அறிவிக்கப்பட்டது மைக்கேல் மதன காமராஜன் (1990). கமல்ஹாசனால் கதை, திரைக்கதை எழுதப்பட்டு முழுமையாகவே அவருடைய ஆக்கமாக வெளிவந்த முதல் படம் தேவர்மகன்.(1992) பரதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படுகிறது. மகாநதி (1994) கமல்ஹாசனின் கதை-திரைக்கதை (உதவி ரா.கி.ரங்கராஜன்) யில் வெளிவந்த இன்னொரு முக்கியமான படம். கமல்ஹாசன் எழுதிய படங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஹே ராம் (2000) அவரே இயக்கி வெளிவந்தது.2003ல் கமல்ஹாசன் எழுதிய அன்பே சிவம் வெளிவந்தது. 2004ல் விருமாண்டியும் 2008ல் தசாவதாரமும் 2013ல் விஸ்வரூபமும் 2015 ல் உத்தமவில்லனும் கமல்ஹாசன் திரைக்கதையில் வெளியாயின.
இலக்கிய இடம்
கமல்ஹாசனின் திரைக்கதைகள் பொதுரசனைக்குரிய படங்களுக்கானவை. அந்த தேவைக்குள் தமிழ்வாழ்க்கை சார்ந்த நுண்ணிய களங்களை உருவாக்கவும், அவற்றை முழுமையாகவே திரைப்படத்துக்குரிய காட்சிமொழியில் அமைக்கவும் இயன்றிருப்பவை என்பதனால் அவை முன்னோடியான முக்கியத்துவமும் இலக்கிய இடமும் கொண்டவை. அவருடைய திரைக்கதைகளில் தேவர் மகன், மகாநதி, ஹே ராம், அன்பே சிவம் ஆகிய நான்கும் முழுமையாகவே சிறந்த இலக்கியப்படைப்புக்குரிய தகுதி கொண்டவை. விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய திரைக்கதைகளிலும் தமிழ் நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்புகளுக்கு நிகரான இடங்கள் உள்ளன.
தமிழில் திரைக்கதை என்பது ஒரு மொழிவடிவப் படைப்பு என்னும் எண்ணம் வலுவாக நீடிக்கும் நிலையில் அவற்றுக்கு முற்றிலும் மாறாக முழுக்கவே காட்சிப்படிமங்களையும், காட்சிகளாக விரியும் தருணங்களையும் சார்ந்தே எழுந்தப்பட்டவை கமல்ஹாசனின் திரைக்கதைகள். மொழியில் அவை எழுதப்பட்டாலும் காட்சியாகவே நிலைகொள்கின்றன. தேவர்மகனில் பெரிய தேவர் தன் மகன் அமெரிக்காவில் இருந்து ஒரு அன்னியப் பெண்ணுடன் திரும்பி வந்தபோது அந்த உறவை சரிவரப் புரிந்துகொள்ள விரும்பி அவர்கள் இருவரையும் தன்னுடன் சாப்பிட அமரச்சொல்லும் காட்சி ஓர் உதாரணம். அக்காட்சி நடிப்பாலும், காட்சியின் அமைப்பாலும் நிகழ்த்தப்படவேண்டிய ஒன்று. நிகழ்வுகளின் அடுக்குகள் வசனங்கள் ஆகியவற்றுக்கும் மேலாக அத்தருணத்தின் நுட்பங்கள் மட்டுமே திரைக்கதையில் எழுதப்பட்டிருந்தன. திரைக்கதையாக எடுத்துக்கொண்டால் அக்காட்சியை கற்பனையில்உருவாக்கும் மொழிவடிவமே உள்ளது.
மகாநதியில் சிற்றூரில் வாழும் பண்ணையாரை கவரும்பொருட்டு வெளியில் இருந்து வரும் மோசடிக்காரப் பெண் அவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் வெற்றிலையை வாங்க கைநீட்டும்போது அதை பின்னுக்கிழுத்துக் கொண்டு கண்களால் சிரிக்கும் காட்சி இன்னொரு உதாரணம். அந்த ஒரு துளிக்காட்சியில் அவர்களை நம்பி ஏன் அவர் பின்னால்சென்றார் என்பதற்கான முழுக்காரணமும் திரைக்கதையில் சொல்லப்பட்டுவிட்டது. கதைமாந்தரின் உளநிகழ்வுகளை நுட்பமான சிறு செயல்கள் வழியாகவே உணர்த்திச் செல்லும் தன்மை கமல்ஹாசனின் திரைக்கதைகளில் உண்டு. விஸ்வரூபம் படத்தில் கால் இல்லாத போராளி ஊஞ்சலாடும் காட்சி இன்னொரு உதாரணம்.
கமல்ஹாசனின் திரைக்கதைகள் ஏராளமான பண்பாட்டு நுண்தரவுகளை அறிந்தும் அறியாமலும் விரவி மெய்நிகர் வாழ்க்கையை அளிப்பவை. தமிழின் மிகச்சிறந்த நவீன இலக்கிய ஆக்கங்களின் அளவுக்கே சாதி, மதம் சார்ந்த தனித்தன்மை கொண்ட அவதானிப்புகளும்; பலவகை வட்டாரப் பண்பாட்டு உட்குறிப்புகளும் செறிந்தவை. விருமாண்டி படத்தில் மறவர் சாதியின் தனித்த பேச்சுமொழி, ஆசாரங்கள், மனநிலைகள் ஆகியவை வெளிப்பட்ட அளவுக்கே ஹே ராம் படத்தில் நூறாண்டுகளுக்கு முந்தைய ஐயங்கார் குடும்பங்களின் நுண்சித்தரிப்புகள் அமைந்துள்ளன. நவீனவாழ்க்கையை நோக்கி எழுந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பமும் பழமையில் நின்றிருக்கும் குடும்பமும் சந்தித்துக்கொள்ளும் பெண்பார்க்கும் காட்சி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இலக்கியத் தருணங்களில் ஒன்று.
ஒட்டுமொத்தமாக பொதுரசனைக்குரிய கட்டமைப்புக்குள் கமல்ஹாசன் உருவாக்கிய இந்த நுண்ணிய பண்பாட்டுப் பின்னல் திரைக்கதை என்னும் இலக்கிய வடிவின் சாத்தியங்களுக்கான சான்று எனும் வகையில் முன்னோடியானது. தமிழில் மாற்றுசினிமாக்களாக எடுக்கப்பட்ட எதிலும் இத்தகைய நுண்ணிய அகச்சித்தரிப்புகளும் பண்பாட்டுப்புலமும் எழுதப்பட்டு நிகழ்த்தப்பட்டதில்லை. இப்படங்கள் பலவகை வணிகக் கட்டாயங்களுக்கு உட்பட்டவை என்னும் நிலையில் கமல்ஹாசன் அவற்றுக்கு எழுதிய திரைக்கதைகள் கூடுதலான கலைத்தன்மை கொண்டவையாக உள்ளன.