சி. கணபதிப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 11:46, 23 April 2022 by Jeyamohan (talk | contribs)

சி. கணபதிப் பிள்ளை (27 ஜூன் 1899 - 13 மார்ச் 1986) ஈழத்துத் தமிழறிஞர். சைவ அறிஞர். சிற்றிலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றை எழுதியவர். பதிப்பாசிரியர், உரையாசிரியர்.

பிறப்பு, கல்வி

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர், 13வது வயதில் தந்தையாருடன் தனங்கிளப்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலானந்தர் போன்ற அறிஞர்களிடம் கல்வி கற்றார்.1926 ஆம் ஆண்டில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத் தேர்வில் வென்று பண்டிதர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

லோச் செல்லப்பாவின் தூண்டுதலால் மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் காவிய வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார். கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற கணபதிப்பிள்ளை 1929 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

இலக்கியவாழ்க்கை

1951-இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் பண்டிதமணி தமிழ் என்ற பொருளில் ஆற்றிய உரை தமிழக அறிஞர்கள் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்டது. அந்த உரையே அவருக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது.

நல்லூர் ஆறுமுக நாவலர் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் பண்டிதமணி. அவரது எழுத்துக்களைக் கற்று நாவலரோடு சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பலவற்றை எழுதினார். அத்துடன் சிதம்பரம் கும்பாபிசேக மலரில் சுவாமி ஞானப்பிரகாசர் குறித்தும் கலைமகள் மலரில் பஞ்ச கன்னிகைகள் குறித்தும் எழுதிய ஆக்கங்கள் அவருக்கு மிகுந்த புகழைக் கொடுத்தன.

கவிச்சமயம்

கவிசமயம் என ஒரு சமயம் புலவர்களுக்கு உண்டு என பண்டிதமணி விளக்கம் கூறுவார். அவரது வார்த்தையில் கூறினால், கவிசமயமாகிய அந்தச் சமயம் சைவ சமயம் முதலிய சமய வகைகளைச் சேராதது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவ பருவம் நோக்கி நன்றாகக் கனிந்துவிட்டது என்று கண்டபொழுது, ஏற்ற சந்தர்ப்பங்கள் பாத்திரங்களை நாடி அதனை இன்னும் இன்னும் பொறாது, பொறுக்க முடியாது கருவுயிர்த்தற்கு, சொல்லுருவத்திற் கண்டுகளித்தற்கு - முகஞ் செய்கின்றான். அம் முகத்திற்குக் கவிசமயம் என்று பெயர் வைத்துக் கொள்வோம் என்கிறார் பண்டிதமணி.

பல்கலைக்கழகக் கௌரவப் பட்டங்கள்

  • இலங்கைப் பல்கலைக்கழகம் 1978, மே 31 ஆம் நாள் இலக்கியக் கலாநிதி என்ற கௌரவப்பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1978 ஆகஸ்ட் 14 ஆம் நாள் அன்றைய துணைவேந்தர் சு. வித்தியானந்தன் இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கௌரவித்தார்.

மறைவு

பண்டிதமணி கணபதிப்பிள்ளை 1986 மார்ச் 13 வியாழக்கிழமை தின்னவேலியில் உள்ள அவரது இல்லத்தில் தனது 86-வது அகவையில் காலமானார்.

நினைவுகள்

  • மட்டுவில் கிராமத்தில் கணபதிப்பிள்ளை நினைவாகப் பண்டிதமணி மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 1999 இல் மட்டுவில் இந்து இளைஞர் மன்றத்தினர் நூற்றாண்டு விழா எடுத்துக் கௌரவித்தனர்.
  • மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்தில் பண்டிதமணி அவர்களுக்கு உருவச்சிலை ஒன்றைப் பாடசாலை வளவில் நிறுவியுள்ளனர்.
  • 1999 ஆம் ஆண்டில் இலங்கை அரசு பண்டிதமணிக்கு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது.

நூல்கள்

  • கண்ணகி தோத்திரம்
  • கதிர்காம வேலவன் பவனி வருகிறான்
  • இலக்கிய வழி
  • சைவ நற்சிந்தனைகள்
  • பாரத நவமணிகள்
  • கந்த புராண கலாசாரம்
  • கந்த புராண போதனை
  • சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவைகள்
  • இருவர் யாத்திரிகர்
  • சமயக் கட்டுரைகள்
  • இலக்கிய வழி
  • கம்பராமாயணக் காட்சிகள்
  • கந்தபுராணம் தட்சகாண்டம் உரை
  • நாவலர்
  • சிந்தனைச் செல்வம்
  • நாவலரும் கோயிலும்
  • சிந்தனைக் களஞ்சியம்
  • கோயில்
  • ஆறுமுக நாவலர்
  • அன்பினைந்திணை
  • அத்வைத சிந்தனை
  • செந்தமிழ்க் களஞ்சியம்
  • ஒளவை குறள் (மூலமும் தெளிவுரையும்)
  • பத்தினி வழிபாடு

உசாத்துணை

  • இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை[தொடர்பிழந்த இணைப்பு], ச.லலீசன், யாழ்மண்