பி. கிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 22:01, 18 April 2022 by Madhusaml (talk | contribs) (Content from Kanagalatha)

பி. கிருஷ்ணன் (பிறப்பு: 1932-ஆம் ஆண்டு) சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைதாசன் என்ற பெயரில் எழுதும் இவர் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ளார். வானொலி நாடகங்களாலும் ஆங்கில இலக்கிய மொழி பெயர்ப்புகளாலும் பிரபலமானவர்.

தனி வாழ்க்கை

பி. கிருஷ்ணன் மலேசியாவின் ஜோகூரில் 1932ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையின் பெயர் பெருமாள். தாயாரின் பெயர் செல்லம்மாள். இளம் வயதில் பெற்றோரை இழந்த அவரது கல்வியும் ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் தடைப்பட்டது.  மூன்றாம் வகுப்புப் படிப்போடு 1947ஆம் சிங்கப்பூருக்கு வந்தவர், அன்றிருந்த ராசுப்பிள்ளை மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அன்று அவருக்குச் சம்பளம் $15.

கடையில் முழு நேர வேலை பார்த்துக்கொண்டே கிடைக்கும் நேரத்திலெல்லாம் புத்தகங்கள் வாசிப்பார்.  திராவிடக் கழகத்தில் இருந்த நூல் நிலையம், தமிழ் நாடு புத்தக நிலையம் போன்றவையும், பொது நூலகமும் மற்ற புத்தக் கடைகளும் அவரது அறிவுப் பசிக்குத் தீனிபோட்டன. தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் படித்தார். பல தமிழ் ஆசிரியர்களிடம் குறிப்பாகச் ச.சா.சின்னையாவிடம் யாப்பிலக்கணம் பயின்றார். அச்சமயத்தில்தான் பிரபல தமிழக எழுத்தாளர் புதுமைப்பித்தனின் எழுத்தால் அதிகம் கவரப்பட்ட அவர் ‘புதுமைதாசன்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.

1956ல் திரு கிருஷ்ணன் மணமுடித்தார்.  மனைவி முனியம்மாள் 2021ல் 80 வயதில் காலமானார். இரண்டு ஆண்கள், இரண்டு பெண் பிள்ளைகள், ஆறு  பேரப் பிள்ளைகள், இரண்டு கொள்ளுப் பேரப் பிள்ளைகள்  உள்ளனர்.

வாழ்க்கைத் தொழில்

14வது வயதில் கடைச் சிப்பந்தியாக பணியைத் தொடங்கினார், கூடவே இரவுப் பள்ளியில் படித்தார்.

இருபது வயதில் 1953ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைத்தளம் ஒன்றில் பொருள் கிடங்கின் துணைக் காப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.  இரவுப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து 1967ல் சீனியர் கேம்ப்ரிட்ஜ் சான்றிதழ் பெற்றார். அந்தச் சமயம் ஆங்கில நூல்களையும் படிக்கத் தொடங்கினார். குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

1953ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் வானொலியின் இந்திய நிகழ்ச்சிகள் பகுதி (Indian Programmes Section) என்னும் பொதுப்பிரிவிலும் பள்ளிகள் ஒலிபரப்புப் பகுதி (Schools Broadcasts) என்னும் பிரிவிலும் பகுதிநேரக் கலைஞராய்ப் பணியாற்றினார். அந்தப் பகுதிகளுக்குச் சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதியும் நடித்தும் வந்தார்.

1962 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூர் வானொலியின் இந்தியப்பகுதியில் உதவி ஒலிபரப்பாளராய்ச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய இவர், பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று இறுதியில் முதுநிலை நிர்வாகத் தயாரிப்பாளர்-படைப்பாளர் (Senior Executive Producer - Presenter) என்னும் நிலைக்கு உயர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின்னர் 1992ஆம் ஆண்டின் இறுதியில் பணி ஓய்வு பெற்றார்.

தமது பணிக்காலத்தில் கதம்ப நாடகங்கள், இலக்கிய நாடகங்கள்,  தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், மர்ம நாடகங்கள், மொழி பெயர்ப்பு நாடகங்கள் என வானொலியில் மிக அதிகமான நாடகங்களை எழுதித் தயாரித்த பி. கிருஷ்ணன், சிறந்த நடிகராகவும் பாடகராவும் பெயர் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

1951ஆம் ஆண்டில் தம்முடைய எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் தமிழ் முரசு, தமிழ் நேசன், புது யுகம், திரையொளி, இந்தியன் மூவிநியூஸ், இலக்கியச் சோலை, திராவிட முன்னேற்றக் கழகம் (சிங்கப்பூர்) ஆண்டுஇதழ்கள்  உள்ளிட்ட பல்வேறு சிங்கப்பூர், மலேசியா இதழ்களுக்கும் எழுதியுள்ளார்.

1954-55 ஆம் ஆண்டுகளில் ரெ.வெற்றிவேல் நடத்திய முன்னேற்றம் மாத இதழிலும், 1954ல் சிங்கை முகிலனின் சிந்தனை இலக்கிய இதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

70 ஆண்டு எழுத்துப் பணியில் இதழ்கள், வானொலி,தொலைக்காட்சி, மேடை ஆகியவற்றுக்குச் சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியப் பேச்சுகள், சிறப்பு ஒலிச்சித்திரங்கள், தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என 500க்கும் மிகுதியான பல்வேறு இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.

இவர் 1953 முதல் 1993 வரையில் 40க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இதழில்களில் எழுதியுள்ளபோதிலும் பல கதைகள் கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற 10 கதைகள் 'புதுமைதாசன் கதைகள்' என்ற தொகுப்பாக வந்துள்ளது.

சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் முதலியவற்றின் அடிப்படையில் இலக்கிய நாடகங்களையும், மேனாட்டு இலக்கியப் பேரறிஞர்களாகிய ஷேக்ஸ்பியர், பைரன், கீட்ஸ், ஜார்ஜ் ஆர்வெல் முதலியோர்தம் படைப்புகளின் மொழியாக்கங்கள், உலகப் புகழ்பெற்ற சிறுகதை இலக்கிய மேதைகளின் சிறுகதைகளின் மாற்றுப் படைப்புருவாக்க நாடகங்கள் என அவர் எழுதிப் படைத்த பன்னூற்றுக்கும் மிகுதியான படைப்புகளை எழுதியுள்ளார்.

இவரது படைப்புகள் பலவும் சிங்கப்பூர்ப் புனைகதைகள் (The Fiction of Singapore), சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகக் கலை மன்றம் (The Centre for the Arts - Nus) என்னும் அமைப்பின் வெளியீடாகிய சிங்கா (Singa), இக்கால ஆசியான் நாடகங்கள்-சிங்கப்பூர் (Modern Asian Plays  Singapore), சிங்கப்பூர்க் கல்வியமைச்சின் துணைப்பாட நூல்கள், இந்திய சாகித்திய அகாதெமியின் அயலகத் தமிழ் இலக்கியம் (Anthology of Tamil Short Stories and Poems From Sri Lanka, Malaysia and Singapore), தென்கிழக்காசிய எழுத்து விருது 30 ஆண்டு நிறைவுத் தொகுப்பு (An Anthology on 30th Anniversary of SEA Write Awards) முதலிய பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சில ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்யப்பெற்றிருக்கின்றன. இவர் நாடகங்கள்  தொலைக்காட்சி, மேடை நாடகங்களாக பலவருடங்களாக அரங்கேறுகின்றன.

இலக்கிய இடம்

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள் என்னும் தொடரில் 2012ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல் 22 வரை நடத்திய பி.கிருஷ்ணன் (புதுமைதாசன்) பல்துறை வித்தகர் என்னும் கண்காட்சியையும் கருத்தரங்கும் நடத்தியது. பி.கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப் படைப்புகள் - ஓர் ஆய்வு என்னும் தொகுப்பு நூலும் வெளியிடப்பெற்றது.

தேசிய நூலகத்தில் 2005 முதல் 2019 வரை அமைந்திருந்த சிங்கப்பூரின் நான்கு மொழி இலக்கிய முன்னோடிகள் காட்சிக்கூடத்தில் சிறப்பிக்கப்பெற்றிருந்த ஆறு தமிழ் எழுத்தாளர்களில் பி.கிருஷ்ணனும் ஒருவர்.

“சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி” என இவரை ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

விருதுகள்

  • சிங்கப்பூரின் மிக உயரின கலைகள் இலக்கிய விருதாகிய கலாசாரப் பதக்கம் (Cultural Medallion-2008)
  • தாய்லாந்து அரசிய் தென்கிழக்காசிய எழுத்து விருது (2005)
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது (1998)
  • சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது (2018)
  • மீடியாகார்ப் வசந்தம் பிரதான விழா (2021) வாழ்நாள் சாதனையாளர் விருது
  • சிங்கப்பூர்க் குடியரசின் தேசிய நாள் செயல்திறன் விருது (National Day Efficiency Award -1992)
  • சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பாராட்டு விருது (National Book Development Council Commendation Award -1994)
  • சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் கலை, இலக்கிய நற்சேவையாளர் விருது (2000)
  • சிங்கப்பூர்த் தமிழர் சங்கத்தின் மொழி, இலக்கிய விருது (2002)
  • கவிமாலை கணையாழி இலக்கிய விருது (2003)
  • மிர்ரர் நாடக மன்றத்தின் ஒளவை விருது (2005)  
  • சிங்கப்பூர்த் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருவள்ளுவர் விருது (2006)  
  • பூன்லே சமூக நிலைய இந்திய நற்பணி மன்றத்தின் சாதனை விருது (2009)
  • தேசிய நூலக வாரியத்தின் பல்துறை வித்தகர் (2012)
  • சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் முன்னோடி எழுத்தாளர் விருது (2018),

நூல்கள்

புதுமைதாசன் 22 நூல்கள் எழுதியிருக்கிறார்.

  • இலக்கியக் காட்சிகள் (1990, இலக்கிய நாடகங்கள்
  • புதுமைதாசன் கதைகள் (1993, (சிறுகதைத் தொகுப்பு, சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பாராட்டு விருது பெற்றது)
  • அடுக்கு வீட்டு அண்ணாசாமி (2000, 2 தொகுப்பு- நாடகங்கள்)
  • சருகு (2006, உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் படைத்த சிறுகதைகளின் மாற்றுருவாக்க நாடக வடிவம் - தொகுப்பு)
  • விலங்குப்பண்ணை (2008, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அங்கத நெடுங்கதையின் மாற்றுருவாக்க நாடக வடிவம்)
புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் படைப்புகள் (மொழியாக்கம்)
  • மெக்பெத் (1996, Macbeth)
  • ஹேம்லெட்  (2021, Hamlet)
  • ஒதெல்லோ (2021, Othello)
  • மன்னன் லியர்  (2021, King Lear)
  • ஜூலியஸ் சீஸர் 2021, (Julius Caesar)
  • சூறாவளி (2021, The Tempest)
  • ரோமியோ ஜூலியட் (2021, Romeo and Juliet)
நாடகங்கள்
  • நல்ல வீடு
  • ஐடியா ஐயாக்கண்ணு
  • ஸ்கூட்டரோ ஸ்கூட்டர்!
  • விழிப்பு
  • மரணவலை
  • மர்ம மனிதன்
  • எதிர்நீச்சல்
  • மாடிவீட்டு மர்மம்
  • இரட்டை மனிதன்
  • கதாகாலட்சேபம்

உசாத்துணை