தொ. பரமசிவன்

From Tamil Wiki

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 - 2020) தமிழறிஞர், திராவிடப் பண்பாடு ஆய்வாளர் மற்றும் மானிடவியல் ஆய்வாளர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் ஓய்வு பெற்று பாளையங்கோட்டையில் வசிந்து வந்தார்.

”தொ ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் பண்பாடு, மானுடவியல், மொழியியல், நாட்டார் வழக்காறு, வரலாறு என பன்முகத் தலைப்புகளில் தமிழில் எழுதியும் பேசியும் வந்தார். கல்வெட்டுகள், இலக்கியங்கள் மூலமாக மட்டுமே வரலாற்றுத் தொன்மங்கள் பற்றிப் பேசப்பட்டு வந்த சூழலை மாற்றி, அடித்தட்டு மக்களின் வாழ்வியல், அவர்களின் பழக்க வழக்கங்கள், நாட்டார் வழக்காற்றியல் கதையாடல்கள் மூலமாகத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்தார்.

பிறப்பு, கல்வி & குடும்பம்

தொ.பரமசிவன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையின் தெற்கு கடைவீதியில் 1950-ல் பிறந்தார். சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட, தனது தாயால் வளர்க்கப்பட்டார். பள்ளிப் படிப்பை நெல்லையில் முடித்த பின், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அதன் பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பயின்றார்.

அவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும் மாசானமணி என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

அழகர் கோயில்

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் முன்னோடியான நா. வானமாமலை, தமிழறிஞர் சி.சு.மணி ஆகியோரின் கருத்துகளால் கவரப்பட்டு தமிழ் இலக்கியச் சூழலுக்குள் வந்தார். பின்னர், தனது முனைவர் பட்டத்துக்காக அழகர் கோயில் குறித்து ஆய்வு செய்தார். அழகர் கோயிலைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று மக்களின் பண்பாட்டு அசைவுகளுடன் கூடிய ஆய்வை சமர்ப்பித்தார். அதே அய்வுக்கட்டுரை நூலாக வெளியாகி தமிழக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. சுமார் 30 ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்த இந்த நூலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மறு வெளியிடு செய்தது.

பேராசிரியர் பணி

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் மூட்டா ஆசிரியர் சங்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

அதன் பின்னர், மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். தனது ஆழமான கருத்துகளால் மாணவர்களுக்குத் தமிழின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தினார். அவரது மாணவரான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் "தொ. பரமசிவன் அவர்கள் எனக்கு தமிழ் ஆசிரியராகக் கிடைத்த கொடையால் மட்டுமே இப்போது வரையிலும் எனக்குத் தமிழ் மீது ஆர்வம் குறையாமல் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஏராளமான மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியிருக்கிறார்.

அதன் பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1998 முதல் 2008 வரை தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.

கடவுள் இருந்தால் நல்லது!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு மையத்தின் பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். அவர் எழுதிய, ‘அறியப்படாத தமிழகம்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ உள்ளிட்ட 14-க்கும் அதிகமான நூல்கள் அவரை வாசகர்களிடம் அறிமுகப்படுத்தின. பெரியாரிய சிந்தனையில் கவரப்பட்ட அவர் நாட்டார் தெய்வங்கள் குறித்து புதிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறார். ’கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இருந்தால் நல்லது என்று சொல்கிறேன்’ என்பது அவருடைய பிரபலமான வாசகம்.

ஆய்வுகள்

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழியே நுண் அரசியலைப் புரியவைத்தவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

படைப்புகள்

  • அழகர் கோயில்
  • அறியப்படாத தமிழகம், 2009
  • இந்து தேசியம்
  • தெய்வங்களும் சமூக மரபுகளும்
  • தெய்வம் என்பதோர்
  • நாள் மலர்கள் தொ. பரமசிவன்
  • நீராட்டும் ஆறாட்டும்
  • பண்பாட்டு அசைவுகள்
  • விடுபூக்கள்
  • பாளையங்கோட்டை
  • மரபும் புதுமையும்
  • தொ. பரமசிவன் நேர்காணல்கள்
  • இதுவே ஜனநாயகம்
  • மஞ்சள் மகிழை
  • மானுட வாசிப்பு
  • Paran
  • சமயங்களின் அரசியல்
  • சமயம் அல்லது உரையாடல்
  • செவ்வி
  • உறைகல்
  • நான் ஹிந்து அல்ல நீங்கள்?

மறைவு

நாட்டார் தெய்வங்கள் பண்பாட்டு ஆய்வுக்காக சுமார் ஒரு லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் கால்நடையாகவே பயணம் மேற்கொண்ட தொ. பரமசிவன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 2020ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி திடீர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியாரிய சிந்தனையாளராகத் திகழ்ந்த தொ.பரமசிவன், பெரியார் நினைவு நாளிலேயே மறைந்தார்.

நாட்டுடைமை

தொ. பரமசிவன் அவர்களின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலச்சுவடு, நற்றிணை, எதிர் வெளியீடு, லியோ புக்ஸ், ரிதம் வெளியீடு போன்ற நிறைய பதிப்பகங்கள் அவரது படைப்புகளை வெளியிட்டிருக்கின்றன.