under review

ம.சா. அறிவுடைநம்பி

From Tamil Wiki
Revision as of 14:29, 12 November 2023 by ASN (talk | contribs) (Para Added: Images Added; Link Created: Proof Checked.)
ம.சா. அறிவுடைநம்பி

ம.சா. அறிவுடைநம்பி (மனோன்மணி சாம்பசிவனார் அறிவுடைநம்பி) (மார்ச் 06, 1954 - ஜனவரி 03, 2014) எழுத்தாளர், ஆய்வாளர். தமிழறிஞர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பல ஆய்வு நூல்களை எழுதினார். அரிய நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார்.

பிறப்பு, கல்வி

மனோன்மணி சாம்பசிவனார் அறிவுடைநம்பி என்னும் ம.சா.அறிவுடைநம்பி, மார்ச் 6, 1954 அன்று, முனைவர் ச.சாம்பசிவனார் - சா.மனோன்மணி இணையருக்குப் பிறந்தார். தந்தை சாம்பசிவனார் தமிழறிஞர். ‘தமிழ் மாருதம்’ என்ற திங்களிதழின் ஆசிரியர். அறிவுடைநம்பி,  பள்ளிக் கல்வியை நிறைவுசெய்தார். கணிதத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை மாகராசர் பல்கலைக்கழகத்தில் ‘திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக்கொள்கைகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ‘தஞ்சை மராட்டிய மன்னர்கள் வளர்த்த நுண்கலைகள்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முதுமுனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர் பட்ட ஆய்வேட்டை முதன் முதலில் தமிழில் எழுதிப் பட்டம் பெற்றவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் முதுமுனைவர் பட்டதாரி.

முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி

தனி வாழ்க்கை

ம.சா. அறிவுடைநம்பி, தஞ்சை  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய கையெழுத்துச்சுவடிகள் துறையில் இளநிலை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், சிறப்பாய்வாளர், விரிவுரையாளர், இணைப்பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் என பல்வேறு படிநிலைகளில் பணியாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். முனைவர் வ.ஐ.சுப்பிரமணியன், கா.ம. வேங்கடராமையா, புலவர் செ.இராசு உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் இணைந்து பணிசெய்தார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர்.

ம.சா. அறிவுடைநம்பி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ம.சா. அறிவுடைநம்பி, 170-க்கும் மேற்பட்ட இலக்கிய, ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். ‘ஆவணம்’ இதழில் தொடர்ந்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். 17 நூல்களை எழுதினார். 13 நூல்களைப் பதிப்பித்தார். ம.சா. அறிவுடைநம்பியின் மேற்பார்வையில் பதினான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றனர். 65 பேர் இளம் முனைவர் பட்டம்  பெற்றனர்.

கல்விப்பணியாகக் கொழும்பில் நடைபெற்ற இஸ்லாமியக் கருத்தரங்கம், தொல்காப்பியக் கருத்தரங்கம் போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மலேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றார். பல்கலைக்கழக அளவில் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசித்தார்.

விருது/பரிசுகள்

2002-ல், நெய்வேலியில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி சிறப்பு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்..

மறைவு

ம.சா. அறிவுடைநம்பி, ஜனவரி 3, 2014 அன்று மாரடைப்பால் காலமானார்.

நினைவு

ம.சா. அறிவுடைநம்பி நினைவைப் போற்றும் வகையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘சுவடியியல் மையம்' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே ஆய்வுலகிலும் கவனம் செலுத்தி அரிய பல நூல்களைப் பதிப்பித்தவராகவும், இலக்கிய ஆய்வுக் கட்டுரை நூல்களை எழுதியவராகவும் ம.சா. அறிவுடைநம்பி அறியப்படுகிறார்.

நூல்கள்

பதிப்பித்த நூல்கள்
  • தமிழக வரலாற்றறிஞர்கள் தொகுதி 1, (இணைப் பதிப்பாசிரியர்), 1993
  • ஆறாம் உலகச் சைவ மாநாட்டு மலர், (இணைப் பதிப்பாசிரியர்), 1997
  • காகிதச்சுவடி ஆய்வுகள், (பதிப்பாசிரியர்), 2000
  • பதிப்பு நிறுவனங்கள், (பதிப்பாசிரியர்), 2002
  • தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஆய்வுப் பனுவல், (இணைப் பதிப்பாசிரியர்), 2003
  • சுவடிப் பதிப்பாசிரியர்கள்,(பதிப்பாசிரியர்), 2004
  • பதிப்பியல் நெறிமுறைகள், (பதிப்பாசிரியர்), 2004
  • ஆராய்ச்சி நெறிமுறைகளும் சுவடிகளைப் பதிப்பித்தலில் எழும் சிக்கல்களும், 2004
  • தமிழக அறிஞர்கள் கடிதங்கள், (பதிப்பாசிரியர்), 2006
  • அமைதித்தமிழ்(பதிப்பாசிரியர்), 2006
  • தமிழும் உலக ஒற்றுமையும், 2006
  • சுவடியியல் கலைச்சொல் விளக்க அகராதி, 2006
  • ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கியம்,(பதிப்பாசிரியர்), 2007
எழுதிய நூல்கள்
  • போதமும் சுபக்கமும், 1978
  • மூவர் தேவாரம் முதல் 5 பதிகங்கள், (மூலமும் உரையும்), 1981
  • திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக்கொள்கைகள், 1986
  • சைவத்தமிழ், 1992
  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் பகுதி 1, 1994
  • புத்துலகச் சிந்தனைகள், 2003
  • உள்ளங்கவர் ஓவியம், 2003
  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் -பகுதி 2, 2003
  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் -பகுதி 3, 2004
  • நிகழ்வுக் கலைகள், 2004
  • திருக்கோயில் வளர்க்கும் ஓவியக்கலை, 2004
  • தஞ்சை மராட்டிய மன்னர்கள் வளர்த்த நுண்கலைகள், 2006
  • இலக்கியச்செல்வம், 2006
  • பதிப்புச் சிந்தனைகள், 2006
  • குமரகுருபரர், 2007
  • சைவமும் வாழ்வியலும், 2007
  • ஏட்டிலக்கியம், 2008

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.