செந்தமிழ் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 09:42, 17 February 2022 by Jeyamohan (talk | contribs)
செந்தமிழ்

செந்தமிழ் - இதழ் வெளிவந்த ஆண்டு (1902) தமிழாய்வுகளுக்கான இதழ். நூறாண்டுகளுக்கும் மேலாக மாதம் தோறும் வெளிவந்தது

வெளியீடு

மதுரையில் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் 7- டிசம்பர் 1902 முதல் வெளிவரும் இதழ் இது. ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்த 12 இதழ்களைத் தொகுப்பாக்கித் தரமாகக் கட்டகம் செய்து விற்பனை செய்துள்ளது. மதுரை தமிழ்ச்சங்க முத்திசாசாலையில் இருந்து செந்தமிழ் இதழ் சுபகிருது வருடம்-கார்த்திகை மாதம் (1902 டிசம்பர் 7) மதுரைத் தமிழ் சங்கத்தின் மாத இதழாக தோற்றுவிக்கப்பட்டது. இவ்விதழின் நோக்கம்,

“இதுகாறும் அச்சிடப்படாத செந்தமிழ் நூல்களும், தமிழ் நாட்டுப் புராதன சரிதங்களும் சாஸனங்களும், வடமொழியினும் ஆங்கிலத்தினும் தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நூன் மொழிபெயர்ப்புக்களும், தமிழின் அருமை பெருமை அடங்கிய விஷயங்களும், தமிழாராய்ச்சியைப் பற்றியனவும், தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் இதன் வாயிலாக வெளிவரும்” (பக்:10).

என்பதாகும். இதழின் பத்திராசிரியராக  தொகுதி 1 முதல் தொகுதி 2 வரை ரா.ராகவையங்காரும், தொகுதி 3 முதல் தொகுதி 9 வரை மு.ராகவையங்காரும், தொகுதி 10 முதல் தொகுதி 46 வரை நாராயணையங்காரும் இருந்துள்ளனர்

உள்ளடக்கம்

செந்தமிழில் தமிழ் ஆய்வுகளுடன் சம்ஸ்கிருத ஆய்வுகளும் வெளிவந்தன. நாராயணஸ்வாமி ஐயர் எழுதிய சமஸ்க்கிருத விருந்த மஞ்சரி போன்றவை இடம் பெற்றுள்ளன. சீனிவாசப் பிள்ளை எழுதியுள்ள தமிழ் வரலாறு போன்ற கட்டுரைகள் உள்ளன.தனி நூலாக வெளிவராத பல பழமையான தமிழ் இலக்கியங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. இரணியவதைப் பரணி என்னும் நூல் அவற்றுள் ஒன்று.சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு, தமிழ்த் தேர்வு விபரம், பல்சுவைக் குறிப்புகளை வெளியிட்டது.

ரா.ராகவையங்கார்

ரா.ராகவையங்கார் ஆசிரியராக இருந்த காலத்தில் இவ்விதழ் எக்காரணத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவேற்றும் வகையில், பதிப்பு, ஆராய்ச்சி, நூல் மதிப்பீடு, கல்வெட்டு, சாசனம், மொழிபெயர்ப்பு, சரித்திரம் ஆகியன குறித்து இதழில்  வெளிவந்த கட்டுரைகளின் வழி அறிய முடிகிறது. இவர் ஆசிரியராக இருந்த காலத்து நல்லிசைப் புலவர் மெல்லியலாளர்கள் குறித்தும், பரிபாடலுக்கு பரிமேழலர் உரை எழுதியதையும், சி.வை.தா 1885இல் பதிப்பித்து வெளியிட்ட தொல்காப்பிய பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரையின் பின்னான்கு இயல்கள் பேராசிரியர் உரை என்பதையும், புறநானூறு ‘மீனுன் கொக்கின்’ என்னும்  செய்யுளையும் ஆராய்ந்து முதன் முதலில் செந்தமிழில் வெளியிடுகிறார். 1902-1904 ஆகிய இவ்விடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஐந்தினை ஐம்பது (1902), கனாநூல் (1902), நேமிநாதம் மூலமும் உரையும் (1903), திருநூற்றந்தாதி மூலமும் உரையும் (1904), திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் (1904), முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (1905), இனியவை நாற்பது மூலமும் உரையும் (1903), பன்னிரு பாட்டியல் (1904), நான்மணிக்கடிகை (1904), வளையாபதி செய்யுட்கள் (1903) முதலிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார்.

மு.இராகவையங்கார்

செந்தமிழ் இதழில் தமிழறிஞர் மு.இராகவையங்கார் முதன்மைப் பங்களிப்பாற்றியிருக்கிறார்.முதல் எட்டு ஆண்டுகளுக்கு செந்தமிழ் இதழின் உதவியாசிரியராக இருந்தார். அதன்பிறகு 43ஆம் தொகுதி வரை வெளிவந்த செந்தமிழ் இதழ்ப் பகுதிகளில் ஆய்வுகளை வெளியிட்டார். இலக்கியம், இலக்கணம்,  மொழிநூல், எழுத்து வரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, நாட்டு வரலாறு, சமயம், பண்டை ஆசிரியர்கள், பண்டைத் தமிழர்களின் ஒழுக்கநெறி, கல்வெட்டுகள், இடப்பெயர்கள், பண்டைக் காலத்துச் சான்றோர்கள் முதலிய பலபொருள்கள் இவருடைய ஆய்வுகளில் இடம்பெற்றிருக்கின்றன.  மேலும், பழந்தமிழ்ச் சுவடிகளிலிருந்து வெளிவந்த நூல்கள், வாழ்த்துப்பா, இரங்கற்பா என்றவாறும் இவர்தம் பணிகள் செந்தமிழ் இதழில் இடம்பெற்றிருக்கின்ற.  விலகி பயிர்தொழில், விவசாயம், தொழில், வர்த்தகம், இந்து மதம், ஈயம், அறிவு, நித்திரை, ஒற்றுமை, கரிவாயு, மதுவிலக்கு, ஈகை, யானையாராய்ச்சி, குதிரையாராய்ச்சி, பக்தி என பிற தன்மையிலான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஜனவிநோதினி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் வெளியானவற்றையும் இவ்விதழில் வெளியிட்டுள்ளனர். இவை இவ்விதழின் நோக்கத்தில் இருந்து மாறுபட்ட செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன.  இவர் ஆசிரியராக இருந்தக் காலத்தில் இதழின் வழி பதிப்பித்து வெளியிட்ட நூல்கள் நரிவிருத்தம், சிதம்பரப் பாட்டியல், திருக்கலம்பகம் மூலமும் உரையும், விக்கிரம சோழனுலா, சந்திராலோகம், கேசவபெருமாள் இரட்டை மணிமலை, பெருந்தொகை, நூற்பொருட் குறிப்பு, நிகண்டகராதி, திருக்குறள் பரிமேலழகருரை முதலியன ஆகும். இவரே ‘ஐயன் ஆரிதன்’ என்னும் புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். இவர் தமிழர் நேசன், கலைமகள், வித்யாபாநு, ஹரிசமய திவாகரன், ஸ்ரீ வாணிவிலாஸினி முதலிய  இதழ்களிலும் எழுதியுள்ளார்.   

இதழ் தன்னுடைய நோக்கத்தில் இருண்டு விலகி செயல்பட்டிருகிறது என்பதை உணர்ந்து பாண்டித்துரைத் தேவர் இச்செயலைச் செய்கிறார். அதுபற்றி சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவருக்கு பாண்டித்துரைத்தேவர் எழுதிய கடிதம் வழி இதனை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. அவை,

“மதுரைத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்ப் பத்திராதிபராய் இருந்த மு.இராகவையங்காரை நீக்கித் திரு.நாராயணையங்காரவர்களை எடிற்றராக நியமித்திருக்கிறேன். இனி, செந்தமிழ் நல்ல  கட்டுரைகளோடு உரிய காலங்களில் தவறாது வெளிவருவதற்கு வேண்டுவன செய்திருக்கிறேன். தங்கள் என்மீது தயைகூர்ந்து நம் செந்தமிழ் தம் விஷயங்களைக் கொண்டு முன்னிலுஞ் சிறந்து விளங்குமாறு செய்தற்குக் கேட்டுக்கொள்ளுகிறேன். தங்களன்பன் பாண்டித்துரை அக்கிராசனாதிபதி (1970:108)”.

ஆனால், நாராயணையங்கார் ஆசிரியர் பொறுப்பு ஏற்ற சில நாட்களிலே பாண்டித்துரைத்தேவர் இறந்து விடுகிறார். இதனால், புதியதாய் ஆசிரியர் பொறுப்பில் ஏற்பட்ட மாற்றமும் பாண்டித்துரைத் தேவரின் இறப்பும், அதனைத் தொடர்ந்து சங்க அங்கத்தினர் சிலரின் இறப்பும் இதழைத் தொடர்ந்து வெளியிடுவது என்பதே நாராயணையங்காருக்குச் சவாலாக இருக்கிறது. இவர் ஆசிரியராக இருந்தக் காலத்தில் மேற்சொன்ன விஷயங்கள் தவிர்க்கப் பட்டதா என்றால் இல்லை.  இவை தவிர்த்துப் பார்த்தால் சங்க அறிக்கைகள், வரவு செலவு கணக்கு குறித்தும், பிற சங்கங்கள் பற்றிய விஷயங்களும் தொடர்ந்து இதழில் வெளியிடப்பட்டுள்ளன. போக போக இவ்விதழின் தரம் குறைந்து ஆய்வு இதழாக மட்டும் செயல்படும் இதழ் போல் அல்லாமல் பன்முக தன்மை பொருந்திய இதழாக உருமாறியுள்ளதை இதழில் வெளியான கட்டுரைகளின் வழி அறிய முடிகிறது. மதுரைத் தமிழ்ச் சங்கமும் செந்தமிழ் இதழும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகி மாறுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டே செந்தமிழ் செல்வி இதழ் தோற்றுவிக்கப்பட்ட

இலக்கிய இடம்

’ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள்.  தமிழ்நாட்டுப் பெரும் பேராசியனாய் அமைந்து தமிழ்மக்கள் வீடுதோறுஞ் சென்று தமிழர் கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைக்கே உரியதாயிருந்தது.  (ஆராய்ச்சித் தொகுதி, முன்னுரை, பக்.10-11)" என்று பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

உசாத்துணை