under review

கைம்மை

From Tamil Wiki
Revision as of 16:40, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kaimmai. ‎


கைம்மை : கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை. கைம்மையை ஒரு நோன்பாக வாழவேண்டும் என்று தமிழ்நூல்கள் கூறுகின்றன. கடுமையான தற்கட்டுப்பாடுகளும், சமூகக் கட்டுப்பாடுகளும் இருந்ததை சங்ககால நூல்கள் காட்டுகின்றன

சொல் வளர்ச்சி

கைம்மை என்னும் சொல்லுக்கு எஸ். வையாபுரிப்பிள்ளை பேரகராதி கீழ்க்கண்ட பொருள்களை அளிக்கிறது. கணவனைப் பிரிந்திருக்கும் நிலை. கணவனை இழந்த நிலை. சிறுமை.( கைம்மை கொள்ளேல் காஞ்சன, இது கேள் ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை ஆர் உயிர் உண்டது ஆயினும் - மணிமேகலை 20-126)) அறிவின்மை , பொய் (கைம்மைசொல்லி- நாலாயிர திவ்யபிரபந்தம். திருவாய்மொழி)

இச்சொல்லில் வேர்ச்சொல் கை என்று வையாபுரிப்பிள்ளை சொல்கிறார். கையறு நிலை என்னும் சொல்லில் இருந்து வந்தது. கையறு நிலை என்பது புறத்துறைகளில் ஒன்று. தலைவனோ தலைவியோ இறந்தமைக்கு அவர் ஆயத்தார் முதலானோர் மிக வருந்தியமையைச் சொல்வது. பொதுவாக மறைந்த அரசனை எண்ணி வருந்தி எழுதப்படும் பாடல்கள் இதில் வருகின்றன. (கழிந்தோர் தேஎத் தழிபட குறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை- தொல்காப்பியம் பொருளியல் 79)

ஆனால் கைம்மை என்பதற்கு இன்னொரு வேர்ச்சொல்லும் எண்ணத்தக்கதே. கைப்பு என்னும் சொல் கசப்பு என்பதன் முன்வடிவம். (கைப்பறா பேய்ச்சுரையின் காய்- நாலடியார். 116) வெறுப்புக்கும் துயரத்திற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழின் தொல்வடிவங்கள் நிலைகொள்ளும் மலையாளத்தில் கைப்பு என்பது கசப்பு, துயர் என்று பொருள் கொள்கிறது

கைம்மை நெறிகள்

கைம்பெண்கள் கொள்ளவேண்டிய நெறிகள் என்னென்ன என்று புறநானூற்றில் 125, 143, 224, 237, 242, 246, 250, 253, 261, 272, 280, 326, 353 ஆகிய பாடல்களிலும், நற்றிணையில் 272, 353 ஆகிய பாடல்களிலும் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

  • நெய் போன்றவற்றை உண்ணக்கூடாது. கையால் பிழிந்து எடுத்த மிஞ்சிய உணவை புளிகலந்து உண்ணவேண்டும். பாயில்லாமல் தரையில் படுக்கவேண்டும் ( நறுநெய் தீண்டாது அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு. புறநாநூறு 246)
  • பொழுதை மறுத்து பொருந்தா நேரத்திலேயே உண்ணவேண்டும் (பொழுது மறுத்தின்னா வைகலுண்ணும்- ஒக்கூர் மாசாத்தனார் புறாநாநூறு. 248)
  • கூந்தல் களையும் வழக்கம் இருந்தது (கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி -தாயங்கண்ணியார் புறநாநூறு 250) (ஒள்நுதல் மகளிர் கைம்மை கூரஅவிர் அறல் கடுக்கும் அம்மென் குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே- கல்லாடனார். புறநாநூறு 25) (கொய் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉப் போல- ஆவூர் மூலங்கிழார் புறநாநூறு 261)
  • வளையல்களை நீக்கினர் ( வளைஇல், வறுங்கை ஓச்சிக் கிளையுள் ஒய்வலோ?- குளம்பாதாயனார்.புறநாநூறு 253)

கைம்மை நோன்பை விட உடன்கட்டை ஏறுதலே சிறந்தது என்று பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு போன்ற கவிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(பார்க்க உடன்கட்டை ஏறுதல் )

கைம்பெண்களுக்கான பெயர்கள்

கைம்பெண்களை புறநாநூறு கீழ்க்கண்ட சொற்களால் குறிப்பிடுகிறது

  • தொடி கழி மகளிர் : அணிகளை கழற்றிவிட்ட பெண்கள் (தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்,பாடுநர் கடும்பும் பையென்றனவே .பெருஞ்சித்திரனார். புறநாநூறு 238)
  • ஆளில் பெண்டிர் : தன்னை ஆள்பவன் இல்லாமலான பெண்டிர் ( ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண் பனுவல் போல. கபிலர்.நற்றிணை 353)
  • உயவல் பெண்டிர்: துயரம் நிறைந்த பெண்கள். (உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ. பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு.புறநாநூறு 246
  • கழிகலமகளிர் :நகைகளை கழற்றிவிட்ட பெண்கள் (சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல வழிநினைந் திருத்த லதனினு மரிதே- மாறோக்கத்து நப்பசலையார். புறநாநூறு 280 )
  • கழிகல மகடூ : நகைகளை கழற்றிவிட்டபெண்கள் (கழிகல மகடூஉப் போல புல்என் றனையால், பல்அணி இழந்தே :ஆவூர் மூலங்கிழார் புறநாநூறு 261)
  • பருத்திப்பெண்டிர்: பருத்தியாடை அணிந்த பெண்கள் (பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் புறநாநூறு 125)
  • தாபதமகளிர்: துயருற்ற மகளிர். தாபத நிலை என்பது புறத்துறைகளில் ஒன்று. தாபதநிலை என்னும் துறையினவாகக் குறிக்கப்பட்ட மூன்று பாடல்கள் புறநாநூற்றில் உள்ளன.

கைம்மைநோன்பும் தமிழ்ச்சமூகமும்

சங்ககாலத்தில் உடன்கட்டை ஏறுதல் முதன்மை விழுமியமாக முன்வைக்கப்பட்டது. கைம்மைநோன்பு அடுத்தபடியாக கூறப்பட்டது. ஆனால் இது உயர்குடியினருக்குரிய ஒழுக்கமாகவே இருந்தது என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. சமூகவியல் நோக்கில் ஒரு போர்ச்சமூகம் முழுமையாக உடன்கட்டை ஏறுதலையோ, கைம்மை நோன்பையோ கொள்ள முடியாதென்றே ஊகிக்கமுடிகிறது. நிகழ்கால சமூகப்பதிவுகளிலும் ஆட்சிசெய்யும்குடிகள், நிலவுடைமைக் குடிகள், வைதிகக்குடிகளில் மட்டுமே கைம்மை நோன்பு உள்ளது. எஞ்சிய குடிகள் மறுமண உரிமை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:43 IST