அணில் அண்ணா

From Tamil Wiki
Revision as of 13:04, 16 February 2022 by Jeyamohan (talk | contribs)

அணில் அண்ணா (புவிவேந்தன்) தமிழில் வெளிவந்த அணில், அணில் மாமா, அணில் காமிக்ஸ் இதழ்களின் நிறுவனர், ஆசிரியர். அணில் அண்ணா என்ற பெயரில் அணில் இதழில் கதைகள் எழுதினார். குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

பிறப்பு

அணில் அண்ணா என்ற பெயரில் எழுதிய புவிவேந்தன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் விநாயகம். ஜோக்கர் மணி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். இளமையில் கதைகள் எழுதத் தொடங்கினார். மளிகைக் கடை நடத்திக்கொண்டிருந்தவர் சினிமாவுக்கு கதை எழுதவேண்டுமென்னும் எண்ணத்தில் சென்னைக்குச் சென்றார். அங்கே பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டே சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். அணில் பத்திரிகையை 186 ல் தொடங்கினார். 1985 வரை சென்னையிலேயே அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் புதுச்சேரிக்கு வந்து அணில் அச்சகம் என்ற ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கி அதில் அணிலை அச்சிட்டு 1992 வரை நடத்தினார்.

பின்னாளில் புதுச்சேரி உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தின் தலைவராகவும், புதுச்சேரி கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குநராகவும், புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் பொருளா ளராகவும் பதவி வகித்த புவிவேந்தன், அ.தி.மு.க.வின் புதுச்சேரி மாநில இணைச் செயலாளராகவும் இருந்தார்.. மாலைபூமி என்ற நாளிதழையும், ஓம் விநாயக விஜயம் என்ற ஆன்மீக மாத இதழையும் நடத்தினார். அணில் பதிப்பகத்தின் சார்பில் திட நூல்களை பிரசுரித் துள்ளார்.

அவருடைய மரணம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு அணில் பத்திரிகை பற்றி அவர் எழுத்தாளர் பி.என்.எஸ்.பாண்டியனிடம் சொன்னது:

“சென்னையில் நான் தங்கியிருந்தபோது, பல பத்திரிகை களுக்குக் கதை எழுதி அனுப்புவேன்.  சிறுவர் கதைகளையும் எழுதுவேன். அப்போது தோன்றிய யோசனைதான் மாயாஜாலக் கதைகள். திருவல்லிக்கேணி பக்கம் செல்வேன். அங்கு தெரு ஓரங்களில் விற்கும் ஆங்கிலப் புத்தகங்களைப் பார்ப்பேன். ஓவியங்கள் அதிகமுள்ள புத்தகங்களை 10 பைசா, 20 பைசா கொடுத்து வாங்குவேன். உதாரணமாக ஒரு அட்டையில் ஒரு இளவரசி குதிரையில் வருவது போன்று ஒரு படம் இருக்கும். அந்தப் படத்தைப் பார்க்கும்போதே என் மனதில் கற்பனை ஊற்றெடுக்கும். அந்தக் குதிரைக்குப்பதில் ஒரு ஆட்டின் மீது இளவரசி அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். சாகசங்கள் பிறக்கும். கதைக்கும் தலைப்பை வைத்துவிடுவேன். ‘ஆட்டுக்கிடா இளவரசி’. ஓவியர் ரமணியிடம் எடுத்துச் சென்று ஆட்டுக்கிடா இளவரசியை வரையச் சொல்வேன். அற்புதமாக ஓவியம் போட்டுத்தருவார்.  பின்னர் அந்த ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே கதையை எழுதத்தொடங்குவேன். அதில் ஒரு சித்திரக்குள்ளன் இருப்பான். எறும்பு சாகசம் செய்யும். கோழி பறந்து பறந்து சண்டை போடும். கற்பனை சிறகடித்துப் பறக்கும்.

ஓவியர் உபால்டு வரைந்த படக்கதைகளைச் சிறுவர்கள் விரும்பி வாசித்துள்ளனர்.  என்னைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு நாளும் மழலைப்பட்டாளம் என் ஆபிஸ் தேடி வரும். பல பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துவந்து என்னைச் சந்தித்து உரையாடிவிட்டுப் போவார்கள்.  நான் அவர்களுக்குப் பரிசளிப்பேன். அவர்களும் எனக்குப் பழம், புத்தகம் வாங்கிவந்து தருவார்கள். முதலில் அச்சுக்கோர்த்து அச்சடித்தும், பின்னர் சிலிண்டர் பிரிண்டில் அச்சடித்தும், ஒருகட்டத்தில் ஆப்செட் பிரிண்டில் 50 ஆயிரம் பிரதிகளை அச்சடித்தும் அணில் சாதனை புரிந்திருக்கிறது.

வீரப் பிரதாபன்

அணில் அண்ணாவின் புகழ்பெற்ற கதாபாத்திரம் வீரப்பிரதாபன். அந்தத் தொடரில் 60 கதைகளுக்கு மேல் வெளிவந்துள்ளன. வீரப்பிரதாபன் யார் கண்ணுக்கும் தெரியாத மின்னல் அம்பு (மழை பெய்தால் மட்டும் தெரியும்), பறக்கும் அரக்கியின் ரத்தம் அடங்கிய சிமிழ், மாய மாணிக்க கல் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டவர். கட்டைவிரல் அளவு உள்ள மாயாஜாலக் குள்ளன் அவருடன் இருப்பார். ஒரு காலத்தில் வீரப்பிரதாபன் கதைகள் மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனை ஆகின.

மறைவு

அணில் அண்ணா புவிவேந்தன் 14 ஜனவரி 2009 ல் புதுச்சேரியில் காலமானார்.

உசாத்துணை