under review

அபிதான சிந்தாமணி: Difference between revisions

From Tamil Wiki
(Reset to Stage 1)
No edit summary
Line 41: Line 41:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
* தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdlJxy அபிதான சிந்தாமணி, தமிழ் மின் நூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdlJxy அபிதான சிந்தாமணி, தமிழ் மின் நூலகம்]
*[https://www.jeyamohan.in/731/ அபிதான சிந்தாமணி, கடல் நிறைந்த கமண்டலம், எழுத்தாளர் ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/731/ அபிதான சிந்தாமணி, கடல் நிறைந்த கமண்டலம், எழுத்தாளர் ஜெயமோகன்]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Being created}}
{{Finalised}}

Revision as of 21:35, 12 December 2022

அபிதான சிந்தாமணி

அபிதான சிந்தாமணி (1910) தமிழின் தொடக்ககாலக் கலைக்களஞ்சியங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆ. சிங்காரவேலு முதலியாரால்  தொகுக்கப்பட்டது. இன்று புராணச்செய்திகள் மற்றும் பழந்தமிழ் வாழ்க்கைமுறை பற்றிய செய்திகளின் ஆவணமாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு

அபிதான சிந்தாமணி கலைக்களஞ்சியத்தை எழுதித் தொகுத்தவர் ஆ. சிங்காரவேலு முதலியார். சென்னை பச்சையப்பன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபடியே அபிதான சிந்தாமணி  கலைகளஞ்சியத்தை தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்த பின்னர் இரண்டாம் பதிப்பிற்காக  ஆ. சிங்காரவேலு முதலியார் மேலும் தகவல்களை சேர்த்துக் கொண்டேயிருந்தார். இரண்டாம் பதிப்பு வெளிவரும் முன்னரே 1931-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரணமடைந்தார்.

முன்னோடி முயற்சிகள்

இந்திய மொழிகளில் அடிப்படையான செய்திகளை தொகுத்துவைக்கும் நூல்கள் நிகண்டு , கோசம் என்னும் பெயர்களில் உருவாக்கப்பட்டிருந்தன. நவீனக் கலைக்களஞ்சியத்தின் முன்னோடி வடிவங்கள் இவை. பழங்காலத்தில் அகரவரிசையில் தலைப்புகளை அளிக்கும் வழக்கம் இல்லை. யாழ்ப்பாணம் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய அபிதான கோசம் என்னும் நூலே தமிழில் அகரவரிசையில் வெளிவந்த முதல் கோசம் வகைச்சார்ந்த நூல். ஆகவே அதுவே தமிழின் முதல் கலைக்களஞ்சியம் என கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து வெவ்வேறு கோசங்கள் அதை ஒட்டியே எழுதப்பட்டன. அவை முழுமையற்ற முயற்சிகள்.

எழுத்து, வெளியீடு

ஆ.சிங்காரவேலு முதலியார் 1890-ல் புராணநாமாவலி என்னும் பெயரில் அபிதான சிந்தாமணியின் பணியை தொடங்கினார். அதன் பணி முடிந்து பதிப்பிக்கும் முயற்சியில் சில ஆண்டுகள் சென்றன. 1910-ல் அபிதான சிந்தாமணி வெளியாகியது.

அபிதான சிந்தாமணிக்கு முன்னர் அபிதான கோசம் வெளியாகியது. அதையொட்டி சில சிறு கோசம் என்னும் கலைக்களஞ்சியங்கள் வெளியாயின. அபிதான சிந்தாமணியே முழுமையான முதல் தமிழ்க் கலைக்களஞ்சியம். தமிழின் நவீனக் கலைக்களஞ்சியம் அதன் பின் ஏறத்தாழ நாற்பதாண்டுகள் கழித்து வெளியாகியது.

(பார்க்க தமிழ் கலைக்களஞ்சியம் )

உள்ளடக்கம்

அபிதான சிந்தாமணி,  தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதான கோசத்தைவிட விரிவாகவும் உள்ளடக்கப் பரப்பில் ஆழமாகவும் அமைந்தது. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மொழியில் கலைக்களஞ்சிய வரிசையில் தமிழகத்திலிருந்து வெளிவந்த முதல் நூல் இது. இதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான கலைக்களஞ்சியம் அபிதான கோசம்.

தமிழ் புத்தகம்.jpg

அபிதான சிந்தாமணி நூலில் வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகரவரிசைகளில் தொகுத்து வழங்குகிறது.

அபிதான சிந்தாமணி, முதன்மையாக ஒரு புராணக் கலைக்களஞ்சியம். இந்நூலில் எல்லா புராணங்களும் அவற்றின் கதாபாத்திரங்களுக்குக் கீழே ரத்தினச் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பிறமொழிகளில் உள்ள புராணக் கலைக்களஞ்சியங்களில் தமிழ்ப் புராணங்கள் அனேகமாக இருப்பதில்லை. ஒட்டுமொத்த இந்திய புராணங்கள் அளவுக்கே தமிழில் தனிப்புராணங்கள் உண்டு. அவையெல்லாம் இந்நூலில் உள்ளன. இந்நூலில் உள்ள தகவல்கள் இன்னமும் இந்திய தேசிய கலைக்களஞ்சியங்களில் சேர்க்கப்படவில்லை.

தொன்மையான சாஸ்திரநூல்கள் மருத்துவ நூல்கள் சோதிட நூல்கள் போன்றவற்றின் தகவல்களும் இந்த நூலில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர் சிற்பவியல் ஆலயங்களைப் பற்றிய தகவல்கள் , தொல் தமிழ் இலக்கியங்களின் தகவல்கள் இந்நூலில் சுருக்கமாக கொடுக்கபப்ட்டிருக்கின்றன. ஆசிரியர்கள், நூல்கள் குறித்த விரிவான தகவல்கள் சுருக்கமான மொழியில் இந்நூலில் உள்ளன. ஆனால் அக்காலகட்டத்தில் தமிழ்நூல் ஆய்வுகள் முதற்கட்டத்தில் இருந்தன என்பதனால் இவை விரிவாகவும் முழுமையாகவும் இல்லை.

அபிதான சிந்தாமணி

தமிழரின் அன்றாட வாழ்வுமுறை குறித்து மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறது அபிதான சிந்தாமணி. சாப்பாடு, திருமணச் சடங்குகள், சாவுச்சடங்குகள், சாதிகள், உபசாதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதைத்தவிர அன்றைய அறிவியல் தகவல்களையும் அளித்திருக்கிறார் சிங்காரவேலு முதலியார். அவை இந்நூலில் போதாமையுடன் உள்ளன. பல அறிவியல் விஷயங்கள் அக்காலகட்டத்தில் எப்படிப் பார்க்கப்பட்டன என்பதற்கான ஆதாரம் அவை.

அபிதான சிந்தாமணியின் தலைப்புகள் அகரவரிசையில் அமைந்துள்ளன. அதன் பலதுறைத் தொகுப்பை அவ்வரிசையே காட்டுகிறது. உதாராணமாக, க வரிசையில் ககந்தன், ககபதி, ககமுகன், ககனமூர்த்தி, ககுத்சதன், ககுத்து, ககுத்தன், ககுத்மி, ககுபு, ககுபை, ககுப்தேவி, ககேந்திரன், ககோலன், ககோளர், ககோள விவரணம்…

ஒரு தலைப்பின் கீழ் செய்திகளை கதைத்தன்மை இல்லாமல் செய்தித்தன்மையுடன் மிகச்சுருக்கமான மொழியில் கொடுத்திருப்பதில் நவீன கலைக் களஞ்சியங்களின் பாணியில் இது அமைந்துள்ளது.

உதாரணம். கண்ணகி என்ற தலைப்பில் இரண்டு பத்திகள். கண்ணகி–  1. பத்தினிக்கடவுள். மங்கல மடந்தை, திருமாபத்தினி, வீரபத்தினியென்பன இவளுக்குரிய பர்யாய நாமங்கள். கோவலன் மனைவி  [கோவலனைக் காண்க]

2. வையாவிக் கோப்பெரும்பேகனுக்குரியவள். இவள் ஒரு காலத்தில் இன்னாதுறக்கப்பட்டு கபிலர், பரணர், அரிசிற்கிழார் முதலியவர்களை நோக்கி அரசனைப்பாடி அரசனுடன் சேர்த்து வைக்க வேண்டியவள் [புற.நா]

பதிப்பு

தமிழ் நூல்.jpg

அபிதான சிந்தாமணியைத் தொகுத்து முடித்த பின்னும், பதிப்பாளர்கள் யாரும் இந்நூல் பிரதியை அச்சேற்றி வெளியிட முன் வரவில்லை. அப்போது இராமநாதபுரம் சேதுபதி அரச பரம்பரையைச் சேர்ந்த பாண்டித்துரை தேவர் அவர்கள் உதவ முன்வந்தார். இதன் மூலம், அபிதான சிந்தாமணி நூலின் முதல் பதிப்பு  மதுரைத்  தமிழ்ச்சங்க வெளியீடாக 1910- ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது.

அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்த பின்னர் இரண்டாம் பதிப்பிற்காக  ஆ. சிங்காரவேலு முதலியார் மேலும் தகவல்களை சேர்த்துக் கொண்டேயிருந்தார். இரண்டாம் பதிப்பு வெளிவரும் முன்னரே 1931- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரணமடைந்தார். இதன்பின், ஆ. சிங்காரவேலு முதலியாரின் புதல்வரான சி. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934- ஆம் ஆண்டு வெளிவந்தது. திருவாரூர் சோமசுந்தர தேசிகர் இந்த இரண்டாம் பதிப்புக்கு பிழை திருத்தம் செய்தார். இந்நூலை ஸி.குமாரசாமி நாயுடு அன்ட் ஸன்ஸ் நிறுவனம் 1934- ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆசிய கல்வி சேவை நிறுவனம், டெல்லி இரண்டாம் பதிப்பினை 1981- ஆம் ஆண்டு ஒளி நகல் செய்து மறு பிரசுரம் செய்தது. அபிதான சிந்தாமணியின்  11-ஆம் பதிப்பை டெல்லி, ஆசிய கல்வி சேவை நிறுவனம் 2002- ஆம் ஆண்டு வெளியிட்டது.

ஆ. சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு) நூலினை கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் 2010- ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page