first review completed

வையவன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[Category:Tamil Content]]
[[File:WrterVaiyavan Murugesan.jpg|thumb|எழுத்தாளர் வையவன்]]
[[File:WrterVaiyavan Murugesan.jpg|thumb|எழுத்தாளர் வையவன்]]
[[File:Writer Vaiyavan.jpg|thumb|எழுத்தாளர் வையவன்]]
[[File:Writer Vaiyavan.jpg|thumb|எழுத்தாளர் வையவன்]]
Line 162: Line 161:
<references />
<references />
{{first review completed}}
{{first review completed}}
[[Category: Tamil content]]
[[Category:Tamil content]]

Revision as of 12:35, 15 November 2022

எழுத்தாளர் வையவன்
எழுத்தாளர் வையவன்
அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனிடம் இருந்து விருது

வையவன் (எம்.எஸ்.பி. முருகேசன்; பிறப்பு: டிசம்பர் 24, 1939) தமிழக எழுத்தாளர்களுள் ஒருவர். பொதுவாசிப்புக்குரிய நாவல்கள், சிறுகதைகளை எழுதி வருகிறார். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பத்திரிகை ஆசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். தனது மகள் பெயரில் அமைந்த ‘தாரிணி பதிப்பகம்’ மூலம் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். படைப்பிலக்கியச் செயல்பாட்டுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

பிறப்பு, கல்வி

எம். எஸ்.பி. முருகேசன் என்னும் இயற்பெயர் கொண்ட வையவன், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24-1939-ல், பரமசிவம்-அமிர்த சிகாமணி இணையருக்குப் பிறந்தார். சூழல்களால் தந்தை கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தார். தன் மகன் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற வேண்டுமென விரும்பினார். அதனால் மகனை பள்ளியில் சேர்க்கும் முன் தனிப் பயிற்சியாக ஆங்கிலம் பயில அனுப்பினார். மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில்  ஆறாம் வகுப்பு வரை படித்தார் வையவன். பள்ளியில் தெலுங்கு மொழிப் பிரிவு இருந்ததால் தெலுங்கும் கற்றுக் கொண்டார். தனிப்பயிற்சி மூலம் ஆங்கிலத்திலும் தேர்ந்தார்.

பெற்றோர் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்ல, ஏதிலியர் இல்லத் தங்கும் விடுதியில் தங்கி உயர் கல்வி பயின்றார் வையவன். தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பை நிறைவு செய்தார். பின் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்று வசித்தார்.

தனி வாழ்க்கை

வையவன், குடும்ப வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக் கடை உதவியாள், மலேரியா ஒழிப்புப் பணி சூபர்வைசர் என பல்வேறு பணிகளைச் செய்தார். பின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963-ல், சென்னையில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பணியாற்றிக் கொண்டே தொடர்ந்து பயின்று தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார்.

சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், தமிழாசிரியராகவும் 33 ஆண்டுகள் பணியாற்றினார். மனைவி சகுந்தலா. மகள் தாரிணி. மகன் டாக்டர் ஜீவகன்.

வையவன் பற்றிய சாகித்ய அகாதமி கட்டுரை
வைரமணிக் கதைகள்
சிம்மாசனம் யாருக்கு? - வையவன் சிறார் நாவல்
ஜெகசிற்பியன் படைப்புகள் பற்றிய ஆய்வு நூல் - வையவன்

இலக்கிய வாழ்க்கை

வையவனின் தந்தை இலக்கிய வாசகர். நல்ல பல நூல்களை அவர் அறிமுகப்படுத்தினார். ஆங்கில நூல்களை வாசிக்கும்படி தூண்டினார். தாய் சிறந்த கதை சொல்லியாக இருந்தார். அவர்கள் மூலம் இலக்கிய வாசகரானார் வையவன்.

திருப்பத்தூரில் வசித்தபோது அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பல பணிகளை முன்னெடுத்தார். ‘இளங்கோ இலக்கிய மன்றம்’ என்பதன் செயலாளராகப் பணிபுரிந்தார். ‘புதுமைப் பண்ணை' என்ற பெயரில் வாடகை நூல் நிலையம் ஒன்றை நடத்தினார்.

வையவனின் முதல் சிறுகதை 1956-ல்  ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது.  தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின.  வையவனின் முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்.’ இந்நூல், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என எழுதினார்.

‘உயிரோட்டம்’, ‘மணல்வெளி மான்கள்’, ‘கன்னியராகி நிலவினில் ஆடி, ‘வைரமணிக் கதைகள்’, ‘ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம்’ போன்றவை இவரது முக்கியமான படைப்புகள். ‘பாடிப்பறந்த குயில்’, ‘நங்கூரம்’, ‘செண்பக மரங்கள்’, ‘தீபிகா’ போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. ‘Loving Animals’, ‘Nation builder Nehru’ போன்றவை இவரது ஆங்கில நூல்களில் சில. சிறார்களுக்காக நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். விமரசனக் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

ஜெகசிற்பியனின் படைப்புலகம் பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் ‘ஜெகசிற்பியன் ஒரு பார்வை’ நூலும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘வையவன் கதைகள்’ என்ற தலைப்பில் இரு பாகங்களாக வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் இள முனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவரது சில சிறுகதைகளும் குறுநாவல்களும் ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி, உருது, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  ‘சாகித்ய அகாதமி’ நிறுவனம் இவரது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்து  வெளியிட்டுள்ளது. வையவனின் படைப்புகள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளியாகியுள்ளன.

தனது பள்ளிப்பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் 65 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என 1000-த்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். ‘அடையாறு தமிழ்ச் சங்கம்’ என்பதனைத் தோற்றுவித்து அதன் மூலம் இலக்கியப் பணியாற்றி வருகிறார்.

மொழிபெயர்ப்புகள்

வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகமது பஷீரின் ‘காமுகண்டே டைரி’ என்ற நாவலை ‘ஒரு காதல் டைரி’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். கேரள மக்களின் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை முறைகளை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘மகாபலியின் மக்கள்’  கட்டுரை நூல் தமிழக அரசின்  சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.

குறும்படம்

இவரது கதை, வசனத்தில் உருவான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ குறும்படம் கிராமப்புற மேம்பாடு பற்றிச் சித்திரிக்கிறது.

இதழியல் வாழ்க்கை

வையவன், சக பள்ளி மாணவர்களுக்காக, தனது 13-ம் வயதில்  ‘தமிழொளி’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதினார். தேவ. சித்ரபாரதி நடத்தி வந்த ‘ஞானரதம்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். கல்கி இதழில் சில வருடங்கள் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘மங்களம்’ வார இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

வல்லமைச் சிறுகதைகள்

பதிப்புலக வாழ்க்கை

வையவன் பணி ஓய்வுக்குப் பின் தனது மகளின் பெயரில் தொடங்கிய ‘தாரிணி பதிப்பகம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். வல்லமை மின்னிதழுடன் இணைந்து சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தினார். வெற்றி பெற்ற சிறுகதைகளை ‘வல்லமைச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தனது தாரிணி பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ‘English Titles’ பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, 2015-ல், ஓவியர் செந்தமிழ்ச்செல்வன் உறுதுணையுடன் படக்கதையாக வெளியிட்டார். ஆதிசங்கரரின் வாழ்க்கையையும் படக்கதையாகத் தந்துள்ளார்.

சமூகச் செயல்பாடுகள்

இளம் வயதிலே சமூக சேவையில் ஆர்வம் உடையவராக இருந்தார் வையவன். பொதுவுடைமை இயக்கத்துடன் இணைந்து பல நற்பணிகளை முன்னெடுத்தார். திருப்பத்தூரில் வசித்தபோது திருப்பத்தூர், கோடியூர், ஜோலார்ப்பேட்டை போன்ற இடங்களில் பீடித் தொழிற்சங்கங்கள் அமைப்பதிலும், துப்புரவுத் தொழிலாளர் சங்கம் உருவாக்குவதிலும் ஈடுபட்டார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்‌ஷான் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் (Jan Sikshan Sansthan) ‘ஐக்கியா டிரஸ்ட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி வருகிறார். எழுத்தாளர் சி.ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான ‘ஹார்ட் பீட் ட்ரஸ்ட் அறக்கட்டளை’ வளர்ச்சிக்கும் உதவி வருகிறார்.

பொன்னியின் செல்வன் படக்கதை

விருதுகள்

  • கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய முதல் பரிசு - பாரதி பற்றிய கட்டுரைக்காக.
  • இலக்கியச் சிந்தனை பரிசு - ‘ஆண்மை’ (சிறுகதை)
  • இலக்கியச் சிந்தனை பரிசு - 'மாலை மயக்கம் (சிறுகதை)
  • டி.கே.சிதம்பரநாதன் நூற்றாண்டு கட்டுரைப் போட்டி - இரண்டாம் பரிசு
  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது - ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ (நாவல்)
  • தமிழக அரசு வழங்கிய சிறந்த அறிவியல் நூல் விருது - ‘லேசர்’ (கட்டுரை நூல்)
  • தமிழக அரசின்  சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசு - ‘மகாபலியின் மக்கள்’ (கட்டுரை நூல்)
  • பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது - ‘ஜமுனா’ (நாவல்)
  • பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது - ‘இசை நாற்காலி’
  • பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருது - ’ஆனந்தபவன்’ (நாடகம்)
  • ஜீ.வி. ஃபிலிம்ஸ் வழங்கிய சிறந்த நாவலுக்கான பரிசு - மனவெளி மான்கள் (நாவல்)
  • அமுதசுரபி - ஸ்ரீராம் அறக்கட்டளை விருது ’மகாகவி' (கட்டுரை நூல்)
  • சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான லில்லி தேவசிகாமணி விருது  
  • மால்கம் ஆதிசேஷையா விருது - அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக.

இலக்கிய இடம்

பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர் வையவன். சமூக சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு பல படைப்புகளைத் தந்துள்ளார்.நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவற்றை வலியுறுத்துகின்றன இவரது பல படைப்புகள். வாழ்க்கையின் போக்கை, சமூக நிகழ்வுகளை யதார்த்தமாகச் சித்திரிக்கின்றன.

“தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது தவறு என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு , சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான இலக்கியப் புரிதல் , சிறந்த சொல்லாடல் என வையவனின் எழுத்துச் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களின் ஒருவர் என்று சொல்ல வைக்கும் கதைகளை வழங்கினாலும் மிகுந்த தன்னடக்கத்தை வெளிப்படுத்துபவர் எழுத்தாளர் வையவன். [1]” என்று மதிப்பிடுகிறார், எழுத்தாளர் எஸ். செந்தில்குமார்.

நூல்கள்

தமிழ் நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • இசை நாற்காலி
  • வேண்டுமடி எப்போதும் விடுதலை
  • கொதிக்கும் தகரக் கூரையின் மீதொரு பூனை
  • என்னருமை இந்தியா
  • சமகாலத்தவர்
  • வையவன் கதைகள் (இரண்டு பாகங்கள்)
  • வைரமணிக் கதைகள் (80 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு)
நாவல்கள்
  • இன்று புதிதாய்ப் பிறந்தோம்
  • ஜமுனா
  • உயிரோட்டம்
  • சங்கிலிகள்
  • கூடிய சீக்கிரம்
  • மணல்வெளி மான்கள்
  • கைதியின் காதலிகள்
  • கன்னியராகி நிலவினில் ஆடி...
  • ஜங்கஷனிலே ஒரு மேம்பாலம்
  • இதயரோஜா (நேருவின் வாழ்க்கை வரலாறு நாவல் - வடிவில்)
  • உயிரோட்டம்
  • இதோ இப்பொழுது உதயம்
  • கிளிக்கூடு
  • சீதை இல்லாத ராமாயணம்
  • ஐந்து கை ராந்தல்
குறுநாவல்கள்
  • பாடிப்பறந்த குயில்
  • நங்கூரம்
  • செண்பக மரங்கள்
  • நிலாக்கால நேசங்கள்
  • ஆரவாரமும் பெருமூச்சும்
  • தீபிகா
கட்டுரை நூல்கள்
  • மகாபலியின் மக்கள்
  • கண்ணாடிச் சிறையில் சில கடல்கள்
  • எல்லாக் காற்றோட்டமும் புதிதுதான்
  • ஒரு புதிய பார்வை
  • நவபாரத சிற்பி நேரு
கவிதை நூல்கள்
  • நிசப்த கோபுரம்
  • வெடி வழிபாடு
தொகுப்பு நூல்கள்
  • வல்லமைச் சிறுகதைகள் - 1
  • வல்லமைச் சிறுகதைகள் - 2
மொழிபெயர்ப்பு
  • ஒரு காதல் டைரி (மூலம்: காமுகண்டே டைரி, வைக்கம் முகமது பஷீர்)
ஆய்வு நூல்கள்
  • ஜெகசிற்பியன் ஒரு கண்ணோட்டம்
  • வாராது வந்த மாமணி - மகாகவி
நாடகங்கள்
  • ஆனந்த பவன்
  • இடிபாடுகள்
  • ஜங்ஷனில் ஒரு மேம்பாலம் (வானொலி நாடகம்)
சிறார் நூல்கள்
  • ரோஜா மொட்டு
  • வென்று காட்டிய வீர மங்கையர்
  • மாவேந்தர் கதைகள்
  • காகிதப் புன்னகை
  • பகவான் புத்தர்
  • ஏசு கிறிஸ்து
  • கருணை மனு
  • சிம்மாசனம் யாருக்கு?
அறிவியல் நூல்கள்
  • ஆழ்கடலியல்
  • நவீன அறிவியல் களஞ்சியம்
  • மண்வளமும் நீர்ப்பாதுகாப்பும்
  • லேசர்
  • அழிவில்லா ஆற்றல்
  • விண்வெளியும் மனித மேம்பாடும்
  • நோயறியும் கருவிகள்

ஆங்கில நூல்கள்

பொது நூல்கள்
  • Loving Animals
  • The Light everyone longs for
  • How to save oil? (For Children)
  • Red Soil and Rain water (Selection from Kurunthogai)
கவிதை நூல்கள்
  • Delight and the Drums
  • Ventilation
  • Journeys
  • River runs empty
நாவல்கள்
  • Om
  • Yogi
கட்டுரை நூல்கள்
  • Nation Builder Nehru
  • Jesus Christ
  • Lord Buddha

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.