தாதாசாகேப் பால்கே: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
Corrected typo errors;
 
Line 102: Line 102:
அதன்படி, இது 15 ஆண்டிற்கான ஒப்பந்தம். பால்கே நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தால், அவருக்கு லாபத்தில் 1,50,000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது. மேலும், நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் பிறகு வேறுபாடுகளைத் தீர்க்க முயன்று தோல்வியுற்ற பின்னர், பால்கே நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். பால்கே வெளியேறினால், அவரது பொறுப்புகளை ஏற்குமாறு பால்கேயின் நண்பர்களை பங்குதாரர்கள் அணுகினர். அவர்கள் அனைவரும் ராஜா ஹரிஷ்சந்திரா (1913) முதல் பால்கேவுடன் தொடர்புடையவர்கள். மேலும் திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு துறைகளைக் கையாள பால்கேவால் பயிற்சி பெற்றவர்கள். அவர்களின் ஒப்புதலுடன், மாமா ஷிண்டே, அன்னா சலுங்கே, கஜனன் சானே, டிரிம்பக் பி தெலாங், தத்தாத்ரேயா தெலாங் மற்றும் நாத் தெலாங் ஆகியோருடன் தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் பால்கே. பிறகு, தனது குடும்பத்துடன் காசிக்குச் சென்று, தனது ஓய்வை அறிவித்தார். மேலும், 'நவ்யுக்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.  
அதன்படி, இது 15 ஆண்டிற்கான ஒப்பந்தம். பால்கே நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தால், அவருக்கு லாபத்தில் 1,50,000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது. மேலும், நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் பிறகு வேறுபாடுகளைத் தீர்க்க முயன்று தோல்வியுற்ற பின்னர், பால்கே நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். பால்கே வெளியேறினால், அவரது பொறுப்புகளை ஏற்குமாறு பால்கேயின் நண்பர்களை பங்குதாரர்கள் அணுகினர். அவர்கள் அனைவரும் ராஜா ஹரிஷ்சந்திரா (1913) முதல் பால்கேவுடன் தொடர்புடையவர்கள். மேலும் திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு துறைகளைக் கையாள பால்கேவால் பயிற்சி பெற்றவர்கள். அவர்களின் ஒப்புதலுடன், மாமா ஷிண்டே, அன்னா சலுங்கே, கஜனன் சானே, டிரிம்பக் பி தெலாங், தத்தாத்ரேயா தெலாங் மற்றும் நாத் தெலாங் ஆகியோருடன் தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் பால்கே. பிறகு, தனது குடும்பத்துடன் காசிக்குச் சென்று, தனது ஓய்வை அறிவித்தார். மேலும், 'நவ்யுக்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.  


====== ‘ரங்கபூமி' நாடகம் ======
====== 'ரங்கபூமி' நாடகம் ======
காசியில் தங்கியிருந்தபோது, பயண நாடக நிறுவனமான கிர்லோஸ்கர் நாடக மண்டலியின் பல இந்தி நாடகங்களைப் பார்த்தார். மாஸ்டர் மன்ஹார் பார்வே, அவரது தந்தை கணபதிராவ் பார்வே மற்றும் அதன் உரிமையாளர் சங்கர் பாபுஜி மஜும்தார் மற்றும் நாவலாசிரியர் நாராயண் ஹரி ஆப்தே ஆகியோர் பால்கேவுடன் நண்பர்களாக இணைந்தனர். நாடகம், சினிமா, இசை, இலக்கியம் ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து அவர்கள் தொடர்ந்து விவாதித்தனர். அப்படி ஒரு சந்திப்பின் போது, பால்கே ஒரு நாடகம் எழுத வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். சுமார் இரண்டரை மாதங்களில் 'ரங்கபூமி' என்ற மராத்தி மொழி நாடகத்தை எழுதி முடித்தார்.  
காசியில் தங்கியிருந்தபோது, பயண நாடக நிறுவனமான கிர்லோஸ்கர் நாடக மண்டலியின் பல இந்தி நாடகங்களைப் பார்த்தார். மாஸ்டர் மன்ஹார் பார்வே, அவரது தந்தை கணபதிராவ் பார்வே மற்றும் அதன் உரிமையாளர் சங்கர் பாபுஜி மஜும்தார் மற்றும் நாவலாசிரியர் நாராயண் ஹரி ஆப்தே ஆகியோர் பால்கேவுடன் நண்பர்களாக இணைந்தனர். நாடகம், சினிமா, இசை, இலக்கியம் ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து அவர்கள் தொடர்ந்து விவாதித்தனர். அப்படி ஒரு சந்திப்பின் போது, பால்கே ஒரு நாடகம் எழுத வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். சுமார் இரண்டரை மாதங்களில் 'ரங்கபூமி' என்ற மராத்தி மொழி நாடகத்தை எழுதி முடித்தார்.  


இந்த நாடகம் அப்போதைய சமகால நாடக மற்றும் மேடை நிலைமைகள் குறித்த ஒரு நையாண்டியாக இருந்தது. காசியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வில் கலந்து கொண்ட பால கங்காதர திலகர் மற்றும் ஜி.எஸ்.கபர்டே ஆகியோரிடமும் பால்கே நாடகத்தை வாசித்துக் காட்டி இருவரிடமும் பாராட்டைப் பெற்றார். பால்கே இந்த நாடகத்தின் ஒத்திகையை பூனாவில் உள்ள ஆரியா திரையரங்கில் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஏற்பாடு செய்தார்.  
இந்த நாடகம் அப்போதைய சமகால நாடக மற்றும் மேடை நிலைமைகள் குறித்த ஒரு நையாண்டியாக இருந்தது. காசியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வில் கலந்து கொண்ட பால கங்காதர திலகர் மற்றும் ஜி.எஸ்.கபர்டே ஆகியோரிடமும் பால்கே நாடகத்தை வாசித்துக் காட்டி இருவரிடமும் பாராட்டைப் பெற்றார். பால்கே இந்த நாடகத்தின் ஒத்திகையை பூனாவில் உள்ள ஆரியா திரையரங்கில் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஏற்பாடு செய்தார்.  


பல்வேறு தொழில்முறை நாடக நிறுவனங்கள் ‘ரங்கபூமி' நாடகத்தை அரங்கேற்ற பால்கேவை அணுகின. ஆனால் அவர் 1922-ம் ஆண்டு மும்பையின் பாலிவாலா தியேட்டரில் அரங்கேற்றினார். இது ஏழு அங்கங்கள் கொண்ட நாடகம். எனவே பால்கே அதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்தார். நான்கு நாடகங்கள் ஒரு இரவிலும், மீதமுள்ள மூன்று நாடகங்கள் அடுத்த இரவிலும் அரங்கேற்றப்பட்டன. மும்பை, பூனா, நாசிக் ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 75,000 ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் மக்களிடையே சரியான வரவேற்பைப் பெறவில்லை.  
பல்வேறு தொழில்முறை நாடக நிறுவனங்கள் 'ரங்கபூமி' நாடகத்தை அரங்கேற்ற பால்கேவை அணுகின. ஆனால் அவர் 1922-ம் ஆண்டு மும்பையின் பாலிவாலா தியேட்டரில் அரங்கேற்றினார். இது ஏழு அங்கங்கள் கொண்ட நாடகம். எனவே பால்கே அதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்தார். நான்கு நாடகங்கள் ஒரு இரவிலும், மீதமுள்ள மூன்று நாடகங்கள் அடுத்த இரவிலும் அரங்கேற்றப்பட்டன. மும்பை, பூனா, நாசிக் ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 75,000 ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் மக்களிடையே சரியான வரவேற்பைப் பெறவில்லை.  


== மறுபிரவேசம், புகழ் சரிவு ==
== மறுபிரவேசம், புகழ் சரிவு ==

Latest revision as of 17:38, 22 November 2025

Dadasaheb Phalke
தாதாசாகேப் பால்கே

தாதாசாகேப் பால்கே (துண்டிராஜ் கோவிந்த் பால்கே) (Dadasaheb Phalke) (ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்பட இயக்குனர். இந்திய திரைப்படத்துறை முன்னோடி என்றும், இந்திய திரைப்படங்களின் தந்தை என மதிக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் முழுநீள ஒலிப்படமான 'ராஜா ஹரிஷ்சந்திரா' (1913) என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பால்கேயின் படைப்புகளில் மோஹினி பாஸ்மாசூர் (1913), சத்தியவான் சாவித்ரி (1914), லங்கா தஹன் (1917), ஸ்ரீ கிருஷ்ண ஜன்மா (1918) மற்றும் கலிய மர்தன் (1919) ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்திய திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 'தாதாசாகேப் பால்கே' விருது இவர் பெயரால் வழங்கப்படுகிறது.

பிறப்பு, கல்வி

துண்டிராஜ் கோவிந்த் பால்கே மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் ஏப்ரல் 30, 1870 அன்று கோவிந்த் சதாசிவ் பால்கே என்னும் சம்ஸ்கிருத அறிஞருக்குப் பிறந்தார்.[1] உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். கோவிந்த் பால்கே மத விழாக்களை நடத்தும் பூசாரியாக இருந்தார். அவர் மும்பை வில்சன் கல்லூரியில் சமஸ்கிருத பேராசிரியராக நியமிக்கப்பட்டபோது அவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.

பால்கே சிறு வயதிலேயே கலை மற்றும் புகைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ. கலைக்கல்லூரியில் கலை மற்றும் வரைவிலக்கணம் பயின்றார். 1886-ம் ஆண்டின் தொடக்கத்தில், தனது மூத்த சகோதரர் சிவராம் பந்த்துடன் பரோடாவுக்குச் சென்றார்.

பால்கே பரோடாவில் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடமான கலா பவனில் சேர்ந்து 1890-ம் ஆண்டு நெய்யோவியம் (Oil Painting) மற்றும் நீர்வர்ண ஓவியம் (Watercolor painting) ஆகியவற்றைக் கற்றார். கட்டிடக்கலையிலும் மாடலிங் துறையிலும் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டில் ஒரு புகைப்பட கேமராவை வாங்கி, புகைப்படம் எடுத்தல், செயலாக்கம் மற்றும் அச்சிடுதல் ஆகியவற்றில் பரிசோதனை முயற்சிகள் செய்யத் தொடங்கினார். 1892-ம் ஆண்டு அகமதாபாத்தின் தொழில்துறை கண்காட்சியில் ஒரு சிறந்த நாடக அரங்கின் மாதிரியை உருவாக்கியதற்காக இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

தனிவாழ்க்கை

பால்கே பரோடாவில் மராத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். இப்பெண்ணைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பால்கே குடும்பம் குஜராத் மாநிலத்தில் கோத்ராவில் இருக்கையில் பிளேக் நோய்ப்பரவலால் மனைவியும் குழந்தையும் இறந்தனர்.

1902-ம் ஆண்டில் கிர்லோஸ்கர் நாடக மண்டலியின் உரிமையாளரின் உறவினரான கிரிஜா கரண்டிகரை பால்கே மறுமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கிரிஜாவின் பெயர் சரஸ்வதிபாய் என்று மாற்றப்பட்டது. இவர்களுக்கு இரு மகள்கள், ஐந்து மகன்கள் என ஏழு குழந்தைகள் பிறந்தன.

சரஸ்வதிபாய் தன் கணவர் பால்கேவில் தொழில் முயற்சிகளில் உறுதுணையாக இருந்தார். திரைப்படத் தயாரிப்பு செயல்பாடுகளில் பங்கெடுத்தார். பால்கேவின் முதல் மகன் பால்சந்திராவும், முதல் மகள் மந்தாகினியும் பால்கேவின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரைப்படங்களின் முதல் குழந்தை நட்சத்திரங்கள் பட்டியலில் இடம்பெற்றனர்.

துவக்ககால தொழில் முயற்சிகள்

புகைப்படம்

பால்கே 1895-ம் ஆண்டில் பொருளாதாரக் காரணங்களால் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞராக மாற முடிவு செய்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்கு இடம்பெயர்ந்தார். பிரபல தேசாய் குடும்பத்தினரால் அவரது ஸ்டில் புகைப்பட ஸ்டுடியோவைத் தொடங்க இலவசமாக இடம் வழங்கப்பட்டது. தேசாய் குடும்பத்திற்காகாக குடும்ப புகைப்பட ஆல்பங்களையும் தயாரித்துக்கொடுத்தார்.

பிளேல் நோய்ப்பரவலில் மனைவி குழந்தையை இழந்த பின் பால்கே பரோடா திரும்பினார். ஆனால் பரோடாவிலும் அவரது புகைப்படத் தொழில் சரியாக நடக்கவில்லை. கேமரா ஒரு நபரின் உடலில் இருந்து ஆற்றலை உறிஞ்சி அவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. பரோடாவின் இளவரசரிடமிருந்தும் இதே போன்ற எதிர்ப்பை பால்கே எதிர்கொண்டார். தனது ஆயுளைக் குறைக்கும் என்ற அனுமானங்களுடன் இளவரசர் புகைப்படங்களை எடுக்க மறுத்துவிட்டார்.

நாடகம்

அதன் பின்னர், பால்கே நாடக நிறுவனங்களுக்கு மேடை திரைச்சீலைகளுக்கு வர்ணம் பூசும் தொழிலைத் தொடங்கினார். இது அவருக்கு நாடகத் தயாரிப்பில் சில அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுத் தந்ததுடன், நாடகங்களில் சில சிறிய பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. அந்த நேரத்தில் பரோடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஒரு ஜெர்மானிய தந்திரக்கலை நிபுணரிடம் சில வித்தைகளை பால்கே கற்றுக்கொண்டார். இது பின்னாளில் அவரது திரைப்படத் தயாரிப்பில் தந்திரமாக படம் எடுப்பதற்கு உதவியது.

அச்சகப் பணி

1903-ம் ஆண்டில், இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் புகைப்படக் கலைஞராகவும் வரைவாளராக பணியேற்றார். 1906-ம் ஆண்டு அந்தப் பணியைத் துறந்து, மஹாராஷ்ராவின் பூனே மாவட்டத்தில் இருக்கும் லோனாவ்ளா நகரில் 'பால்கே வேலைப்பாடு மற்றும் அச்சிடும் பணிகள்' என்ற பெயரில் ஒரு அச்சகத்தை ஆர்.ஜி.பண்டார்கருடன் இணைந்து தொடங்கினார்.

ஓவியர் ராஜா ரவி வர்மாவுக்குச் சொந்தமான ரவி வர்மா அச்சகத்திற்கு புகைப்பட-லித்தோ தாள்களை (photo-litho transfer) வழங்குவதில் இந்த அச்சகம் முக்கியமாக பணியாற்றியது. வியாபாரம் பெருகியதால், அச்சகம் மும்பையில் உள்ள தாதருக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1908-ம் ஆண்டில் பண்டார்கருக்கு பதிலாக புருஷோத்தம் மாவ்ஜி ஒரு பங்குதாரராக நியமிக்கப்பட்டார். 1909-ம் ஆண்டு ஜெர்மனி சென்று வண்ணங்களில் அச்சிடும் இயந்திரங்களை வாங்கினார் பால்கே. அச்சிடும் தொழில் அதிவேகமாக வளர்ந்தாலும், கூட்டாளிகளுக்குள் அச்சகத்தை நடத்துவது குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பால்கே எந்த பண ஆதாயங்களையும் பெறாமல், அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். மற்றொரு அச்சகத்தைத் தொடங்க பல்வேறு நிதியாளர்களிடமிருந்து நிதி பெறும் வாய்ப்புகளை ஏற்கவில்லை.

திரைப்படத்துறை ஆர்வம்

ஏப்ரல் 14, 1911 அன்று, பால்கே தனது மூத்த மகன் பால்சந்திராவுடன் மும்பையின் கிர்கானில் உள்ள அமெரிக்க இந்தியா பிக்சர் பேலஸில் 'அமேசிங் அனிமல்ஸ்' என்ற திரைப்படத்தைப் பார்க்கச் சென்றார். திரையில் விலங்குகள் தோன்றியதை குடும்பத்தினர் நம்ப மறுத்ததால் மறுநாளே அவர்களையும் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றார். அன்று ஈஸ்டர் பண்டிகை என்பதால், 'அமேசிங் அனிமல்ஸ்' என்ற திரைப்படத்திற்கு பதிலாக பிரெஞ்சு இயக்குனர் ஆலிஸ் கை-பிளேச்சின், 'கிறிஸ்துவின் வாழ்க்கை' (1906) திரையிடப்பட்டது. திரையில் இயேசுவைப் பார்க்கும்போது, பால்கே இந்து கடவுள்களான ராமர் மற்றும் கிருஷ்ணரை கற்பனை செய்து 'நகரும் படங்கள்' வணிகத்தைத் தொடங்க முடிவு செய்தார். ('கிறிஸ்துவின் வாழ்க்கை' படத்தை திரையிட்டவர் தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான சாமிக்கண்ணு வின்சென்ட் என்பது குறிப்பிடத்தக்கது).

அடுத்த ஒரு வருடத்திற்கு, பால்கே ஐரோப்பாவிலிருந்து பட்டியல்கள், புத்தகங்கள் மற்றும் திரைப்படம் தயாரிக்கும் உபகரணங்கள் போன்ற பல்வேறு திரைப்படம் தொடர்பான பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினார். ஒரு சிறிய பிலிம் கேமரா மற்றும் ரீல்களை வாங்கி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தை ஆடியில் (lens) குவித்து, படங்களை சுவரில் தெரியச் செய்யும் முறையில் இரவில் திரைப்படங்களைக் காட்டத் தொடங்கினார். தினமும் மாலையில் நான்கைந்து மணி நேரம் திரைப்படங்கள் பார்த்ததால் தூக்கமின்மையும், இரு கண்களில் கண்புரையும் ஏற்பட்டன. மருத்துவரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்து பணியாற்றியதால் கண்பார்வையை பால்கே முற்றிலுமாக இழந்தார். பின்னர் கண் மருத்துவர் பிரபாகரின் சிகிச்சையால் பால்கேவுக்கு கண் பார்வை மீண்டது.

லண்டன் பயணம்

திரைப்படத் தயாரிப்பு குறித்த தொழில்நுட்ப அறிவைப் பெற லண்டன் செல்ல விரும்பினார் பால்கே. நிதிச்சிக்கல்களால் யஷ்வந்த்ராவ் நட்கர்னி மற்றும் ஆபாசாஹேப் சிட்னிஸ் ஆகியோரின் உதவியுடன் 12,000 மதிப்புள்ள தனது காப்பீட்டுத் திட்டங்களை அடமானம் வைத்து பெற்ற ரூ. 10,000/- கிடைத்தது. அதனைக்கொண்டு பிப்ரவரி 1, 1912 அன்று, லண்டனுக்கு கப்பலில் சென்றார். லண்டனில் பிக்காடில்லி சர்க்கஸ் அருகே தான் சந்தாதாரராக இருந்த 'பயாஸ்கோப் சினி-வீக்லி' என்ற வார இதழின் பெயர்ப்பலகையைக் கண்டு, அதன் ஆசிரியர் கபோர்னைச் சந்தித்து தனது வருகையின் நோக்கத்தை விளக்கினார்.

கபோர்னின் உதவியால், பால்கேவுக்கு வால்டன் ஸ்டுடியோவின் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சிசில் ஹெப்வொர்த்தின் அறிமுகம் கிடைத்தது. ஹெப்வொர்த்தின் உதவியால் பால்கேவுக்கு வால்டன் ஸ்டுடியோவின் அனைத்து துறைச் செயல்பாடுகளையும் படப்பிடிப்பின் செயல்விளக்கத்துடன் பார்வையிட அனுமதி கிடைத்தது. ஐம்பது பவுண்டுகளுக்கு வில்லியம்சன் புகைப்படக் கருவியை வாங்கிக்கொண்டு ஏப்ரல் 1, 1912 அன்று இந்தியா திரும்பி, அதே நாளில் 'பால்கே பிலிம்ஸ் கம்பெனி' யை நிறுவினார்.

முதல் இந்தியத் திரைப்படம்

Raja Harishchandra (1913) Poster
ராஜா ஹரிஷ்சந்திரா (1913) போஸ்டர்

தொடக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கறுப்பு வெள்ளை நிறத்தில் சப்தம் இல்லாமல் மௌனப்படங்களாக இருந்தன. அக்காலகட்டத்தில், பால்கே தனது தீவிர முயற்சியினால் இந்தியத் தொன்மக் கதைகளில் ஒன்றான அரிச்சந்திரன் கதையைத் தழுவி ஒரு திரைப்படத்தை இயக்கினார். படத்தின் பெயர் 'ராஜா ஹரிஷ்சந்திரா'. 'இந்துபிரகாஷ்' போன்ற செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு படத்திற்கு தேவையான நடிகர்கள் மற்றும் குழுவினரை உருவாக்கினார். பெண் கதாபாத்திரங்களில் நடிக்க பெண்கள் யாரும் கிடைக்காத ஆண் நடிகர்களை பெண் வேடங்களில் நடிக்க வைத்தார். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் பலரையும் நடிக்க வைத்தார்.

ராஜா ஹரிஷ்சந்திரா படம் மும்பையின் தாதரில் உள்ள ஒரு தெருவில் அமைந்துள்ள 'மதுரா பவன்' என்ற பங்களாவில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு ஏழு மாதங்களில் முடிக்கப்பட்டு 3,700 அடி (நான்கு ரீல்கள்) படச்சுருளாக தயாரானது.

Dadasaheb Phalke - Raja Harishchandra 1913
ராஜா ஹரிஷ்சந்திரா (1913) திரைப்படத்தின் காட்சி

ஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு முதல் இந்தியத் திரைப்படமாக 'ராஜா ஹரிஷ்சந்திரா' ஏப்ரல் 21, 1913 அன்று மும்பையின் ஒலிம்பியா தியேட்டரில் திரையிடப்பட்டது. மே 3-ம் தேதி மும்பையின் கிர்கானில் உள்ள கொரோனேஷன் திரையரங்கில் வெளியிடப்பட்டது. 1914-ம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று, இவ்வகையான பல திரைப்படங்களை மேலும் உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது.

அடுத்தகட்ட முயற்சிகள்

'ராஜா ஹரிஷ்சந்திரா'வின் வெற்றிக்குப் பிறகு, பால்கே நாசிக்கிற்கு இடம்பெயர்ந்தார். தனது அடுத்த படத்திற்காக, நளன்-தமயந்தி புராண காதல் கதையை அவர் தேர்ந்தெடுத்தார். முன்-தயாரிப்பை முடித்த போதிலும், படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் போனது. எனவே இந்து மதப் புராணமான மோகினி-பஸ்மாசுரன் கதையை திரைப்படமாக எடுக்கத் தொடங்கினார்.

இந்திய சினிமாவில் நடித்த முதல் பெண்

பயண நாடக நிறுவனமான சித்தகர்ஷக் நாடக நிறுவனம் நாசிக் நகரத்துக்கு வந்திருந்தபோது, அக்குழுவிலிருந்து இரு நடிகைகளை தன் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். துர்காபாய் காமத் பார்வதியாகவும் நடித்து இந்தியாவில் முதல் பெண் நடிகை என்ற பட்டம் பெற்றார், அவரது மகள் கமலாபாய் கோகலே மோகினியாக நடித்து இந்தியாவின் முதல் குழந்தை நட்சத்திரம் ஆனார்.[2]. 3,264 அடி நீளம் இருந்த இத்திரைப்படம் ஜனவரி 2, 1914 அன்று மும்பையின் ஒலிம்பியா தியேட்டரில் வெளியிடப்பட்டது.

Dadasaheb Phalke's Son Bhalchandra in Raja Harishchandra
ராஜா ஹரிஷ்சந்திரா படத்தில் பால்கேவின் மகன் பாலசந்திரா

பால்கே தனது மூன்றாவது படத்தை 'சத்தியவான் சாவித்திரி' புராணக் கதையை கொண்டு அமைத்தார் 3,680 அடி நீளமுள்ள இந்த படம் 6 ஜூன், 1914 அன்று திரையிடப்பட்டது. இரண்டு திரைப்படங்களும் ராஜா ஹரிஷ்சந்திராவைப் போலவே வணிக ரீதியாக வெற்றி பெற்றன.

இரண்டாவது லண்டன் பயணம்

மூன்று படங்களின் வெற்றியின் மூலம், பால்கே தனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த முடிந்தது. நாட்டின் பல்வேறு திரையரங்க மேலாளர்களிடமிருந்து திரைப்பட நகல்களுக்கு பெரும் தேவை இருந்தது. திரைப்படங்களுக்கு கிடைத்த மகத்தான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, அவர் சுமார் 30,000 மதிப்புள்ள மின்னணு இயந்திரங்களை வாங்க முடிவு செய்து ஆகஸ்ட் 1, 1914 அன்று தனது மூன்று படங்களை தன்னுடன் எடுத்துக்கொண்டு லண்டன் புறப்பட்டார். பால்கேவின் முதல் லண்டன் பயணத்தின் போது அவருக்கு உதவிய 'பயாஸ்கோப் சினி-வீக்லி' இதழின் கபோர்ன், லண்டனில் திரையிடலுக்கு ஏற்பாடு செய்தார். படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அம்சங்களுக்காக பாராட்டப்பட்டன. வால்டன் ஸ்டுடியோவின் சிசில் ஹெப்வொர்த் உட்பட பல்வேறு தயாரிப்பாளர்கள் பால்கேவை இங்கிலாந்தில் படங்கள் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பால்கேவிடம் இந்திய திரைப்படங்களை இங்கிலாந்தில் தயாரிக்க ஹெப்வொர்த் முன்வந்தார். அதன் படி இந்தியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினரை அழைத்து வரப்படுவார்கள். அவர்களுக்கான பயணம், தங்குமிடம், உணவு மற்றும் சம்பளம் ஆகியவற்றிற்கான செலவுகளை ஹெப்வொர்த் ஏற்றுக்கொள்வார். பால்கேவுக்கு மாத சம்பளமாக 300 பவுண்டுகள் மற்றும் லாபத்தில் 20% வழங்கப்படும். ஆனால், பால்கே இந்த வாய்ப்பை நிராகரித்தார். இந்தியாவில் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்க விரும்பினார்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பால்கேவிடமிருந்து 200 திரைப்பட பிரதிகளை வாங்க முன்வந்தது. அதற்கு பால்கே ஒப்புக்கொண்டார். இருப்பினும், அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதற்கு முன்பே, உலகப்போர் சூழல் மற்றும் தனது ஸ்டுடியோவின் கவலைக்குரிய நிதிநிலை காரணமாக உடனே இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.

இந்தியாவில் மாறிய சூழல்

பால்கே இந்தியா திரும்பியபோது, முதலாம் உலகப் போர் காரணமாக நிதி நிலைமை மோசமடைந்திருப்பதை கவனித்தார். எனவே யஷ்வந்த்ராவ் நட்கர்னி மற்றும் அபாசாகேப் சிட்னிஸ் ஆகியோரை லண்டனில் வாங்கிய உபகரணங்களைக் கொண்டு வருவதற்கான கடனுக்காக அணுகினார். உலகப் போர் நடந்து கொண்டிருந்த நிலையில், மூலப் படங்களின் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட பால்கே, சில குறும்படங்களை எடுக்க முடிவு செய்தார். ஸ்டுடியோவை அடகு வைத்து கடன் வாங்கி 'ராஜஸ்ரீயால்' படத்தில் வேலை செய்யத் தொடங்கினார். படப்பிடிப்பு தொடங்கினாலும் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பை முடிக்க முடியவில்லை.

தனது அடுத்த படத்திற்கான மூலதனத்தைப் பெற, பால்கே சுதேசி இயக்கத்தின் தலைவர்களை அணுகினார். ஆனால் பலன் கிட்டவில்லை. செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட்டு, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, தான் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதாகவும், எனவே உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த விளம்பரத்திற்கு 3 பேர் மட்டுமே பதிலளிக்க அத்திட்டம் பயனற்று போனது.

1916-ம் ஆண்டில், பால்கே தனது முதலீட்டை உயர்த்த ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தனது படங்களை ஔந்த், குவாலியர், இந்தூர், ஜம்கண்டி மற்றும் மீராஜ் ஆகிய சுதேச மாநிலங்களில் திரையிட்டார். ஔந்த் மன்னர் 1,000 ரூபாய் வழங்கினார். இந்தூர் இளவரசி திரையிடலுக்கு 1,500 ரூபாய் அளித்துவிட்டு மேலும், 5,000 ரூபாய் கடனாக வழங்கினார்.

ஹரிஷ்சந்திரா மறுஆக்கம்
Satyavadi Raja Harishchandra (1917)
சத்யவாதி ராஜா ஹரிஷ்சந்திரா (1917)

மும்பையிலிருந்து நாசிக்கிற்கு பால்கே இடம்பெயர்ந்தபோது, ராஜா ஹரிஷ்சந்திரா திரைப்படத்தின் நெகடிவ் (Negative) தொலைந்து போயின. எனவே பால்கே மீண்டும் கிட்டத்தட்ட அதே திரைக்கதை, நடிகர்களுடன் படமாக்கி 2,944 அடி நீளமுள்ள 'சத்யவாதி ராஜா ஹரிஷ்சந்திரா' என்ற பெயரில் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் 3,1917 அன்று பூனாவின் ஆர்யன் சினிமாவில் திரையிடப்பட்டது.

லங்கா தஹன்

நிதியாளர்களுக்கு திரைப்படத் தயாரிப்பு செயல்முறையை விளக்குவதற்காக 'ஹௌ மூவிஸ் ஆர் மேட்' (How Movies Are Made) என்ற ஆவணப்படத்தையும் பால்கே உருவாக்கினார், ஆனால் அது பயனளிக்கவில்லை.

மே 1917 அன்று நாசிக்கில் நடைபெற்ற 'பம்பாய் மாகாண காங்கிரஸ் பரிஷத்' அமர்வுக்கு பால்கே அழைக்கப்பட்டார், அங்கு லோகமான்ய திலகரிடம் தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். திலகரின் முன்னெடுப்பு பலனைத் தந்ததால், லங்கா தஹன் (1917) என்ற புதிய படத்தைத் தொடங்க பால்கேவால் போதுமான மூலதனத்தைத் திரட்ட முடிந்தது. இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்ட நிகழ்வை சித்தரிக்கும் இத்திரைப்படம் 3,000 அடி நீளமும், மூன்று ரீல்களும் கொண்டது.

செப்டெம்பர் 17, 1917 அன்று பூனாவில் உள்ள ஆர்யன் திரையரங்கில் 'லங்கா தஹன்' திரையிடப்பட்டது. அன்னா சலுங்கே என்பவர் ராமர் சீதாதேவி என இரு கதாபாத்திரங்களிலும் நடித்தார். இதனால், இந்திய சினிமாவில் முதல் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் பெருமையை அன்னா சலுங்கே பெற்றார். மும்பையின் வெஸ்ட் எண்ட் திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டபோது, காலை 7 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை காட்சிகள் நடைபெற்றன.

திரைப்பட வரலாற்றாசிரியர் அம்ரித் கங்கரின் கூற்றுப்படி, டிக்கெட் கவுண்டர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நாணயங்கள் கோணிப்பைகளில் மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டன. இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் அதன் வருவாயைக் கொண்டு பால்கே தனது கடன்கள் அனைத்தையும் திருப்பிச் செலுத்த முடிந்தது.

இக்காலகட்டத்தில், மகாராஷ்டிர வழக்கப்படி பால்கே மரியாதைக்குரிய விதமாக 'தாதாசாகேப்' என்று அழைக்கப்படத் தொடங்கினார்.

இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனி

லங்கா தஹனின் வெற்றிக்குப் பிறகு, பங்குதாரர்களுக்காக பல்வேறு வர்த்தகர்கள் பால்கேவை அணுகினர். பால கங்காதர திலகர், ரத்தன்ஜி டாடா மற்றும் சேத் மன்மோகன்தாஸ் ராம்ஜி ஆகியோர் மூலதனத்தை சேகரித்து 'பால்கே பிலிம்ஸ் கம்பெனியை' 3,00,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற பால்கேவை அணுகினர். 1,50,000 ரூபாய் கூடுதல் முதலீட்டுடன், முன்மொழியப்பட்ட நிறுவனத்தில், பால்கே 1,00,000 ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும், லாபத்தில் 75% பங்கையும், மீதமுள்ள பங்குதாரர்களுக்கு விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டது. நடிகை ஃபாதிமா பேகம் அளித்த 1,00,000 ரூபாய் பால்கே நிராகரித்தார். வாமன் ஸ்ரீதர் ஆப்தே, லக்ஷ்மன் பல்வந்த் பாதக், மாயாசங்கர் பட், மாதவ்ஜி ஜெசிங் மற்றும் கோகுல்தாஸ் தாமோதர் உள்ளிட்ட மும்பையை தளமாகக் கொண்ட ஐந்து ஜவுளி தொழிலதிபர்களின் முன்மொழிவை பால்கே ஏற்றுக்கொண்டார்.

ஜனவரி 1, 1918 அன்று, 'பால்கே பிலிம்ஸ் கம்பெனி' 'இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனி' என பெயர் மாற்றப்பட்டது[3]. அங்கு ஆப்தே நிர்வாக பங்குதாரராகவும், பால்கே பணி பங்குதாரராகவும், மற்றவர்கள் நிதி பங்காளிகளாகவும் நியமிக்கப்பட்டனர்.

பெயர் மாற்றப்பட்ட நிறுவனத்தின் முதல் படம் 'ஸ்ரீ கிருஷ்ண ஜன்மா' (1918). இதில் பால்கேவின் ஆறு வயது மகள் மந்தாகினி கிருஷ்ணராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் 5,500 அடி நீளமும், ஆறு ரீல்களும் கொண்டது. படம் ஆகஸ்ட் 24,1918 அன்று மும்பையின் மெஜஸ்டிக் திரையரங்கில் திரையிடப்பட்டது. இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. 3,00,000 ரூபாய் வசூலித்தது.

பால்கேயின் அடுத்த படமான 'கலிய மர்தன்' (1919), கிருஷ்ணரால் விஷப்பாம்பான காளிங்கனைக் கொன்ற அத்தியாயத்தை சித்தரித்தது. இத்திரைப்படம் மே 3, 1919 அன்று மும்பையின் மெஜஸ்டிக் சினிமாவில் வெளியிடப்பட்டு வர்த்தக ரீதியில் வெற்றி பெற்று பத்து மாதங்கள் ஓடியது.

கருத்து வேறுபாடுகள் & ஓய்வு

'இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனி' தயாரித்த இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. திரைப்படத் தயாரிப்பில் அவர்கள் தலையிடுவதை பால்கே விரும்பவில்லை. பால்கே செய்த செலவுகள் மற்றும் எடுத்துக்கொண்ட நேரம் குறித்து பங்குதாரர்கள் அதிருப்தியில் இருந்தனர். பால்கே நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவரது வழக்கறிஞர் 'இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனி' உடனான ஒப்பந்தத்தின் உட்பிரிவுகளை கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதன்படி, இது 15 ஆண்டிற்கான ஒப்பந்தம். பால்கே நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தால், அவருக்கு லாபத்தில் 1,50,000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது. மேலும், நிறுவனத்திற்கு 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் பிறகு வேறுபாடுகளைத் தீர்க்க முயன்று தோல்வியுற்ற பின்னர், பால்கே நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். பால்கே வெளியேறினால், அவரது பொறுப்புகளை ஏற்குமாறு பால்கேயின் நண்பர்களை பங்குதாரர்கள் அணுகினர். அவர்கள் அனைவரும் ராஜா ஹரிஷ்சந்திரா (1913) முதல் பால்கேவுடன் தொடர்புடையவர்கள். மேலும் திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு துறைகளைக் கையாள பால்கேவால் பயிற்சி பெற்றவர்கள். அவர்களின் ஒப்புதலுடன், மாமா ஷிண்டே, அன்னா சலுங்கே, கஜனன் சானே, டிரிம்பக் பி தெலாங், தத்தாத்ரேயா தெலாங் மற்றும் நாத் தெலாங் ஆகியோருடன் தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் பால்கே. பிறகு, தனது குடும்பத்துடன் காசிக்குச் சென்று, தனது ஓய்வை அறிவித்தார். மேலும், 'நவ்யுக்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

'ரங்கபூமி' நாடகம்

காசியில் தங்கியிருந்தபோது, பயண நாடக நிறுவனமான கிர்லோஸ்கர் நாடக மண்டலியின் பல இந்தி நாடகங்களைப் பார்த்தார். மாஸ்டர் மன்ஹார் பார்வே, அவரது தந்தை கணபதிராவ் பார்வே மற்றும் அதன் உரிமையாளர் சங்கர் பாபுஜி மஜும்தார் மற்றும் நாவலாசிரியர் நாராயண் ஹரி ஆப்தே ஆகியோர் பால்கேவுடன் நண்பர்களாக இணைந்தனர். நாடகம், சினிமா, இசை, இலக்கியம் ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து அவர்கள் தொடர்ந்து விவாதித்தனர். அப்படி ஒரு சந்திப்பின் போது, பால்கே ஒரு நாடகம் எழுத வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். சுமார் இரண்டரை மாதங்களில் 'ரங்கபூமி' என்ற மராத்தி மொழி நாடகத்தை எழுதி முடித்தார்.

இந்த நாடகம் அப்போதைய சமகால நாடக மற்றும் மேடை நிலைமைகள் குறித்த ஒரு நையாண்டியாக இருந்தது. காசியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வில் கலந்து கொண்ட பால கங்காதர திலகர் மற்றும் ஜி.எஸ்.கபர்டே ஆகியோரிடமும் பால்கே நாடகத்தை வாசித்துக் காட்டி இருவரிடமும் பாராட்டைப் பெற்றார். பால்கே இந்த நாடகத்தின் ஒத்திகையை பூனாவில் உள்ள ஆரியா திரையரங்கில் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஏற்பாடு செய்தார்.

பல்வேறு தொழில்முறை நாடக நிறுவனங்கள் 'ரங்கபூமி' நாடகத்தை அரங்கேற்ற பால்கேவை அணுகின. ஆனால் அவர் 1922-ம் ஆண்டு மும்பையின் பாலிவாலா தியேட்டரில் அரங்கேற்றினார். இது ஏழு அங்கங்கள் கொண்ட நாடகம். எனவே பால்கே அதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்தார். நான்கு நாடகங்கள் ஒரு இரவிலும், மீதமுள்ள மூன்று நாடகங்கள் அடுத்த இரவிலும் அரங்கேற்றப்பட்டன. மும்பை, பூனா, நாசிக் ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 75,000 ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் மக்களிடையே சரியான வரவேற்பைப் பெறவில்லை.

மறுபிரவேசம், புகழ் சரிவு

பால்கேவை மீண்டும் திரையுலகில் சேர வைக்க பலரும் முயன்றனர். திரைப்படத் தயாரிப்பாளர் ஜாம்ஷெட்ஜி ஃப்ராம்ஜி மதன் தனது திரைப்பட நிறுவனமான மதன் தியேட்டரின் கீழ் படங்களைத் தயாரிக்க வழங்கிய வாய்ப்பை பால்கே நிராகரித்தார்.

'சந்தேஷ்' எனும் மராத்தி நாளிதழின் ஆசிரியர் 'அச்யுத் கொல்ஹாட்கர்', பால்கேவிடம் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கடிதம் எழுதினார். அதற்கு பால்கே, "சினிமாவைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன், மீண்டும் அந்த நிலைக்குத் திரும்ப விருப்பமில்லை" என்று பதிலளித்தார். கொல்ஹாட்கர் பால்கேவின் கடிதத்தை "தாதாசாகேப் பால்கே இறந்துவிட்டார்" என்ற தலைப்பில் வெளியிட்டார். பல வாசகர்கள் பால்கே மீண்டும் நடிக்க வேண்டும் என்று சந்தேஷுக்கு கடிதம் எழுதினர். இந்தக் கடிதங்கள் அனைத்தும் சந்தேஷ் நாளிதழில் பிரசுரமாயின. செய்தித்தாளின் அனைத்து இதழ்களையும் கொல்ஹாட்கர் காசியில் இருந்த பால்கேவுக்கு அனுப்பினார். இந்தக் கடிதங்களைப் படித்த பால்கே நாசிக்கிற்கு திரும்பி வர முடிவு செய்தார்.

இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனியை விட்டு பால்கே விலகிய பிறகு, அந்த நிறுவனத்தின் பூனா கிளையான பாரத் பிலிம் கம்பெனி மூடப்பட்டதால் அதன் நிதி நிலைமை மோசமடைந்தது. பால்கே நாசிக் திரும்பிய செய்தியைக் கேள்விப்பட்டதும், நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் வாமன் ஆப்தே மற்றும் ஆர்யன் சினிமாவின் உரிமையாளர் பாபுசாஹேப் பதக், மீண்டும் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்புத்துறையில் தலைவராகவும், தொழில்நுட்ப ஆலோசகராகவும் சேர பால்கேவுக்கு அழைப்பு விடுத்தார். பால்கே உடனடியாக கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 1,000 ரூபாய் மாதச்சம்பளத்தில் ஊழியராக சேர்ந்தார்.

இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு பால்கே இயக்கிய முதல் படம் 'சந்த் நாம்தேவ்'. 28 அக். 1922 அன்று வெளியிடப்பட்டது. அதன்பிறகு, 1929 வரை அந்நிறுவனத்திற்காக திரைப்படங்களை இயக்கினார். இருப்பினும், இந்த படங்கள் எதுவும் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. நிறுவன உரிமையாளர்களுடன் பால்கேவுக்கு தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவர் 1929 வரை இரண்டு முறை அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

அவர் முதல் முறையாக திரும்பி வந்தபோது, அவருக்கு மாத சம்பளம் 1000-ல் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டது. இரண்டாவது முறை அத்தொகை 250 ரூபாயாக குறைக்கப்பட்டது. நான்கு பங்குதாரர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு, வாமன் ஆப்தேவின் பொறுப்பாளராக இருந்தார். நிறுவனம் விதித்த கட்டுப்பாடுகளில் இணக்கம் கொள்ளாத பால்கே, அடுத்த படத்துக்கான மூலதனத்தைத் தானே திரட்ட முயன்றார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் நேரத்தில் மூலதனத்தைத் திரட்ட பால்கேவை ஆப்தே அனுமதிக்காததால், பால்கே அந்நிறுவனத்திலிருந்து விலகினார்.

சேதுபந்தன் - பால்கே டயமண்ட் கம்பெனி

'பால்கே டயமண்ட் கம்பெனி' என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்து, இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனியின் முன்னாள் பங்குதாரரான மாயாசங்கர் பட் என்பவரை அணுகினார் பால்கே. பட் 50,000 ரூபாய் மூலதனத்தை வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால் படம் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். பால்கே இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு 'சேதுபந்தன்' திரைப்பட வேலைகளை தொடங்கினார். வெளிப்புற படப்பிடிப்பு சென்னை மற்றும் ரத்னகிரியில் உள்ள ஹம்பியில் நிறைவடைந்தது. ஆனால், படம் முடிவதற்குள் படத்திற்கான நிதி தீர்ந்துவிட, பட் மேற்கொண்டு முதலீடு செய்ய மறுத்துவிட்டார். பால்கே அதிக மூலதனத்தைத் திரட்ட முயன்றும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், அடுத்த ஒரு வருடத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

ஹிந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனியைச் சேர்ந்த வாமன் ஆப்தே இப்படத்திற்காக அமைக்கப்பட்ட செட்களைப் பார்த்து மகிழ்ந்து, பால்கேவுக்கு உதவ ஒப்புக்கொண்டார். 'பால்கே டயமண்ட் கம்பெனி'யை தனது நிறுவனத்துடன் இணைக்க அவர் முன்மொழிந்தார். பால்கே மீண்டும் ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் சேர்ந்தார். இந்துஸ்தான் சினிமா பிலிம்ஸ் கம்பெனியின் பதாகையின் கீழ் மும்பை இம்பீரியல் ஃபிலிம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பை மாற்றினார். சேதுபந்தன் திரைப்படத்தை எடுத்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்துஸ்தான் சினிமா கம்பெனிக்கான பதினைந்து வருட ஒப்பந்தம் முடிவடைந்ததும், ஆப்தே நிறுவனத்தை கலைக்க முடிவு செய்தார்.

அந்த நேரத்தில், மார்ச் 14, 1931 அன்று இந்திய சினிமாவின் முதல் ஒலிப்படமான 'ஆலம் ஆரா' அன்று வெளியானதன் மூலம் பேசும் படங்கள் இந்தியாவில் திரையிடப்பட்டன. 'சேதுபந்தன்'(1932) மௌனப் படமாக இருந்ததால், ஒலிப்படங்களுடன் போட்டியில் திரையரங்குகளைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டது. 'ஆலம் ஆரா' படத்தின் இயக்குனர் அர்தேஷிர் இரானி, சேதுபந்தனுக்கு ஒலி சேர்க்க பால்கேவுக்கு பரிந்துரைத்தார். பால்கே ஏற்றுக்கொண்டு இரானியின் ஸ்டுடியோவில் 40,000 ரூபாய் செலவில் படத்தை இந்தியில் டப் செய்தார். பிறகு, 1934--ம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டது. ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

கங்காவதாரன்: கடைசி படம், ஒரே பேசும் படம்.

டிசம்பர் 1934-ம் ஆண்டு, கோலாப்பூர் சுதேச மாநிலத்தின் மகாராஜா மூன்றாம் ராஜாராம், தனது திரைப்பட நிறுவனமான 'கோலாப்பூர் சினிடோன்'க்காக ஒரு ஒலிப்படத்தைத் தயாரிக்க பால்கேவை அழைத்தார். பால்கே அந்த அழைப்பை நிராகரித்தார். ஆனால் மகாராஜா மீண்டும் அவரை அழைக்க, அழைப்பை ஏற்றுக்கொண்ட பால்கேவுக்கு, கதை மற்றும் திரைக்கதை எழுத 1,500 ரூபாய் மற்றும் மாதச் செலவிற்கு 450 ரூபாயை மகாராஜா வழங்கினார். நாவலாசிரியர் நாராயண் ஹரி ஆப்தே பால்கேவுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுத உதவினார். விஸ்வநாத் ஜாதவ் படத்திற்கு இசையமைத்தார். பால்கே பாடல்களை எழுதினார். 2,50,000 ரூபாய் செலவில் இரண்டு ஆண்டுகளில் 'கங்காவதாரன்' திரைப்படம் முடிக்கப்பட்டது.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 6, 1937 அன்று மும்பையின் ராயல் ஓபரா ஹவுஸில் வெளியிடப்பட்டது. பால்கே இயக்கிய ஒரே ஒலிப்படம் கங்காவதாரன் மட்டுமே.

இறுதிக்காலம், மறைவு

Dadasaheb Phalke with Wife
மனைவி சரஸ்வதிபாயுடன் பால்கே

பால்கேவால் வளர்ந்து வந்த ஒலி திரைப்பட தொழில்நுட்பத்திற்கு பேசும் படங்களின் போட்டியை சமாளிக்க இயலவில்லை. தனிப்பட்ட முறையில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த தாதாசாகேப் பல்கே, தனது இறுதி நாட்களில் மிகுந்த அவதிப்பட்டார். காலப்போக்கில் அவருடைய குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்திருந்தது.

இயக்குனர் சாந்தாராம் போன்ற தனி நண்பர்களின் உதவியால் பால்கேவுக்கு அவ்வப்போது நிதியுதவிகலள் கிடைத்தன.

பால்கே 16 பிப்ரவரி, 1944 அன்று இறந்தார்.

Dadasaheb Phalke 1971 stamp of India
அரசு வெளியிட்ட அஞ்சல் தலை (1971)

விருது மற்றும் அங்கீகாரம்

பால்கேயின் வாழ்நாளிலும் இறுதிக் காலகட்டத்திலும் அவரது முன்னோடி முயற்சிகளும், படைப்புகளின் முக்கியத்துவமும் கவனிக்கப்படவில்லை. பின்னாளில், அவரது படங்களின் அசல் படச்சுருள்களிலிருந்து 3,700 அடிகள் கொண்ட சில துண்டுக்காட்சிகளை மட்டுமே புனே தேசிய திரைப்படக் காப்பகத்தால் பாதுகாக்க முடிந்தது.

பால்கேயின் மரணத்துக்கு பல வருடங்கள் பின்னரே திரை ஆர்வலர்களின் முயற்சிகள் மூலம் அவரது புகழ் பரவத் தொடங்கியது.

பால்கேவின் பங்களிப்பை கௌரவிக்க, இந்திய அரசு 1969 -ம் ஆண்டு 'தாதாசாகேப் பல்கே விருது' என்னும் விருதை நிறுவியது. இந்திய திரைத்துறையில் ஆகச்சிறந்த அங்கீகாரமாக இவ்விருது கருதப்படுகிறது[4].

1971-ம் ஆண்டு, இந்திய அஞ்சல் துறை இவரது முகம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

2009-ம் ஆண்டில், நாடக நடிகர் பரேஷ் மோகாஷி 'ஹரிஷ்சந்திராச்சி ஃபேக்டரி[5] (Harishchandrachi Factory) என்ற மராத்தி மொழி படத்தை உருவாக்கினார். இப்படம் 1913-ல் ஆண்டில் ராஜா ஹரிஷ்சந்திரா படத்தை உருவாக்குவதில் பால்கேவின் போராட்டத்தை சித்தரிக்கிறது. 2009-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரையாக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது[6].

ஏப்ரல் 30, 2018 அன்று கூகுள் இந்தியா பால்கேவின் 148வது பிறந்தநாளை கௌரவித்தது. கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அவரது கூகுள் டூடுல் ஓவியம் இடம்பெற்றது.[7]

குறிப்பிட்ட திரைப்படங்கள்

தாதாசாகெப் பால்கே 1913 முதல் 1937 வரை நீடித்த தனது திரை வாழ்க்கையில் 95 நீளத்திரைப்படங்களையும் 27 குறும்படங்களையும் தயாரித்தார்.

  • ராஜா ஹரிஷ்சந்திரா (1913)
  • மோஹினி பாஸ்மாசூர் (1913)
  • சத்தியவான் சாவித்ரி (1914)
  • லங்கா தஹன் (1917)
  • ஸ்ரீ கிருஷ்ண ஜன்மா (1918)
  • கலிய மர்தன் (1919)
  • புத்தாதேவ் (1923)
  • செது பந்தன் (1932)
  • கங்காவதாரன் (1937)

அடிக்குறிப்புகள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2024, 12:54:32 IST