under review

வெண்முரசு: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
m (Okey)
Line 1: Line 1:
{{being created}}
{{ready for review}}
[[File:Venmurasu.jpg|thumb|வெண்முரசு(தொடர் நாவல்)]]
[[File:Venmurasu.jpg|thumb|வெண்முரசு(தொடர் நாவல்)]]



Revision as of 21:59, 31 January 2022


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வெண்முரசு(தொடர் நாவல்)


வெண்முரசு உலகின் மிகப் பெரிய நாவல். மொத்தம் 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடையது. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். ‘வெண்முரசு’ மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்ந்துள்ளது. மகாபாரதத்தில் மிகக் குறுகிய இடத்தினைப் பெற்ற சிறிய கதைமாந்தர்களை அவர்களின் செயல்பாடுகள், எண்ணவோட்டங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கம் செய்துள்ளது. மானுட பேரறத்தை முதன்மையாகக் கொண்டு, காலவேட்டத்தில் மானுடர் மனத்தில் எழுந்தடங்கும் உணர்ச்சிகளையும் தத்துவ மோதல்களையும் அகதரிசனங்களையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

பிற நாவல்களைப் போல் அல்லாமல் இந்த நாவல் எழுதப்படும் போதே முழுக்க முழுக்க இணையப் பதிப்பாகவே வெளியிடப்பட்டது. இது எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் ஜனவரி 1, 2014முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020 இல் நிறைவு பெற்றது. உலகின் பெரிய நாவல்களுள் ‘வெண்முரசு’ நாவல் மட்டுமே இணையத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் முதல் நான்கு பகுதிகளை மட்டும் நற்றிணை பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் ‘வெண்முரசு’ நாவலின் 26 பகுதிகளையும் முழுமையாக வெளியிட்டது.

ஆசிரியர்

எழுத்தாளர் ஜெயமோகன்

நவீனத் தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என்ற மாபெரும் ஆளுமைகள் வரிசையில் வைத்துச் சிறப்பிக்கப்படுபவர் எழுத்தாளர் ஜெயமோகன் (ஏப்ரல் 22, 1966).

இவர், 1980களில் இருந்து தொடர்ந்து நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். முழுநேர எழுத்தாளர். தமிழ், மலையாளத் திரையுலகங்களில் திரைக்கதை, வசனம் எழுதி வருகிறார். இவருடைய மனைவி எழுத்தாளர் அருண்மொழி நங்கை. இவருக்கு அஜிதன், சைதன்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரின் குரு நித்ய சைதன்ய யதி.

இவரின் முதல் நாவல் ‘ரப்பர்’ (1988). இந்த நாவலுக்கு ‘சம்ஸ்கிருதி சம்மான் விருது’ கிடைத்தது. இவரின் மகத்தான படைப்பு ‘விஷ்ணுபுரம்’ நாவல். தமிழ்ப் படைப்புலகில் மிகுந்த அதிர்வை எழுப்பிய நாவல் இது. அதன்பின்பு இவர் எழுதிய செவ்வியல் படைப்பு ‘கொற்றவை’. இது, சிலப்பதிகாரத்தை அதன் தொன்மங்களை முன்வைத்து விரித்துச் சொல்லப்பட்ட புதுக்காப்பிய வடிவம். அதற்கு அடுத்து இவர் எழுதிய மாபெரும் படைப்பு ‘வெண்முரசு’ நாவல். இவரின் உச்சநிலை படைப்பு ‘குமரித்துறைவி’ நாவல்.

இவர் தான் எழுதிய அனைத்துப் படைப்புகளையும் தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றி, அவற்றை வாசகர்கள் முற்றிலும் இலவசமாகப் படிக்குமாறு செய்துள்ளார். நடுவண் அரசு இவரின் இலக்கியச் சேவையைப் பாராட்டி ‘பத்மஸ்ரீ’ விருதினை நல்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய வாசகர் குழுவை ஒருங்கிணைத்து ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்பதை ஆகஸ்ட் 2009இல் தொடங்கினார். இந்த அமைப்பு தமிழின் மூத்த படைப்பாளர்களைச் சிறப்பிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை நல்கி வருகிறது.

நாவல் பின்புலம்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இளம் வயதிலேயே மகாபாரதம் அறிமுகமாகியது. அவரது அம்மா மலையாளத்தின் துஞ்சத்து எழுத்தச்சனின் மகாபாரதம் கிளிப்பாட்டை வாசித்த முறையும் சடங்குகளும் ஒரு தொடக்கமாக அவருக்கு அமைந்தது. ஒட்டுமொத்த கதையை அறிந்த பின்னர், திருவட்டார் கோவிலின் முன்னிருக்கும் கதகளி மண்டபத்தில் அரங்கேறிய கதகளி காட்சிகளைக் கண்டு அவர் அந்த ஆடுநர்களையே உயிர்ப்புள்ள மகாபாரத மாந்தர்களாக உணர்ந்து கொண்டார். இளமையில் அவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றபோது, கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியாவின் அனைத்து எல்லைகளுக்கும் பயணித்தார். இந்திய நிலங்களில் மகாபாரதத்தின் வளர்ச்சிநிலையை எவ்வாறெல்லாம் உள்ளது என்பது பற்றி அறிந்துகொண்டார். அவற்றை நேரடியாக காணும் தருணங்களும் அவருக்கு வாய்த்தன.

தன்னுடைய குரு நித்ய சைதன்ய யதியின் வழியாக இந்திய தத்துவ மரபுகளையும் அவை சார்ந்த நூல்களையும் ஆழ்ந்து கற்றார். அவை தொடர்பான விரிந்த விவாதகங்களில் பங்குகொண்டார். தன்னுடைய புரிதலைப் புனைவில் கலந்து மகாபாரதத்தின் மிச்சிறு கூறுகளை மட்டும் விரித்து, சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும் நாடகங்களாகவும் எழுதத் தொடங்கினார்.

இவர் எழுதிய திசைகளின் நடுவே, பத்மவியூகம், நதிக்கரையில், காவியம், இறுதிவிஷம், களம், அதர்வம், வடக்குமுகம், பதுமை போன்ற அனைத்துப் படைப்புகளும் மகாபாரதப் பின்னணியில் அமைந்தவையே. ‘முழு மகாபாரதத்தையும் மீட்டுருவாக்கம் செய்து நவீனத் தமிழ் நடையில் எழுத வேண்டும்’ என்பது, இவரின் பல்லாண்டுக் கனவு. அது ‘வெண்முரசு’ என்ற மாபெரும் நாவல் வடிவில் நனவாகியுள்ளது. புராணம்’ இன்றைய நவீன இலக்கியமாக அமைவுகொள்ளும் மாபெரும் புனைவுச் செயல்பாடுதான் இந்த ‘வெண்முரசு’ நாவல்.

இலக்கிய இடம்

இந்தியப் புனைவு இலக்கியங்களில் மகாபாரதமே முதன்மையானது. வியாசர் தொடங்கி இன்றுவரை மகாபாரதத்தை வெவ்வேறு வடிவில், மொழிவளத்தில் எண்ணற்றோர் எழுதியுள்ளனர். ஆனால், காலத்தின் தேவையை உணர்ந்து நவீனத் தமிழில் இளந்தலைமுறையினரைக் கணக்கில்கொண்டு, ‘அவர்களுக்கு மகாபாரதத்தை, அவர்களுக்கு ஏற்ற வடிவில் கையளிக்க வேண்டும்’ என்று முனைப்புடன் எழுதப்பட்டதுதான் ‘வெண்முரசு’ நாவல். அந்த வகையில் இது இந்திய நவீனப் புனைவு இலக்கியங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நாவலால் தமிழ் இலக்கியத்தில், ‘வெண்முரசு நடை’ என்ற ஒரு நவீனச் செவ்வியல் எழுத்து நடை தோற்றம் பெற்றுள்ளது. மகாபாரதம்’ நடந்த காலக்கட்டம் பழைய காலம் என்பதாலும் அதனை நவீன யுகத்து வாசகருக்கு அதன் செவ்வியல் தன்மை மாறாமல் கையளிக்க வேண்டும் என்ற வேட்கையாலும் ‘வெண்முரசு’ நாவல்தொடரில் பல்வேறு புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஏற்பட்டது. அவற்றை அவரே உருவாக்கிக்கொண்டார். ஏறத்தாழ 500 புதிய தமிழ்ச்சொற்களை அவர் இந்த நாவலுக்காகவே உருவாக்கியுள்ளார். இது இந்த நாவலால் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கும் சொற்கொடை.

‘வெண்முரசு’ நாவல் பகுதிகளின் தலைப்புகள்

1.   முதற்கனல்

அஸ்தினபுரியின் அரசனாகப் பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காகக் காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும் பீஷ்மரை அம்பை சபிப்பதும் அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும் அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் ‘முதற்கனல்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் முதல்பகுதியில் இடம்பெறுகின்றன.

2.  மழைப்பாடல்

திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பதும் குந்தி பாண்டுவை மணப்பதும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்குக் கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பின்னர் குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் பிறப்பதும் மாத்ரிக்கு நகுலன்ஈ சகதேவர்கள் ஆகியோர் பிறப்பதும் திருதராஷ்டிரருக்குத் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் நாவலில் வருகின்றன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரி வருவதுடன் ‘மழைப்பாடல்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் இரண்டாம் பகுதி நிறைவு பெறுகிறது.

3.  வண்ணக்கடல்

‘இளநாகன்’ என்ற தமிழகப் பாணனின் பார்வைக் கோணத்தில் விரிகிறது, ‘வெண்முரசு’ நாவலின் மூன்றாம் பகுதியாகிய இந்த ‘வண்ணக்கடல்’. இதில் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் இளமைக்காலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. துரோணரைத் துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் இந்தப் பகுதியில் நிகழ்கின்றன.

4.  நீலம்

‘வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதியாகிய ‘நீலம்’ மகாபாரத வரிசையில் இருந்து விலகி, பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம். ‘ராதாமாதவ’ மனநிலையைக் கொண்டாடும் பகுதி இது.

5.  பிரயாகை

துரோணரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். கிருஷ்ணன் தன் நாட்டினை மீட்பதற்காகத் தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறான். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் ‘பிரயாகை’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் ஐந்தாம் பகுதி நிறைவுறுகிறது.

6.  வெண்முகில் நகரம்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. அவர்களுக்கு இடையேயான பிரிவினை முற்றி ‘இந்திரபிரஸ்தம்’ என்ற நகரைப் பாண்டவர்கள் அமைக்கின்றனர். அந்த நகரைப் பற்றியும் கிருஷ்ணனின் துவாரகை நகரைக் குறித்தும் ‘வெண்முகில் நகரம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதி விரிவாகக் கூறுகிறது.

7.   இந்திர நீலம்

இந்த நாவலும் நீலத்தைப் போலவே மகாபாரதக் கதையின் மையத்தை விட்டு விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் எட்டு அரசியர்களைப் பற்றி விரிவாக உரைக்கிறது. வெண்முரசு தொடர் நாவல் முழுவதிலுமே கிருஷ்ணர் (இளைய யாதவர்)தான் மையமாக இருக்கிறார் என்றாலும்கூட ‘நீலம்’, ‘இந்திரநீலம்’ ஆகிய நாவல்களில் முழுவதுமாக அவரே இருக்கிறார். நீலத்தில் மாயக்கிருஷ்ணன்; இந்திர நீலத்தில் மானுடக்கிருஷ்ணன். அந்த வகையில் ‘இந்திரநீலம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் ஏழாம் பகுதி மகாபாரதத்தை எட்டிநின்று தொடுகிறது.

8.  காண்டீபம்

இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பின்னர் அர்ஜுனன் யாத்திரை மேற்கொள்வதை ‘காண்டீபம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதி விவரிக்கிறது. உலூபி, சித்ராங்கதை ஆகியோரை அர்ஜுனன் மணப்பதையும் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையையும் மணப்பதையும் விளக்கி, நிறைவடைகிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் இந்தப் பகுதியில் உள்ளன.

9.  வெய்யோன்

கர்ணனின் அங்கதேசத்தையும் அவன் மனைவியருடனான அவல வாழ்வு குறித்தும் ‘வெய்யோன்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதி பேசுகிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் மனத்தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

10. பன்னிருபடைக்களம்

சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணனராலும் மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதைச் சொல்கிறது ‘பன்னிருபடைக்களம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதி. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இந்தப் பகுதி நிறைவு பெறுகிறது.

11.  சொல்வளர்காடு

பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்லும் நாவல் இது. நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு, பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையைக் கண்டடைவதுடன் ‘சொல்வளர்காடு’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 11ஆம் பகுதி நிறைவுகொள்கிறது.

12. கிராம்

இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஓர் இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் ‘கிராதம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 12ஆம் பகுதி நுட்பமாகப் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் இந்தப் பகுதி நிறைவு பெறுகிறது.

13. மாமலர்

பீமன் திரௌபதிக்காகக் கல்யாண சௌந்திக மலரை தேடிச் செல்லும் பயணம் ‘மாமலர்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 13ஆம் பகுதியில் உள்ளது. அந்தப் பயணத்திற்கு இணையாக யயாதியின் கதை தேவயானி, சர்மிஷ்டை ஆகியோரின் வழியாகச் சொல்லப்படுகிறது.

14. நீர்க்கோலம்

பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்தப் பகுதி சித்தரிக்கிறது. அந்தத் தலைமறைவு வாழ்க்கைக்கு இணையாக நளன், தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது. பக்க எண்ணிக்கையில் ‘நீர்க்கோலம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 14ஆம் பகுதிதான் பெரியது.

15. எழுதழல்

உப பாண்டவர்கள், உப கௌரவர்கள் ஆகியோரைப் பற்றிய சித்தரிப்புகள் ‘எழுதழல்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 15ஆம் பகுதியில் இடம்பெறுகின்றன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை மிகவும் முற்றிவிடுகிறது. அந்தப் பகை அவர்களைப் போரை நோக்கி, இட்டுச் செல்கிறது.

16. குருதிச்சாரல்

போரினைத் தடுப்பதற்காகப் பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் (இளைய யாதவர்) துரியோதனனிடம் தூது சென்றதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது ‘குருதிச்சாரல்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 16ஆம் பகுதி. இந்தத் தூதுப் பயணத்தகவல்கள் அனைத்தும் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் மனைவியர்கள் வழியாகவே சொல்லப்படுகின்றன.

17. இமைக்கணம்

இமைக்கணம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 17ஆம் பகுதி கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாகக் கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகின்றன. கீதையைப் போலவே இந்த நாவலும் ஒரு மாயவெளியில் நடைபெறுகிறது.

18. செந்நாவேங்கை

குருஷேத்திரப்போர் நடைபெறுவது உறுதியான பின்னர், பாண்டவர்களும் கௌரவர்களும் தத்தமது தரப்புக்கு வலுசேர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் பேரங்கள் ‘செந்நாவேங்கை’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 18ஆம் பகுதியில் இடம்பெறுகின்றன. நாவலின் இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது.

19. திசைதேர்வெள்ளம்

குருஷேத்திரக் களத்தில் பீஷ்மர் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி, நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் ‘திசைத்தேர்வெள்ளம்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 19ஆம் பகுதியில் இடம்பெறுகின்றன.

20. கார்கடல்

துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திரப் போர் ‘கார்கடல்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 20ஆம் பகுதி இடம்பெறுகிறது.

21. இருட்கனி

துரோணரின் மரணத்துக்குப் பின்னர், கர்ணன் கௌரவரப்படைக்குத் தலைமை ஏற்பதும் கர்ணன் அர்ஜுனனால் கொல்லப்படுவது வரையிலான நிகழ்வுகளும் ‘இருட்கனி’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 21ஆம் பகுதியில் இடம்பெறுகின்றன.

22. தீயின் எடை

துரியோதனனின் மரணமும் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் பாண்டவ மைந்தர்கள் தீயிட்டுக் கொல்லப்படுவதும் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளன. ‘தீயின் எடை’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 22ஆம் பகுதியுடன் பாரதப்போர் நிறைவடைகிறது.

23. நீர்ச்சுடர்

உப பாண்டவர்கள் இறந்த பின்னர் கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகள் ‘நீர்ச்சுடர்’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 23ஆம் பகுதியில் சொல்லப்பட்டுள்ளன.

24. களிற்றியானைநிரை

பாரதப்போரில் வெற்றிபெற்ற பின்னர் அஸ்தினபுரி மெல்ல மெல்ல தன்னிலைக்குத் திரும்புவதையும் பாரதவர்ஷத்தின் மிகப் பெரிய நாடாக அஸ்தினபுரி உருவெடுப்பதையும் ‘களிற்றியானைநிரை’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 24ஆம் பகுதி சித்தரிக்கிறது.

25. கல்பொருசிறுநுரை

கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாகப் போரிட்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணரின் மரணத்துடன் ‘கல்பொருசிறுநுரை’ என்ற ‘வெண்முரசு’ நாவலின் 25ஆம் பகுதி முடிகிறது.

26. முதலாவிண்  

வெண்முரசு நாவலின் இறுதிப் பகுதி ‘முதலாவிண்’. பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தைச் சித்தரிக்கிறது. பக்க எண்ணிக்கையில் இந்தப் புகுதிதான் சிறியது.

பிற வடிவங்கள்

‘வெண்முரசு’ நாவலின் நான்காவது பகுதி ‘நீலம்’. சுபஸ்ரீ அதனை முழுவதுமாகத் தன் குரலால் ஒலிப்பதிவு செய்து, ஒலிக்கோப்பாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறப்புகள்

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் தொடர்பான விளம்பரம்

‘வெண்முரசு’ நாவலின் அத்தியாயத்திற்கு ஓர் ஓவியமென முடிவு செய்யப்பட்டு, ஓவியர் ஷண்முகவேலின் கற்பனை மிகுந்த ஓவியங்களோடு வெளிவந்தது. இணையத்தில் எழுதப்படும் ஒரு தமிழ் நாவல் இவ்வாறு ஓவியங்களுடன் வெளிவருவது இதுவே முதல் முறை.

‘வெண்முரசு’ நாவலுக்காக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு நாவலுக்காக ஆவணப்படம் தயாரிப்பது’ என்பது, தமிழில் இதுவே முதல்முறை. இந்த ஆவணப்படத்தை அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் அமெரிக்காவின் பல நகரங்களிலும் கனடாவிலும் திரையிடப்பட்டது.

‘வெண்முரசு’ நாவலுக்காக இசைக்கோவை தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு நாவலுக்காக இசைக்கோவை தயாரிப்பது’ என்பது, தமிழில் இதுவே முதல்முறை. 'A Musical Tribute to Venmurasu' என்ற இந்த இசைக்கோவையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்-அமெரிக்க கிளை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் கமல்ஹாசன், பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த இசைக்கோவை வெளியிடும் நிகழ்ச்சி அக்டோபர் 9, 2021இல் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த இசைக்கோவையை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திக்குறிப்புகள் சிகாகோ Daily Herald, பிட்ஸ்பர்க் post-gazette, நியூயார்க் Buffalow News  என முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்தன.

தொடர்பானவை

உசாத்துணை

http://sureshezhuthu.blogspot.com/2020/07/blog-post_19.html

https://www.jeyamohan.in/159388/



== [[Category:Tamil Content]] ==