under review

சுவாமி இராமதாசர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 86: Line 86:
* [https://inbachudar.blogspot.com/2014/07/blog-post.html முதுதமிழ்ப் பெரும்புலவர் தமிழவேள் சுவாமி இராமதாசர் - இன்பச்சுடர் சந்திரன்]
* [https://inbachudar.blogspot.com/2014/07/blog-post.html முதுதமிழ்ப் பெரும்புலவர் தமிழவேள் சுவாமி இராமதாசர் - இன்பச்சுடர் சந்திரன்]
*[https://selliyal.com/archives/234015 தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன]
*[https://selliyal.com/archives/234015 தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன]
{{first review completed}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]

Revision as of 04:56, 2 July 2022

சுவாமி இராமதாசர்
சுவாமி இராமதாசர் சிலை

சுவாமி இராமதாசர் (செப்டம்பர் 7, 1916 - ஏப்ரல் 28, 1998) மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு பாடுபட்ட தமிழ்ச் சான்றோர். இயற்பெயர் இராமலிங்கம். இவர் பினாங்கு தீவில் செந்தமிழ் கலாநிலையம் என்ற அமைப்பின் வழி பல்வேறு கலை, பண்பாட்டு சமய நிகழ்வுகளை  நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வந்தார். மலேசிய தமிழர்களின் வாழ்வியலில் மரபுசார் கலைகளையும் சமய ஞானத்தையும் இணைத்து பெரும் மாணவர் கூட்டத்தை வழிநடத்திய ஆளுமை.

பிறப்பு, கல்வி

சுவாமி இராமதாசர் உருவப்படம்

சுவாமி இராமதாசர், முகவை மாவட்டம் திருவரங்கம் அருகில் உள்ள கொளுந்துறை கிராமத்தில் செப்டம்பர் 7, 1916-ல் பிறந்தார். இவரது பெற்றோர் திரு.பழனியான்டி - திருமதி பெருமாத்தாள். தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தங்கள் மகனுக்கு இராமலிங்கம் என்று பெயரிட்டனர்.

இவரது தாய் வழி பாட்டனார், மாதவராமனும் தந்தை வழி பாட்டனார் சின்னழகனாரும் நிறைந்த தமிழ் அறிவும் சமய அறிவும் கொண்டவர்கள். எனவே குழந்தை இராமலிங்கத்துக்கு வளரும்போதே தமிழ் மொழியையும் சமய அறிவையும் கற்பித்து வளர்த்தனர். அதில் பாட்டனார் சின்னழகனார் இராமலிங்கத்தின் முதல் ஆசிரியராகவே செயல்பட்டார். பாட்டனாரிடமிருந்து கற்ற பாலகல்வியில் தேர்ச்சி பெற்ற இராமலிங்கம் தன் நான்கு வயதில் அவ்வூரில் புதிதாக தொடங்கப்பட்ட போஃர்ட் பள்ளியில் சேர்ந்தார். இப்பள்ளி தேவாலயத்தின் கீழ் இயங்கியது.  

போஃர்ட் பள்ளியை தேவாலயம் கலைத்த பின்னர்  இராமலிங்கம் கிராமத்து திண்ணை பள்ளியிலும் வேறு சில இடங்களிலும் தங்கி சில காலம் படித்தார். ஆயினும் தன் பாட்டனாரிடமே  இலக்கிய இலக்கண அறிவை வளர்த்துக் கொண்டார். போஃர்ட் பள்ளி 1929-ஆம் ஆண்டு கொளுத்துறையில் மறுபடியும் தொடங்கப்படவும், அதில் தன் கல்வியை மீண்டும் தொடர்ந்து திருவரங்கம் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு வரை படித்தார்.  

தன் இளமைக் காலத்திலேயே மூதுரை, நல்வழி, நன்னெறி, இராஜகோபாலமாலை, அம்பிகைமாலை, நீதி நெறி விளக்கம், மாரியம்மன் தாலாட்டு, நாராயண சதகம், அறப்பளீச்சுர சதகம், ராமாயணம், புராணங்கள், சைவ சித்தாந்தம் எனப் பலவும் கற்றார். அதே சமயம்  சிலம்பம், குத்துச்சண்டை, மல்யுத்தம், அம்பு எய்துதல், ஈட்டி வீச்சு என பல தற்காப்புகலைகளிலும் வேதாந்த கல்வி,  சித்தமருத்துவம்,  ஜோதிடம், போன்ற பிற நுண்கலைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு அவற்றை தக்க ஆசிரியர்களிடம் கற்று தேறினார்.

சுவாமி இராமதாசர் இந்து மத நூல்களில் கொண்டிருந்த பயிற்சியைப் போலவே பிற மத நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் சீறாப்புராண சொற்பொழிவுகள் சிங்கை இஸ்லாமியரால் வெகுவாகப் புகழ்ப்பட்டன.

தனி வாழ்க்கை

சுவாமி இராமதாசர் நூல்

இராமலிங்கம் தன் பதினான்காவது வயதில் பள்ளி கல்வியை நிறுத்திக் கொண்டார். தன் குடும்ப சூழல் காரணமாக அவர் தன் பாட்டனாருக்கு விவசாய வேலைகளில் துணையாக இருந்தார். தன் இருபதாவது வயது வரை அவர் தன் பாட்டனாருக்கு விவசாயத்தில் உதவுவதோடு, மருத்துவம், வேத கல்வி, சோதிடம், மற்போர், என பல கலைகளையும் தீவிரமாக கற்று வந்தார். இராமலிங்கம் 1937-ஆம் ஆண்டு தை முதல் நாள் தன் 21-ஆவது வயதில் ரஜூலா கப்பலில் பினாங்கு வந்து சேர்ந்தார்.  இராமலிங்கத்தின் தந்தைக்கும் பாட்டனாருக்கும் பினாங்கில் தொடர்புகள் இருந்தன. சில உறவினர்களும் பினாங்கில் தொழில் செய்து கொண்டிருந்தனர்.  பினாங்கில் இராமலிங்கம் வேளாளர் சங்க ஆதரவில் சில காலம் தங்கி சில இடங்களில் வேலை செய்தார். அவருடன் நெருங்கிப் பழகி அவரின் அறிவை வியந்த ஆசிரியர் அழகுமுத்து, இராமலிங்கம் என்ற அவரின் பெயரை இராமதாசர் என்று மாற்றவும் பின்னர் அதுவே நிலையான பெயராகியது.   

துறைமுகத்திலும் கல் ஆலையிலும் இராமதாசர் வேலை செய்தார். ஆனால் அவரின் இயல்புக்கு நிர்வாகத்தோடு ஒத்துப் போக முடியாததால் சில தினங்களிலேயே வேலையில் இருந்து விலகவேண்டியிருந்தது.

பொது வாழ்க்கை

தொழிலாளர் குடியிருப்புகளில் வாழ்ந்த குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் திட்டத்துடன் தொடங்கப்பட்ட செந்தமிழ் பாடசாலையில் கல்வி போதிக்கும் பணியை ஏற்றார்.  90, கோத்தோங் சாலை என்ற வீட்டு முகவரியில் இயங்கி வந்த வேளாளர் சங்க கட்டடத்தின் கீழ்த்தளத்தில் மே 5, 1937 அன்று இந்தப் பாடசாலை தொடக்கப்பட்டது. பத்தொன்பது மாணவர்களுடன் தொடக்கப்பட்ட இப்பாடசாலை ஓராண்டில் செல்வாக்குப் பெற்றது. இதே காலகட்டத்தில் சுவாமி இராமதாசர் தனது சித்த மருத்துவ நிலையத்தையும் தொடங்கினார். பலருக்கும் நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பதோடு பல சித்தவைத்திய மாணவர்களையும் அவர் உருவாக்கினார்.

ராமதாசர் வாழ்க்கை வரலாறு

உடல் வலிமை வாய்ந்த இருபது இளைஞர்களுக்கு சிலம்பம் மற்போர் போன்ற தற்காப்பு பயிற்சிகளையும் சுவாமி இராமதாசர் போதித்தார்.  இதனால் வெகு விரைவில் செந்தமிழ் பாடசாலையின் துடிப்பும் அறிவும் கொண்ட மாணவர் படையொன்று உருவாகி சமூக சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். எல்லா சமயத்தவர்களும் சுவாமி ராமதாசரின் மாணவர்களாக இருந்து கல்வியும் கலைகளும் பயின்றனர்.  அந்த மாணவர்களின் சமூக சேவையின் விளைவாக தொழிலாளர் குடியிருப்பில் அதுவரை இருந்து வந்த சமூகசீர்கேடுகள் குறைந்து அமைதி நிலவியது.   1955 முதல் 1960 வரை பினாங்கு வேளாளர் சங்க கட்டிடத்தில் பாரதி சொற்பயிற்சி மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, சொற்பயிற்சி, பரதநாட்டியம், நாடகம் போன்ற கலைகள் இலவசமாக கற்பிக்கப்பட்டன.

1957-ல் பினாங்கு தென்காசி முஸ்லீம்கள் விருப்பப்படி நண்பர்களின் துணையுடன் ‘தென்காசி முஸ்லிம் பாடசாலை’ ஒன்றை சுவாமி இராமதாசர் அமைத்துக் கொடுத்தார். அந்தப் பள்ளி 1975 வரை இயங்கிக் கொண்டிருந்தது.

சமூகப்பணி

1940-ஆம் ஆண்டு சம்பள உயர்வு போராட்டம் நாட்டில் தீவிரமடைந்தபோது பலரும் வேலையிழந்து அவதிப்பட்டனர். கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிய மக்களை சுவாமி இராமதாசர் தன் முயற்சியால்  காப்பாற்றினார். அவர்களுக்கு போதிய உணவும் உடையும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.  மேலும் மக்களை பின்னுக்குத் தள்ளும் பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கு  எதிராகவும் அவர் போராடி மாற்றங்களை ஏற்படுத்தினார்.

1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலும், ஜப்பானிய ஆதிக்கத்திலும்  சுவாமி இராமதாசர் தன் முயற்சியால் பலருக்கும் அடைக்கலமும் உதவியும் தந்தார். நாற்பத்தியோறு மாணவர்களை தன்னோடு தங்க வைத்துக் காத்தார். 1944-ஆம் ஆண்டு இளநிலைப் பாடசாலையில் பயின்ற அறுபத்து நான்கு மாணவ மாணவியருக்கு அரசாங்க உதவியில் இலவச உடைகள் தைத்து வழங்கினார். பின்னர் தன் செலவில் ஏழாயிரம் வெள்ளி பெருமானமுள்ள உடைகளையும் நூல்களையும் வாங்கி வந்து தன் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

1944-ல் நேதாஜி சுபாஷ் மலாயா வந்த போது அவரது இந்திய தேசிய ராணுவ படையில் சேர தமது 25 மாணவர்களை அனுப்பி வைத்ததோடு அவர்களுடன் தொடர்பிலும் இருந்தார்.  

கோ.சாரங்கபாணி, சுவாமி ஆத்மாராம், பிரம்மச்சாரி கைலாசம், சிங்கை நாராயணசாமி, டான் ஶ்ரீ மாணிக்கவாசகம் போன்ற பலததரப்பு தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர் சுவாமி இராமதாசர். சமூக நல்லுறவு, சமுதாய மேம்பாடு போன்றவற்றின் அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தினார்.

கலை இலக்கியப் பணிகள்

சுவாமி இராமதாசர் தமிழ்ப்பள்ளி, பினாங்கு

1943-ல் பினாங்கு ராஜமாரியம்மன் ஆலயத்தை புதுப்பித்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். செந்தமிழ் பாடசாலையை, இளந்தமிழ் பாடசாலை, செந்தமிழ் கலாநிலையம்  என்ற இரண்டு பிரிவுகளாக பிரித்தார். இளந்தமிழ் பாடசாலை  சிறுவர்களுக்கான பள்ளியாக செயல்பட்டது. 1946-ல் ராஜமாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் இளந்தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு பள்ளியை கட்ட அரசாங்கத்திடம் விண்ணப்பம் வைத்தார். சீனத் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவால் அவரது விண்ணப்பம் வெற்றி பெற்றது. அத்தாப்பு கூரை கட்டிடமாக இருந்த அந்தப் பள்ளியை மேலும் மேம்படுத்த சுவாமி ராமதாசர் வைத்த விண்ணப்பத்தை ஏற்று அரசாங்கம் ரிவர் சாலையில் இடம் ஒதுக்கியது. ஆகவே 1948-ஆம் ஆண்டில் சுவாமி ராமதாசர் 180 மாணவர்களுடன் இளந்தமிழ் பாடசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். புதிய இடத்தில், இளந்தமிழ் பாடசாலை,  அரசாங்கத் தமிழ்ப்பள்ளி என்று பெயர் மாற்றங்கண்டது. பின்னர் ரிவர் ரோட் தமிழ்ப்பள்ளி என்ற பெயரிலும் ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி என்ற பெயரிலும் இயங்கியது.  2021-ஆம் ஆண்டு முதல் அது இராமதாசர் தமிழ்ப்பள்ளி என்று அதன் தோற்றுனரின் பெயரிலேயே இயங்கி வருகின்றது.

சிறந்த மேடைப்பேச்சாளராக சுவாமி இராமதாசர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்ததோடு பேருரைகளும் ஆற்றினார். வானொலியிலும் சமய உரைகள் ஆற்றினார்.

ராமகிருஷ்ண ஆசிரம மாணவர்களுக்கும் பிற கோயில்களிலும் திருக்குறள் வகுப்புகளையும் சிலம்ப வகுப்புகளையும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இலவச திருமணங்கள், வியாபார உதவிகள், ஏழை மாணவர்களுக்கு உதவிகள் என பல சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  செந்தமிழ் கலாநிலையத்தை அறிவார்ந்த மையமாக மேம்படுத்தினார். இவ்வமைப்பின் வழி பல்வேறு கலைப் பண்பாட்டு சமய நிகழ்வுகளை  நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வந்தார்.

1980-ல் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு மலேசியப் பேராளராகக் கலந்து கொண்டு ஆய்வுரை நிகழ்த்தினார்.

சுவாமி இராமதாசர், சிலகாலம் பினாங்கிலிருந்து வெளியேறி, ஈப்போ, தைப்பிங் ஆகிய ஊர்களில் தனது மாணவர்கள் இல்லங்களில் தங்கி பல பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டார். தன் முதிய வயதில் அவரது விருப்பப்படி தமிழ் நாட்டில் தன் குடும்பத்தினரின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டார்.

மரணம்

ஏப்ரல் 28, 1998 அன்று இவர் தமிழ் நாட்டில் தன் கிராமத்தில் மரணமடைந்தார்.

பரிசுகள் / விருதுகள்

  • 1955-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த சைவ சமய மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் சுவாமி இராமதாசருக்கு “தொண்டர் நாயகம்” எனும் பட்டத்தை வழங்கினார்.
  • 1958-ஆம் ஆண்டில் சுவாமி ராமதாசரின் மாணவர்களாகிய வி.கே சுப்ரமணியம், கனற்கவி கரீம், எஸ்.பி செல்லையாவின் முயற்சியால் ‘புதுமைப்பித்தன் விழா’ நடைபெற்றது. சுத்த சமாஜத் தலைவர் சுவாமி சத்தியானந்தா கலந்து சிறப்பித்த இந்த விழாவில், சுவாமி இராமதாசர், முதுதமிழ் பெரும்புலவர் என்னும் பட்டம் கொடுத்து சிறப்பிக்கப்பட்டார்.
  • சுவாமி இராமதாசர் அவர்களின் மணிவிழா செம்படம்பர் 19, 1977-ல் பினாங்கு தேவான் ஸ்ரீ மண்டபத்தில் பெருவிழாவாக நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து அறிஞர் பெருமக்கள் எல்லாம் குழுமியிருந்த இந்த விழாவில் சுவாமிக்கு பொன்னாடை அணிவித்து, பொற்பதக்கம் சூட்டி, மலர் வெளியிட்டுக் கொண்டாடினார்கள்.

விவாதங்கள்

சுவாமி இராமதாசருக்கு ஆதரவு தரும் பெரும் மாணவர் படை நாடு முழுவதும் இருந்தது போலவே,  அவரின் பணிகளுக்கு இடையூறு செய்யும் தரப்புகளும் இருந்தன.  

1944-ல் சுவாமி இராமதாசர் பெரும் பொருட்செலவில் ராஜகாளியம்மன் ஆலயத்தில் தொடங்கிய சகலகலாவல்லி பஜனை குழு உட்பூசலால் விரைவில் கலைந்தது. அவர் பணம் செலவழித்து  வாங்கிய இசைக்கருவிகள்  பலரால் எடுத்துச் சென்று விற்கப்பட்டன. ஜப்பானிய அதிகாரிகளின் முன் விசாரணைகள் நடந்த பின்னர் ஆர்மோனியம் மட்டும் மீட்கப்பட்டது.

சுவாமி இராமதாசர் 1960-ல் செந்தமிழ் கலாநிலையத்தை விரிவு படுத்தும் நோக்கோடு தன் சொந்த பணத்திலும் நண்பர்களின் நிதியிலும் கட்டிய வீடு சில சட்ட சிக்கல்களில் சிக்கியது. அதன் மீது இன்னொரு நபர் தொடுத்த உரிமை வழக்கில் சுவாமி இராமதாசர்  1963-ல் தோற்றதால், செந்தமிழ் கலாநிலையம் விரிவுபடுத்தும் முயற்சி தடைபட்டது.  செந்தமிழ் கலாநிலையத்தின் மூலம் திரு எஸ்.பி செல்லையா, நடத்திவந்த  'செந்தமிழ்' என்னும் இதழும் 1965 ஆம் ஆண்டில் நின்று போனது.  அதன் பிறகு சுவாமி இராமதாசர் பினாங்கு சிவசக்தி (திரிமூர்த்தி ஆலயம்) ஆலயத்தின் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டு தன்னை சிவசக்தி கோயிலுடன் பிணைத்துக் கொண்டார்.

ஆவணங்கள் / சிறப்பிதழ்கள்

  • ‘மலேசிய முத்தமிழ் புலவர் இராமதாசர் மன்றம்’ என்ற பெயரில் சுவாமி ராமதாசரின் சிந்தனைகளை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்று சுங்கைபட்டாணியில் இயங்கி வருகின்றனது. அதன் தலைவராக  கவிஞர் பெ.க.நாராயணன் செயல்படுகின்றார்.
  • சுவாமி இராமதாசரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு 1974 -ல் கோலாலம்பூர் வேளாளர் நலனபிவிருத்தி சங்கம் பதிப்பித்த பொன்னாடை போர்த்தும் விழா சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளது.
  • விசாலாட்சி ஆறுமுகம் (ஈப்போ) தொகுத்த முதுதமிழ் பெரும்புலவர் செந்தமிழ் காவலர் மகான் டாக்டர் சுவாமி இராமதாசர் வாழ்வும் வரலாறும் என்னும் நூல் 2017 ஆண்டு கோலாலம்பூரில் வெளியீடு கண்டது.
  • மகான் ராமதாசர்- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

செந்தமிழ் கலாநிலையம் வெளியிட்ட நூல்கள்

  • நாட்டைக் காப்போம் (1964)-  சுவாமி இராமதாசர்
  • தமிழர் திருவிழா(1964)- கவிஞர் வி.கே.சுப்பிரமணியம்
  • திருக்குறளில் ஒரு குறள் (1964) - கவிஞர் வி.கே.சுப்பிரமணியம்
  • திருவள்ளுவர் மாட்சி(1965)- கவிஞர் வி.கே.சுப்பிரமணியம்
  • இன்ப மலேசியா- கவிஞர்(1965)-  சி.பூ.செல்லையா
  • தைபூச மலர் (1965)
  • உரிமை முழக்கம் (1965)- சுவாமி இராமதாசர்
  • மங்கள மலேசியா(1966)- கவிஞர் வி.கே.சுப்பிரமணியம்
  • அறிவுரை கட்டுரைகள்(1967)- கவிஞர் ஏசையா
  • பத்து காஜா திருமுருகன் பாமாலை (1971) - சுவாமி இராமதாசர்
  • தைபூச மலர் (1971)
  • அருளொளி முருகன் வணக்கப் பாமாலை(1972) – கவிஞர் எஸ். கே வடிவேல்
  • தண்ணீர்மலையப்பன் புகழ்ச்சிப்பாமாலை(1973)- கவிஞர் பாண்டியன்
  • ஈப்போ சிவசக்தி பாமாலை
  • பிற படைப்புகள்- புத்தர் வரலாறு

உசாத்துணை


✅Finalised Page