under review

சரோஜா ராமமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்)
 
Line 67: Line 67:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்]]

Latest revision as of 12:19, 17 November 2024

ராமமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமமூர்த்தி (பெயர் பட்டியல்)
சரோஜா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரோஜா (பெயர் பட்டியல்)
சரோஜா ராமமூர்த்தி (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)
சரோஜா ராமமூர்த்தி

சரோஜா ராமமூர்த்தி (ஸரோஜா ராமமூர்த்தி) (ஜூலை 27, 1921 - ஆகஸ்ட் 8, 1991) நவீனத்தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி. சிறுகதைகள், நாவல்கள் எழுதினார். தமிழக அரசு இவருடைய நூல்களை நாட்டுடைமையாக்கியது.

வாழ்க்கைக் குறிப்பு

சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார்.

சரோஜா, து. ராமமூர்த்தி (நன்றி: பாரதி)

தனிவாழ்க்கை

எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி, கணேசகுமார், குமரன்.

மகள் பாரதி எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் ரவீந்திரனும், ஜெயபாரதியும் எழுத்தாளர்கள். ஜெயபாரதி தந்தையின் 'குடிசை' கதையை அதே பெயரில் திரைப்படமாக இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை

சரோஜா ராமமூர்த்தி 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டார். வீதிச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டினார். இரண்டு நாட்கள் சிறையில் இருந்தார். அவரும் கணவர் து.ராமமூர்த்தியும் காந்தியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்றனர். இருவரும் காந்தியின் வார்தா ஆசிரமத்தில் இருந்துள்ளனர். சுதந்திரத்துக்குப்பின் கிராமநிர்மாணப் பணிகளில் ஈடுபட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

சரோஜா ராமமூர்த்தி இளமையில் “பாரதி” என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். சரோஜா ராமமூர்த்தியின் முதல் சிறுகதை 'புதுவெள்ளம்’ 1938-ல் ஆனந்தவிகடனில் வெளியானது. இவரது முதல் நாவல் 'மனைவி' அக்டோபர், 1946-ல் கலைமகள் இதழில் தொடராக வெளியாகிப் பின் 1947-ல் நூலாக வெளியானது. ‘பனித்துளி’ நாவல் ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் 1957-ல் தொடராக வெளிவந்தது. இந்நாவல் அவரை பிரபலமாக்கியது. 600 சிறுகதைகள், எட்டு நாவல்கள், இரண்டு குறு நாவல்கள் எழுதினார். 'முத்துச்சிப்பி’, 'இருளும் ஒளியும்' போன்றவை இவரது பிற நாவல்கள்.

சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, மங்கை, சக்தி, கலைமகள், நவசக்தி, காதல், அமுதசுரபி, தினமணி சுடர், போன்ற இதழ்களில் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதினார்.1943-ல் சக்தி இதழில் ‘செளந்திரம்’ சிறுகதை வெளியானது. ’பிருந்தையின் அருள்’ சிறுகதை மங்கை இதழில் 1947-ல் வெளியானது. 'குடும்பக்காட்சி’, 'ஆகி வந்த படம்’, 'பிள்ளை வளர்ப்பு', 'பார்வதி’, 'யாருடைய சித்தம்’, 'ரங்கத்தின் ஆவி' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைகள். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 'நவராத்திரிப் பரிசு', 'குழலோசை முதலிய கதைகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளன. 'அன்னை', 'மாளவிகா', 'இரு கதைகள்’, 'நெஞ்சு பொறுக்குதில்லையே' போன்றவை இவரது பிற படைப்புகள். 'கல்கி' இதழில் சிறுகதைகள் பல எழுதினார். 2023-ல் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக சரோஜா ராமமூர்த்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ”சரோஜா திறக்கும் உலகம்” என்ற பெயரில் அம்பையை தொகுப்பாளராகக் கொண்டு வெளிவந்தது.

காஞ்சி பரமாச்சார்யரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சரோஜா ராமமூர்த்தி தன் இறுதிக் காலத்தில் எழுதாமலானார். முழுவதுமாக ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.

திரை வாழ்க்கை

எம்.ஜி.ஆர், பத்மினி நடித்த "விக்கிரமாதித்தன்" படத்தின் திரைக்கதையின் ஒரு பகுதியை இவர் எழுதினார்.

இலக்கிய இடம்

சரோஜா ராமமூர்த்தி (நன்றி: அம்பையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் )

1961-ல் சுதேசமித்திரன் இதழில் சரோஜா ராமமூர்த்தியின் முத்துச்சிப்பி நாவலை விமர்சனம் செய்த க.நா.சுப்ரமணியம் அதை வெற்றி பெற்ற நாவல் எனவும் ”தொடர்கதைகளாக வரும் கதைகளில் உள்ள திடீர்த் திருப்பங்கள், மற்ற அதீதங்கள் இவை எல்லாம் இல்லாமல் எழுதியதற்கு ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மிகையில்லாமல் சற்று குறைபடவே சொல்லி நம் மனதில் பாத்திரங்களையும் சம்பவங்களையும் பதிய வைக்கிறார் ஆசிரியை. தமிழில் வெளிவந்திருக்கிற குடும்ப நாவல்களில் சிறப்பான இரண்டு மூன்றில் இதுவும் ஒன்று என்று சொல்ல வேண்டும்” என்றார். “எழுதி, எழுதி மெருகேறிய கை” என கி.வா.ஜ பாராட்டினார். “நீரோட்டம் போல் செல்கிற தமிழ்நடை” என மு.வ பாராட்டினார்.

சரோஜா ராமமூர்த்தி பற்றி அம்பை, "சரோஜா ராமமூர்த்தி முப்பதுகளின் இறுதி ஆண்டுகளில் எழுத ஆரம்பித்து எதிர்க் கேள்விகளை தைரியமாகக் கேட்டவர். தொடர்ந்து எழுதியவர்." என்கிறார்.

மறைவு

சரோஜா ராமமூர்த்தி ஆகஸ்ட் 8, 1991-ல் தன் எழுபதாவது வயதில் காலமானார்.

நினைவுகள்

சரோஜா ராமமூர்த்தியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

நூல்கள்

நாவல்
சிறுகதைத் தொகுப்பு
  • வெறும் கூடு
  • குழலோசை முதலிய கதைகள்
  • நவராத்திரிப் பரிசு (1947)
  • சரோஜா திறக்கும் உலகம் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2022, 00:33:21 IST