இரா. பாலசுப்பிரமணியன்: Difference between revisions
(Link text corrected) |
(Corrected the links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|பாலசுப்பிரமணியன்|[[பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=பாலசுப்பிரமணியன்|DisambPageTitle=[[பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)]]}} | ||
[[File:R. BALASUBAMANIYAN.jpg|thumb|பேராசிரியர், முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்]] | [[File:R. BALASUBAMANIYAN.jpg|thumb|பேராசிரியர், முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்]] | ||
இரா. பாலசுப்பிரமணியன் (முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்; இரா. பாலசுப்பிரமணியம்) (பிறப்பு: ஜூன் 10, 1954) எழுத்தாளர், ஆய்வாளர், காந்தியவாதி. தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம் மற்றும் ஆய்வு சார்ந்த நூல்களையும் பொது வாசிப்பு சார்ந்த நூல்களையும் எழுதினார். காந்தியத்தைக் கருவாகக் கொண்ட பல நூல்களைப் படைத்தார். | இரா. பாலசுப்பிரமணியன் (முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்; இரா. பாலசுப்பிரமணியம்) (பிறப்பு: ஜூன் 10, 1954) எழுத்தாளர், ஆய்வாளர், காந்தியவாதி. தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம் மற்றும் ஆய்வு சார்ந்த நூல்களையும் பொது வாசிப்பு சார்ந்த நூல்களையும் எழுதினார். காந்தியத்தைக் கருவாகக் கொண்ட பல நூல்களைப் படைத்தார். | ||
Revision as of 18:34, 27 September 2024
- பாலசுப்பிரமணியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)
இரா. பாலசுப்பிரமணியன் (முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்; இரா. பாலசுப்பிரமணியம்) (பிறப்பு: ஜூன் 10, 1954) எழுத்தாளர், ஆய்வாளர், காந்தியவாதி. தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம் மற்றும் ஆய்வு சார்ந்த நூல்களையும் பொது வாசிப்பு சார்ந்த நூல்களையும் எழுதினார். காந்தியத்தைக் கருவாகக் கொண்ட பல நூல்களைப் படைத்தார்.
பிறப்பு, கல்வி
இரா. பாலசுப்பிரமணியன், மதுரை மாவட்டத்தில் உள்ள எழுமலை கிராமத்தில் சொ.ப. இராமநாதன் - இரா. அலமேலு இணையருக்கு, ஜூன் 10, 1954-ல் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று இளம் அறிவியலில் (B.Sc.) தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றார். முதுகலை தமிழ் பயின்றார். தொடர்ந்து பயின்று ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். காந்திய சிந்தனைகளைப் பயின்று பட்டயம் (D.G.T.) பெற்றார்.
தனி வாழ்க்கை
இரா. பாலசுப்பிரமணியன், பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தேர்வு நெறியாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
சிறுகதை
பாலசுப்பிரமணியன் பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். தினமணி, கலைமகள், அமுதசுரபி, தமிழ் அரசி, ஓம்சக்தி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகளும், கட்டுரைகளும் வெளியாகின. ‘விடியல் காலம்’ என்னும் பாலசுப்பிரமணியனின் சிறுகதைத் தொகுப்பு திருச்சி தேசியக் கல்லூரி பட்டப் படிப்பு மாணவர்களுக்கும், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலைத் தமிழ்த் துறை மாணவர்களுக்கும் பாடநூலாக வைக்கப்பட்டது. காஞ்சி மடம் நடத்திய இரு கட்டுரைப் போட்டிகளில் பாலசுப்பிரமணியனின் 'அத்வைதமும் தேசியமும்', 'மூவேந்தரும் தமிழும்' ஆகிய இரு கட்டுரைகள் பரிசு பெற்றன. பின்னர் இவை நூல்களாகவும் வெளிவந்தன.
நாவல்
பாலசுப்பிரமணியன் எழுதிய 'சுவடுகள்' எனும் நாவல், 1991-ல், கலைமகள், அமரர் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இந்நாவல், கலைமகள் இதழில் தொடர்கதையாக வெளியாகி 1995-ல் நூலாக வெளிவந்தது. இந்நாவல் காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் கல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பாடநூலாக இடம் பெற்றது.
காந்தியம்
காந்தியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் காந்தியக் கருத்துக்களை மையமாக வைத்துப் பல சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். காந்திய சிந்தனைகள் குறித்துப் பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார். காந்தியம் சார்ந்த இவரது சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘கதிர்க்கடவுள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.
ஆய்வு
இரா. பாலசுப்பிரமணியன், நாட்டுப்புற இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்டு பல ஆய்வுகளை முன்னெடுத்தார். ஆய்விதழ்கள் பலவற்றில் கட்டுரைகள் எழுதினார். தமிழர் விளையாட்டுக்கள் குறித்து இவர் எழுதிய, 'தமிழர் நாட்டு விளையாட்டுகள்' எனும் நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் பாடநூலாக இருந்தது.
பாலசுப்பிரமணியனின் வழிகாட்டலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘ஆய்வியல் நிறைஞர்’ பட்டம் பெற்றனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் ‘முனைவர்’ பட்டம் பெற்றனர்.
வானொலி
இரா. பாலசுப்பிரமணியன், அகில இந்திய வானொலி நிலையத்துக்காகப் பல நாடகங்களை எழுதினார்.
விருதுகள்
- காஞ்சி மடம் அளித்த சிறந்த கட்டுரைகளுக்கான பரிசு - அத்வைதமும் தேசியமும், மூவேந்தரும் தமிழும் (கட்டுரைகள்)
- அமரர் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு - சுவடுகள் (நாவல்) - 1991
- ’தமிழ் அரசி' இதழ் நடத்திய புதினப் போட்டியில் பரிசு - சத்திய சூரியன் (நாவல்) - 1994
- அமுதசுரபி இதழ் நடத்திய புதினப் போட்டியில் பரிசு - சக்தி (நாவல்) - 1997
- இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் நடத்திய ‘மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவு புதினப் போட்டி'யில் பரிசு - பாண்டிய நாயகன் (வரலாற்று நாவல்) - 2006
- இலக்கியப் பீடம் இதழ் நடத்திய புதினப் போட்டியில் பரிசு - சத்திய தரிசனம் நாவல் - 2006
ஆவணம்
இரா. பாலசுப்பிரமணியனின் வாழ்க்கையை முனைவர் சி. மணிமேகலை நூலாக எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நூலாக வெளியிட்டது.
மதிப்பீடு
இரா. பாலசுப்பிரமணியன் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். தனது படைப்புகளில் காந்தியத்தை முன் வைத்தார். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றும் பாத்திரங்களையும் காந்தியத்தைக் கருவாகக் கொண்ட கதைகளையும் எழுதினார். நாட்டார் வழக்கியல் சார்ந்த இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்தவை.
இரா. பாலசுப்பிரமணியன், தேசிய ஒற்றுமைக்காகச் சமய நெறிகளிலும், கல்விக் கொள்கைகளிலும் காந்தியத்தை வலியுறுத்தி எழுதிய எழுத்தாளராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- தமிழர் நாட்டு விளையாட்டுகள்
- விடியல் காலம்
- சி.சு. செல்லப்பாவின் வாழ்க்கையும் கலையும்
- கணியான் கூத்து
- இதோ தமிழ் இதழ்கள்
- நாட்டுப்புற வாழ்வியல்
- சுவடுகள்
- சக்தி
- நாவல் கலையியல்
- அத்வைதமும் தேசியமும்
- சமய இணக்கமும் மேம்பாடும்
- சிந்தனைச் சுடர்கள்
- புராணவியல்
- சத்திய சூரியன்
- சத்திய தரிசனம்
- பாண்டிய நாயகன்
- மூவேந்தரும் தமிழும்
- கதிர்க்கடவுள்
உசாத்துணை
- தமிழர் நாட்டு விளையாட்டுகள், இரா. பாலசுப்பிரமணியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு: முதல் பதிப்பு: 1980, தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம்
- நாவல்கலையியல், முனைவர் இரா. பாலசுப்பிரமணியன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு: முதல் பதிப்பு: 2004, தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம்
- முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்: எழுத்தாக்கம்: முனைவர் சி. மணிமேகலை, கலைஞன் பதிப்பக வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Jul-2024, 11:27:43 IST
