under review

கொளு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 54: Line 54:
* [https://shaivam.org/thirumurai/eight-thirumurai-thirukovaiyar/thirukkovaiyar-1-iyarkai-punarchi/#gsc.tab=0 திருக்கோவையார், சைவம்.ஆர்க்]<br />
* [https://shaivam.org/thirumurai/eight-thirumurai-thirukovaiyar/thirukkovaiyar-1-iyarkai-punarchi/#gsc.tab=0 திருக்கோவையார், சைவம்.ஆர்க்]<br />


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:19, 25 July 2024

கொளு (கொளுக்குறிப்பு) கொள்ளும் பொருள், கொண்டிருக்கும் சேதி என்று பொருள்படும். பண்டைய நூல்களில், பாடல் கொண்டிருக்கும் கருத்தையோ, அப்பாடலுக்கான குறிப்பையோ பாடலுக்கு முன் (அல்லது பின்) தொகுப்பாசிரியர்களோ, உரையாசிரியர்களோ குறிப்பிடும் பகுதி கொளு.

விளக்கம்

இலக்கண நூல்களில் எடுத்துக்காட்டு வெண்பாக்களுக்கு முன்னதாக, வெண்பாவின் கருத்தைச் சுருக்கமாகக் கூறும் பகுதி ‘கொளு’ எனப்படுகின்றது. இலக்கியங்களில் கொளு பாடலின் துறையையும், இலக்கணத்தையும் கூறும். புறநானூற்றில் ஒவ்வொரு பாடலுக்கும் உரையாசிரியரால் கொளுக்குறிப்பு தரப்பட்டுள்ளது.

பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பத்துக்கும் (10 பாடல்களுக்கும்) தொகுப்பாகக் கூறப்பட்டுள்ள குறிப்பு பதிகம் எனப்படுகிறது. ஒவ்வொரு பத்தும் ஒரு பாட்டுடைத்தலைவனைப் பாடுபவை. இப்பதிகங்கள் சேர மன்னர்களின் மெய்க்கீர்த்தியாகவும், பாட்டுடைத் தலைவன், அவனது ஆட்சிக்காலம், பாடியவர், அவர் பெற்ற பரிசில்கள் போன்றவற்றின் குறிப்பாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு பாடலுக்கும் அமைந்த தலைப்பை அப்பாடல்களுக்கான கொளு என்று கொள்ளலாம்.

கொளுக்கள் பெரும்பாலும் 2 அடியிலும் சமயங்களில் 3 அடியிலும் ஆக்கப்பட்டுள்ளன. கொளு சூத்திரம் என்றும் அறியப்படுகிறது. திருக்கோவையார், திருவாரூர் உலா, பழனிக் கோவை, திருவம்பலக் கோவை, உருத்திர கோடிக் கோவை போன்ற நூல்களில் கொளு வெண்பாவிற்குப் பின் இடம்பெறுகிறது.

எடுத்துக்காட்டு 1- புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைகளின் 341 துறைகளை விளக்குகிறது. இந்த 341 துறைகளுக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர் ஐயனாரிதனார் 361 வெண்பாக்களை இயற்றினார். எடுத்துக்காட்டாக இடம் பெறும் வெண்பாக்களுக்கு முன்னதாக, வெண்பாவின் கருத்தையும், துறையின் இலக்கணத்தயும் சுருக்கமாகக் கூறும் பகுதி ‘கொளு’ எனப்படுகின்றது.

பாடாண் பாடல்

ஒளியு மாற்றலு மோம்பா வீகையும்
அளியு மென்றிவை யாய்ந்துரைத்தன்று. - கொளு

மன்னர் மடங்கன் மறையவர் சொன்மாலை
அன்ன நடையினார்க் காரமுதம் – துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேற் றானையெங் கோ.

முதலில் இடம்பெறும் கொளு பாடாண் பாட்டு என்ற துறைக்கான இலக்கணமாக "ஒருவனின் புகழ், ஆற்றல், ஈகை, அளி ஆகிய நற்பண்புகளை ஆராய்ந்து போற்றுதல் பாடாண் வகை" என விளக்கம் அளிக்கிறது.

பின்வரும் வெண்பா இத்துறைக்கான எடுத்துக்காட்டாக அமைந்த பாடல். "எம் அரசன் மன்னகளிடையே சிங்கம் போன்றவன். புகழ்மாலை சூடியவன். மகளிர்க்கு அமுதம் போன்றவன். பரிசிலர்க்கு மழைபோல் வழங்குபவன். எரி போல் சினம் கொண்ட படையை உடையவன்" என்று பொருள்படும். கொளு குறிப்பிடுவதுபோல மன்னனின் புகழ், ஆற்றல், ஈகை போன்ற பண்புகள் பாடலில் புகழப்படுகின்றன.

எடுத்துக்காட்டு-2 திருக்கோவையார்
ஐயம்

போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன் விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயிலோ என நின்றவர் வாழ்பதியே."

கொளு

தெரிய அரியதோர் தெய்வ என்ன
அருவரை நாடன் ஐயுற்றது.

பொருள்

பூமியிலுள்ள இளைஞரை எல்லாம் கொல்ல வேண்டிக் காலன் வரவிட்ட தூதோ? அரியாரை வசிக்க மன்மதனுக்கு உண்டான துணையோ? தன்னை நிகரில்லாத திருஅம்பலவாணனுடைய சிதம்பரத்தில் வாழும் மலைமகளோ? மடப்பத்தையுடைய மயிலோ? என்று நாம் வியக்கும்படி நின்ற இவர் வாழும் இடம், தாமரைப் பூவோ, ஆகாயமோ, நீரோ, பாம்புகளின் பதியாகிய நாகர் உலகமோ இன்ன இடம் என்று அறிதற்குச் சிறிதும் அறியாதிருந்தது.

கொளுவின் பொருள்

அறிவதற்கு அருமையானதொரு தெய்வமென்று அரிய மலைநாட்டை உடையவன் சந்தேகித்தது.

இங்கு கொளு பாடலுக்குபின் வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page