அனந்தகிருஷ்ணையங்கார்: Difference between revisions

From Tamil Wiki
Line 56: Line 56:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/Feb/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-143246.html தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார்- தினமணி கட்டுரை]
 
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/Feb/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-143246.html தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார்- தினமணி கட்டுரை]
 
* தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்

Revision as of 08:32, 1 July 2024

தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார்

தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் (அநந்தகிருஷ்ணையங்கார்) ( ) தமிழ் மரபுக்கவிஞர். கவிராயர் மரபில் வந்தவர். பக்திநூல்களையும் சிலேடைக்கவிதைகளையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் தூத்துக்குடி மாவட்டத்தில், தென்திருப்பேரை என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர், சீனிவாசையங்கார், தாய் குழைக்காத நாச்சியார். அனந்தகிருஷ்ணையங்கார் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை.

தென்திருப்பேரை தாமிரவர்ணி ஆற்றங்கரையிலுள்ள தொன்மையான ஒன்பது திருமால் ஆலயங்களில் ஒன்று. இங்குள்ள மகரநெடுங்குழைகாதன் ஆலயம் புகழ்பெற்றது. அனந்தகிருஷ்ணையங்காரின் குடும்பம் பாரம்பரியமாகவே தமிழ், சம்ஸ்கிருத அறிஞர்கள் மற்றும் கவிராதர்கள். அவரது பாட்டனார் சின்னத்தம்பு குழைக்காத ஐயங்கார் திருவிதாங்கூர் அரசர் சுவாதித்திருநாளின் அவைப்புலவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஜைமினி சூத்திர தலவகார சாமவேதியர் குலத்தில், நூற்றெண்மர் மரபில், பிள்ளைமங்கலத்தார் குடியில் அனந்தகிருஷ்ணையங்கார் பிறந்தார் என ஆய்வாளர் சடகோபன் குறிப்பிடுகிறார்

அனந்தகிருஷ்ணையங்கார் தந்தையிடமே இலக்கியங்களையும் இலக்கணநூல்களையும் கற்றார். இவருடைய அண்ணன் மகன் புகழ்பெற்ற ஒப்பிலக்கிய அறிஞர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா

இலக்கியப்பணி

அனந்தகிருஷ்ணையங்கார் 1894ல் தன் முதல்நூலான பத்மநாபசுவாமி மாலையை வெளியிட்டார். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்புலவராகப் பணியாற்றிய யாழ்ப்பாணம் கணபதிப் பிள்ளை இந்நூலுக்கு சிறப்புப் பாயிரம் அளித்தார். 1903 ஆம் ஆண்டு கண்ணன் கிளிக்கண்ணி என்னும் நூலை வெளியிட்டார். மெய்யியல் நூலான ஞானசித்தர் வேள்வி விளக்கம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். 1911 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மகுட விழாவை போற்றி மகுடதாரண வைபவ வெண்பா என்னும் நூலை இயற்றினார். இந்நூலுக்கு உ.வே.சாமிநாதையர் சிறப்புப்பாயிரம் வழங்கினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளிவிழாவில் கமலபந்த வெண்பா என்ற நூலை இயற்றினார். 1836 ல் தனிப்பா மஞ்சரி என்னும் நூலை வெளியிட்டார்

அனந்தகிருஷ்ணையங்கார் திருவரங்கச் சிலேடை மாலை என்னும் நூறு பாடல்கொண்ட நூலை 1900த்தில் இயற்றினார். 1936ல் அது நூலாக வெளிவந்தது. தென்திருப்பேரையின் புகழைப்பாடும் திருப்பேரைக் கலம்பகம் என்னும் நூலையும், வைணவ திவ்யதேசங்களின் பெருமையைச் சொல்லும் திவ்யதேசப்பாமாலை என்னும் நூலையும் எழுதினார். இந்நூலில் ஆழ்வார்கள் பாடாதுவிட்ட தலங்களையும் பாடியிருக்கிறார். வைணவ ஆசாரியரான மணவாள மாமுனிகள் மணவாள மாமுனி ஊஞ்சல் திருநாமம் என்ற நூலை 18 ஜனவரி 1938ல் வெளியிட்டார்.

நீதிவெண்பா நாற்பது, கற்பகவினாயகர் பதிகம், வேண்டும் நீதி, சுபத்ரா பரிணயம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். சுபத்ரா பரிணயம் நூலின் கைப்பிரதி காணாமல் போயிற்று என்றும் நினைவில் இருந்த செய்யுள்களை மட்டும் தனிப்பா மஞ்சரியில் கடைசிப்பகுதியாகச் சேர்த்து வெளியிட்டார் என்றும் முனைவர் சடகோபன் குறிப்பிடுகிறார்.

இலக்கியச் சுற்றம்

அனந்தகிருஷ்ணையங்கார் உ.வே.சாமிநாதையர், கு.அருணாசலக் கவுண்டர் , டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகியோருக்கு அணுக்கமானவராக இருந்தார்.

பாடல் நடை

அனந்தகிருஷ்ணையங்கார் சிலேடைக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர். "ராசாவுக்கும் கூசாவுக்கும், கருடனுக்கும் திருடனுக்கும், வேம்புக்கும் ஸ்டாம்புக்கும் முதலிய சிலேடைகள் எங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தன' என்று கு.அருணாசலக் கவுண்டர் குறிப்பிடுகிறார்.

எப்பணியுந் தூக்குதலா லென்றுஞ் சிறையுறலால்

இப்புவியோர் முன்பாவி யென்பதனால் செப்புபுகழ்ச்

சக்கிரிபாற் கைகூப்பித் தாழ்ந்திடலால் காலீறா

தக்காரு டன் திருடன் தான்

(கருடனுக்கும் திருடனுக்கும் சிலேடை)

பாராட்டுகள்

  • வானமாமலை 25 ஆவது பட்டம் சின்னக்கலியன் ராமானுஜ ஜீயர்- அபிநவப் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  • உ.வே.சாமிநாதையர்- அபிநவ காளமேகம்
  • திருவிதாங்கூர் அரசு - தங்கத்தோடா

நூல்கள்

  • திருவரங்கச் சிலேடை மாலை
  • திருப்பேரைக் கலம்பகம்
  • கண்ணன் கிளிக்கண்ணி
  • கமலபந்த வெண்பா
  • தனிப்பா மஞ்சரி
  • பத்மநாபஸ்வாமி சந்திரன்பாமாலை
  • மகுடதாரண வைபவ வெண்பாமாலை
  • ஞானசித்தர்வேள்வி விளக்க மாலை
  • திவ்யதேசப் பாமாலை
  • மணவாள மாமுனி ஊசற்றிருநாமம்
  • நீதிவெண்பா நாற்பது
  • கற்பக விநாயகர் பதிகம்
  • வேண்டும் நீதி
  • சுபத்ரா பரிணயம்

உசாத்துணை

  • தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்