under review

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: ==அடிக்குறிப்புகள்== <references />)
No edit summary
Line 1: Line 1:
கடவுள், அரசன் போன்றவர்களை குழந்தையாக உருவகித்துப் பாடுவது [[பிள்ளைத்தமிழ்]] என்ற [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகை. மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் சிற்றிலக்கிய வகைமையில் எழுதப்பட்ட முதன்மையான படைப்புகளில் ஒன்று. மதுரை மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு [[குமரகுருபரர்]] என்ற புலவரால் திருமலை நாயக்கர் முன்னிலையில் [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்]] வளாகத்தில் பாடப்பட்டது.  
கடவுள், அரசன் போன்றவர்களை குழந்தையாக உருவகித்துப் பாடுவது [[பிள்ளைத்தமிழ்]] என்ற [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகை. மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் சிற்றிலக்கிய வகைமையில் எழுதப்பட்ட முதன்மையான படைப்புகளில் ஒன்று. மதுரை மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு [[குமரகுருபரர்]] என்ற புலவரால் திருமலை நாயக்கர் முன்னிலையில் [[மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்]] வளாகத்தில் பாடப்பட்டது.  
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் குமரகுருபரர். இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர். இவர் பிறந்து ஐந்தாண்டுகள் ஆகியும் பேசாததால் இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்ள, இவர் பேசும் திறன் பெற்றார் எனப்படுகிறது. குமரகுருபரர் முதல் நூலாக முருகன் மீது கந்தர் கலிவெண்பா என்னும் பாடல்தொகுப்பை இயற்றினார்.  
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் குமரகுருபரர். இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர். இவர் பிறந்து ஐந்தாண்டுகள் ஆகியும் பேசாததால் இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்ள, இவர் பேசும் திறன் பெற்றார் எனப்படுகிறது. குமரகுருபரர் முதல் நூலாக முருகன் மீது கந்தர் கலிவெண்பா என்னும் பாடல்தொகுப்பை இயற்றினார்.  

Revision as of 10:47, 12 May 2024

கடவுள், அரசன் போன்றவர்களை குழந்தையாக உருவகித்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகை. மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் சிற்றிலக்கிய வகைமையில் எழுதப்பட்ட முதன்மையான படைப்புகளில் ஒன்று. மதுரை மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் திருமலை நாயக்கர் முன்னிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் பாடப்பட்டது.

ஆசிரியர்

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் குமரகுருபரர். இளமையிலேயே முருகன் அருள் பெற்றவர். இவர் பிறந்து ஐந்தாண்டுகள் ஆகியும் பேசாததால் இவருடைய பெற்றோர் திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்ள, இவர் பேசும் திறன் பெற்றார் எனப்படுகிறது. குமரகுருபரர் முதல் நூலாக முருகன் மீது கந்தர் கலிவெண்பா என்னும் பாடல்தொகுப்பை இயற்றினார்.

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் மட்டுமின்றி மீனாட்சியம்மைக் குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை ஆகிய சிற்றிலக்கியங்களையும் இயற்றியிருக்கிறார்.

இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின் போது அன்னை மீனாட்சியே எழுந்தருளி இவருக்குப் பரிசளித்தாள் என்பது தொன்மம். இவரின் காலம் பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு எனப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் பிறந்து வாழ்ந்தவர்.

தொன்மம்

குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் இயற்றிய முடித்தபோது, மீனாட்சியம்மை திருமலை நாயக்க மன்னர் கனவில் தோன்றி, குமரகுருபரரை அழைத்து வந்து பிள்ளைத்தமிழை அரங்கேற்றுமாறு கூறினார். அதன்படி மீனாட்சியம்மனின் சந்நிதியில் பிள்ளைத்தமிழை அரங்கேற்ற ஏற்பாடு செய்தார். குமரகுருபரர் நாள்தோறும் ஒவ்வொரு பருவமாக விரித்துரைத்து அரங்கேற்றினார். வருகைப்பருவத்தை விரிவுரையாற்றும்போது மீனாட்சியம்மை அர்ச்சகரின் பெண்குழந்தை வடிவில் வந்து திருமலை நாயக்கர் மடியில் அமர்ந்து கதை கேட்டாள். "தொடுக்கும் கடவுள்" என்ற பாடலுக்கு பொருளுரைத்தபோது மீண்டும் வாசித்துப் பொருள் சொல்லுமாறு கூறினாள். "காலத்தொடு கற்பனை கடந்த" என்ற பாடலுக்கு பொருள் உரைக்கும் போது குமரகுருபரரின் கழுத்தில் முத்துமாலை ஒன்றை அணிவித்து மறைந்தாள்.

நூல் அமைப்பு

பிள்ளைத்தமிழ் வகைமையில் மிகச்சிறந்த இலக்கிய நயமும் பொருள் நலமும் கொண்ட நூல். இந்நூலின் முதலில் விநாயகர் வணக்கம் இடம் பெற்றுள்ளது. காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சித்திவிநாயகர், முருகன், பிரம்மன், தேவேந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சப்த மாதர்கள், முப்பத்துமூவர் ஆகியோரிடம் பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையைக் காக்குமாறு பதினோரு பாடல்களில் குமரகுருபரர் வேண்டுகிறார். ஏனைய தால், செங்கீரை முதலிய ஒன்பது பருவங்களில் பருவத்துக்குப் பத்து பாடல்கள் வீதம் தொண்ணூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் மொத்தம் 102 பாடல்கள் உள்ளன.

தேவி புராணங்களின் அடிப்படையிலும், கடவுள் தத்துவங்களின் அடிப்படையிலும் இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

பிள்ளைத்தமிழ் மரபுக்கேற்ப அன்னை மீனாட்சியை குழந்தை மீனாட்சியாகக் கொஞ்சி உருவகித்து, பத்துப் பருவங்களில் அந்தந்தப் பருவத்தின் செயல்களை வர்ணித்து பாடப்பட்டிருக்கிறது.

இது தவிர, பாட்டுடைத்தலைவியாகிய மீனாட்சியம்மையின் சிறப்புகள், மீனாட்சியம்மையிடம் சிவனடியார்கள் ஈடுபடும் மனப்பான்மை, அம்மை அடியார்களின் உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் பேரானந்த வெள்ளமாய் அமையும் நிலை, தமிழின் தனிச் சிறப்புகள், இறைகாட்சிகள், அகப்பொருள், புறப்பொருள் நலங்கள், மதுரைத் தல வரலாற்றுச் செய்திகள், பாண்டிநாட்டின் பெருமை, பாண்டியனின் செம்மையான ஆட்சிச் சிறப்பு, மதுரை மாநகரின் இயற்கை வளம், செயற்கை நலம், தண்புனல் பெருக்கெடுத்தோடும் வையை, பொருநையின் சிறப்புகள், குமரித்துறை, கொற்கைத்துறை, பொதியமலை முதலியவற்றின் வளங்கள் முதலான செய்திகள் பல இந்நூலில் இடம் பெறுகின்றன.

மீனாட்சி மதுரை மாநகரில் பாண்டியன் மகளாய்த் தடாதகைப் பிராட்டியாய் அவதரித்தது; சிவ பெருமான் சவுந்தர பாண்டியனாகித் தடாதகையை மணந்து ஆட்சி புரிந்தது; குமரவேளும் உக்கிரப் பெருவழுதியாய் பிறந்தது முதலான திருவிளையாடல்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

இலக்கிய நயம்

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் சொல்நயமும் ஒலியழகும் பொருந்திய படைப்பு. சந்தம், மோனை, எதுகை முதலிய தொடையும் அணிநலமும் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழின் தனிச்சிறப்புகள்.

சந்தம்

பாடல் 1:

குருமணி வெயில்விட மரகத நிழல்விரி குன்றே நின்றுஊதும்
குழல்இசை பழகிய மழைமுகில் எழஎழு கொம்பேவெம்பாசம் - பாடல் 21

பாடல் 2:

அமரர்க் கதிபதி வெளிறக் களிறெதிர்
பிளிறக் குளிறியிடா
அண்ட மிசைப் பொலி கொண்டல் உகைத்திடும்
அமரிற் றமரினொடும் - பாடல் 30

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் பாடல்கள் இது போன்ற தமிழ்மொழியின் இனிய ஒலியழகும் சந்தமும் கொண்டவை.

உவமை நயம்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் உவமைகளின் அழகைப் புரிந்து கொள்ள தாலப்பருவத்தில் இடம்பெறும் பாடல் ஒரு சான்று: பாடல்:

தென்னந் தமிழினுடன் பிறந்த
சிறுகால் அரும்ப தீ அரும்பும்
தேமா நிழல் கண்டு அஞ்சும் இளஞ்
செங்கண் கயவாய் புளிற்றெருமை
இன்னம் பசும்புல் கறிக்கல்லா
இளங்கன்று உள்ளி மடித்தலம் நின்று
இழிபாலருவி உவட்டு எறிய
எறியும் திரை தீம்புனல் பொய்கைப்
பொன்னங் கமல பசுந்தோட்டுப்
பொற்றாது ஆடி கற்றைநிலா
பொழியும் தரங்கம் பிறை உயிர்த்த
பொன் போற்றோடு தோலடிப்பொலன் சூட்டு
அன்னம் பொலியும் தமிழ் மதுரைக்கு
அரசே தாலே தாலேலோ!
அருள் சூல் கொண்ட அங்கயற்கண்
அமுதே தாலே தாலேலோ! - பாடல் 23

பாடலின் பொருள்[1]:

தென்னகத்தமிழுடன் பிறந்த தென்றல் அரும்ப, அப்பருவத்தில் தீயென அரும்பும்தேன்மாமரத்தின் தளிரின் ஒளியைக் கண்டு தீயென்று எண்ணி அஞ்சும் செவ்விழிகளும் கரியவாயும்கொண்ட அன்னை எருமை இன்னும் பசும்புல்லை கடிக்க்கத் தெரியாத தன் இளங்கன்றை எண்ணி மடித்தலத்தில் இருந்து ஒழுகவிடும் பாலருவி பெருக்கெடுக்க அந்தப் பால் கலந்து அலையடிக்கும் நீர்கொண்ட பொய்கையில் மலர்ந்த தாமரையின் மென்மையான இதழ்களிலுள்ள தங்கப்பொடியில் ஆடிய அன்னப்பறவைகள்நிலவெழுந்த கடலில் அலையெழுகையில் பொன்னணிந்து எழும் திருமகள் என பொலியும் தமிழ்மதுரைக்கு அரசியே தாலேலோ. அருளைச் சூல்கொண்ட அழகிய கயல்கண் அமுதே தாலே தாலேலோ!

பால் நினைந்துச் சொரிவதாகச் சொல்லப்படும் பல பாடல்களில் எருமைதான் குறிப்பிடப்படும். முட்டி முட்டி கோரினால் பாலூட்டுவது பசு. தொட்டாலே பால் சொரிவது எருமை. எண்ணியே பால் பொழிவது. பால் நினைந்தூட்டும் அன்னை என்னும் உருவகத்துக்குப் பசுவைவிட எருமையே பொருத்தமானது. அந்தப் பால்பெருகி கலந்து பாற்கடலின் அலையென்றாகிய பொய்கையில் மலர்ந்த தாமரையின் பூந்தாதைப் பூசிக்கொள்ளும் அன்னம் என்னும்போது தாய்மையின் கனிவிலிருந்து வளர்ந்து அழகுக்கும் செழிப்புக்கும் செல்கிறது அப்படிமம். பாற்கடல் அலையில் தோன்றிய திருமகள் நிலவொளியின் பொன்னைச் சூடியதுபோல பொலிகின்றன அன்னங்கள். அவ்வன்னங்களின் நாடான மாமதுரையின் அரசி கண்ணயர்கிறாள்.

தொடை நயம்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் எதுகை, மோனை, இயைபு,முரண் போன்ற தொடைகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன:

மோனை

  • "கரைக்கும் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று" - மூன்று சீர்மோனை
  • "கன்னற் பெருங்காடு கற்பகக் காட்டுவளர் கடவுண்மா கவளங்கொள" - ஐந்துசீர் மோனை
  • "மூலத்தலத்து முளைத்தமுழு முதலே முத்தம் தருகவே" - நான்குசீர் மோனை

எதுகை

  • "கங்குன் மதங்கய மங்குல டங்கவி டுங்கா மன்சேம" - ஐந்துசீர் எதுகை
  • "வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியி லாளியென - நான்குசீர் எதுகை
  • "பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொரு பாண்டிப் பிராட்டி" - மூன்றுசீர் எதுகை

முரண்

  • "குனிய நிமிர்தரு" -இரண்டுசீர் முரண்
  • "செங்கயல் கிடக்கும் கருங்கட் பசுந்தோகை" -மூன்றுசீர் முரண்
  • கார்கோல நீலக் கருங்களத் தோடொருவர் செங்களத்து -நான்குசீர் முரண்

இயைபு

கடக ளிறுதவுக பாய்மிசைப் போர்த்தவள்
கவிகுவி ... ... ... தூர்த்தவள்
கடல் வயிறெரிய ... ... ... பார்த்தவள்
கடிகமழ்தரு ... ... ... சேர்த்தவள்

இவை போன்ற தொடை விகற்பம் பல செய்யுட்களில் அமைந்துவருகிறது[2].

தமிழ் குறித்த சொற்றொடர்கள்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தமிழை வர்ணிக்க பல அழகிய சொற்களைக் கையாள்கிறார் குமரகுருபரர். அவற்றுள் சில:

  • வடிதமிழ்
  • மதுரம் ஒழுகிய தமிழ்
  • தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடல்
  • பண் உலாம் வடிதமிழ்
  • தெளிதமிழ்
  • தென்னந்தமிழ்
  • முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ்
  • தெய்வத்தமிழ்
  • மதுரம் ஒழுகும் கொழிதமிழ்
  • நறைபழுத்த துறைத் தீந்தமிழ்
  • மும்மைத் தமிழ்

இதர இணைப்புகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page