second review completed

மு. முஹம்மது தாஹா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 68: Line 68:
* மு. முஹம்மது தாஹா, முனைவர் பரிதா பேகம், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015.
* மு. முஹம்மது தாஹா, முனைவர் பரிதா பேகம், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015.
* [https://adiraikural.blogspot.com/2021/06/25000_27.html அதிரைக்குரல் இணையதளம்]  
* [https://adiraikural.blogspot.com/2021/06/25000_27.html அதிரைக்குரல் இணையதளம்]  
{{First review completed}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:41, 17 April 2024

மு. முஹம்மது தாஹா

மு. முஹம்மது தாஹா (மு. முஹம்மது தாஹா மதனீ) (ஆகஸ்ட் 04, 1940 – ஜூன் 27, 2021) கவிஞர், எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த பல நூல்களை எழுதினார். ’அருட் கவி’ என்று போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

மு. முஹம்மது தாஹா, ஆகஸ்ட் 04, 1940 அன்று, அதிராம்பட்டினத்தில் முகம்மது மீராசாகிபு – ஜொகரா இணையருக்குப் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். தொடக்கக் கல்வியை அதிராம்பட்டினத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் படித்தார். உயர்நிலைக் கல்வியை காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை (வரலாறு) பட்டம் பெற்றார். உத்திரப்பிரதேசத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு உயிர்வேதியியல்(Biochemistry) கற்றார். பின் இடை நின்றார். காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றிய கா. அப்துல்கபூரிடம் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பி.எட். பட்டம் பெற்றார்.

மு. முஹம்மது தாஹா மதனீ

தனி வாழ்க்கை

மு. முஹம்மது தாஹா, மன்னார்குடி சோழபாண்டி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று இருபது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை

மு. முஹம்மது தாஹா, தனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் கா. அப்துல்கபூர் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். பள்ளி, கல்லூரி ஆண்டு விழா மலர்களில், கதை, கட்டுரைகளை எழுதினார். இதழ்களில் எழுதினார். பல்வேறு கவிதை, உரைநடை நூல்களை எழுதினார்.

மு. முஹம்மது தாஹா இறை புகழ் பாடும் ஏழு நூல்கள், நபி புகழ் பாடும் எட்டு நூல்கள், இறைநேசர்கள் புகழ் பாடும் பதினோரு நூல்கள், கலிஃபாக்கள் புகழ் பாடும் நான்கு நூல்கள், உரைநடை நூல்கள் ஏழு, இதர நூல்கள் இருபது என ஐம்பத்தேழு நூல்களை எழுதினார். மு. முஹம்மது தாஹாவின் நூல்களை ஆய்வு செய்து பலர் முனைவர், இளமுனைவர் பட்டங்களைப் பெற்றனர்.

முஹம்மது தாஹா பல பள்ளி, கல்லூரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். திருச்சி, காரைக்கால் வானொலியில் கவிதைகள் வாசித்தார். பல உரைகளை நிகழ்த்தினார். பாரதிதாசன், பாரதியார் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தினார். ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தார்.

அமைப்புப் பணிகள்

மு. முஹம்மது தாஹா, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று 15 மாநாடுகளை நடத்தினார். பல எழுத்தாளர்களை அதில் பங்குபெறச செய்தார். 1980-ல் அதிராம்பட்டினத்தில் தன் தந்தையின் முயற்சியினால் கட்டப்பட்ட மஆதினுல் ஹனாத்தி இஸ்லாமியச் சங்கத்தில் மார்க்கப் பணியாற்றினார். பள்ளிவாசல் திறப்பு விழாக்களில் கலந்துகொண்டார். பள்ளிவாசல்களில் மார்க்க சொற்பொழிவாற்றினார். நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவை நடத்தினார். மார்க்கக் கல்லூரிகள் பட்டமளிப்பு விழாவிவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பொறுப்பு

  • இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர்

பதிப்பு

மு. முஹம்மது தாஹா, ‘கைரிய்யத் பதிப்பகம்' என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.

விருதுகள்

  • கா. அப்துல்கபூர் வழங்கிய ‘அருட்கவி’ பட்டம்
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் அளித்த ‘புதுமைக்கவிஞர்’ பட்டம்
  • கவிஞர் தா. காசிம் நினைவு செம்மொழி இலக்கியச் சீரவை விருது
  • இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வழங்கிய பரிசுப்பணம் ரூ. 25000/- மற்றும் பொற்கிழி
  • பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்கிய விருது
  • கவிஞானி
  • ஆன்மீகக் கவிஞர்
  • தமிழ்மாமணி
  • தீனிசைத் தமிழ்த் தேனருவி
  • ஆஷிக்கே ரசூல்
  • கவிதைச் செம்மல்
  • சவ்வாதுப் புலவர் விருது
  • தமிழ் இலக்கிய மாமணி
  • தமிழ்மாமணி விருது
  • இலக்கியச் சுடர்
  • கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது
  • முரசொலி மாறன் விருது

மறைவு

மு. முஹம்மது தாஹா, ஜூன் 27, 2021 அன்று காலமானார்.

ஆவணம்

மு. முஹம்மது தாஹாவின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பரிதா பேகம் எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2015-ல் வெளியிட்டது.

நூல்கள்

  • சாதனையாளர் சாயபு மரைக்காயர் சதகம்
  • அன்னை பாத்திமாவின் அழகிய குணங்கள்
  • காயிதே மில்லத் பிள்ளைத்தமிழ்
  • நபி புகழ் காப்பியம்

மற்றும் பல

மதிப்பீடு

இஸ்லாமியத் தமிழ்க் கவிஞர்களில் அதிகம் சிற்றிலக்கியங்களைப் படைத்த புலவராக மு. முஹம்மது தாஹா மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.