under review

செ.மெ.பழனியப்பச் செட்டியாா்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(category and template text moved to bottom of text)
 
Line 1: Line 1:
[[Category:Tamil Content]]
 
[[File:S.M PALANIYAPPA CXHETTIYAR.jpg|thumb|செ.மெ. பழனியப்ப செட்டியார்]]
[[File:S.M PALANIYAPPA CXHETTIYAR.jpg|thumb|செ.மெ. பழனியப்ப செட்டியார்]]
செ.மெ. பழனியப்பச் செட்டியாா் (பிப்ரவரி 15, 1920 – செப்டம்பர் 1, 2005) பதிப்பாளர். தொழிலதிபர். பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். ‘ஏஷியன் பேரிங் லிமிடெட்’ என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பித்த கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.  
செ.மெ. பழனியப்பச் செட்டியாா் (பிப்ரவரி 15, 1920 – செப்டம்பர் 1, 2005) பதிப்பாளர். தொழிலதிபர். பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். ‘ஏஷியன் பேரிங் லிமிடெட்’ என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பித்த கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.  
Line 61: Line 61:
* இதயம் தொட்ட இலக்கியவாதிகள், விஜயா மு. வேலாயுதம், வானதி பதிப்பகம், முதல் பதிப்பு: 2019
* இதயம் தொட்ட இலக்கியவாதிகள், விஜயா மு. வேலாயுதம், வானதி பதிப்பகம், முதல் பதிப்பு: 2019
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:49, 7 March 2024

செ.மெ. பழனியப்ப செட்டியார்

செ.மெ. பழனியப்பச் செட்டியாா் (பிப்ரவரி 15, 1920 – செப்டம்பர் 1, 2005) பதிப்பாளர். தொழிலதிபர். பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். ‘ஏஷியன் பேரிங் லிமிடெட்’ என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பித்த கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.

பிறப்பு, கல்வி

செ.மெ. பழனியப்ப செட்டியாா், பிப்ரவரி 15, 1920 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில், செ. மெய்யப்பச் செட்டியார் – கண்ணம்மை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். ராயவரம், சு.கதி.காந்தி பாடசாலையில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து தந்தையின் தொழில் நிமித்தம் பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்குச் சென்றார். அங்கு செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். பின் தமிழகம் வந்தார். சிதம்பரத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். கடியாபட்டி ஸ்ரீபூமிஸ்வர சுவாமி உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார்.

தனி வாழ்க்கை

செ.மெ பழனியப்பச் செட்டியார், மணமானவர். மனைவி: மீனாட்சி.

செ.மெ. பழநியப்பச் செட்டியார்

பதிப்பு

செ.மெ. பழனியப்பச் செட்டியார், 1941-ல், திருச்சியில், புனித ஜோசப் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ‘பழனியப்பா பிரதர்ஸ்’ என்ற எழுதுபொருள் கடையைத் தொடங்கினார். கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், அழிப்பான், காகிதம் போன்றவற்றை விற்பனை செய்தார்.

அச்சகமும், நூல் விற்பனையும்

செ.மெ. பழனியப்பச் செட்டியார், பாடப் புத்தகங்கள் அல்லாத பிற நூல்களை வாங்கி விற்பனை செய்தார். பின் தமிழில் பாடநூல்களைத் தாமே அச்சிட்டு விற்பனை செய்ய விரும்பி ’ஏசியன் பிரிண்டர்ஸ்’ எனும் அச்சகம் ஒன்றைத் தோற்றுவித்தார். அதன் மூலம் தமிழ்ப் பாட நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

இக்காலக் கட்டத்தில் புனித ஜோசப் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த ஐயன்பெருமாள் கோனாா், பழனியப்பச் செட்டியாரைத் தொடர்பு கொண்டார். கோனார், 1937-ம் ஆண்டு முதலே, பதினோராவது வகுப்புக்கு ‘எக்ஸ்பிளனேட்டரி தமிழ் நோட்ஸ்’ என்ற பெயரில் ஒரு தமிழுரை எழுதி முதலில் தாமாகவும் பின் சில பதிப்பாளர்கள் மூலமும் வெளியிட்டு வந்தார். அதில் சில பிரச்சனைகளைச் சந்தித்ததால், பழனியப்பச் செட்டியாரின் அச்சகம் மூலம் தம் நூல்களை வெளியிட விரும்பினார். அந்த வகையில் 3-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்குப் பயன்படும் வகையில் கோனாா் தமிழ் உரை உருவானது.

பழனியப்பா பிரதர்ஸ்

’கோனார் தமிழ் உரை’ நூலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, உரை நூல்களையும், தமிழ் இலக்கியம் குறித்த பிற நூல்களையும் வெளியிடுவதற்காக, செ.மெ. பழனியப்ப செட்டியார், 1945-ல், திருச்சியில், பழனியப்பா பிரதர்ஸ் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். ஐயன்பெருமாள் கோனாா் எழுதிய தமிழ் இலக்கிய, இலக்கண உரை நூல்களை வெளியிட்டார். அது தவிர்த்து நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, கோ. வில்வபதி போன்றோரின் நூல்களையும் சிறார்களுக்கான பல நூல்களையும் வெளியிட்டார்.

1953 முதல், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து செயல்படத் தொடங்கியது. இலக்கியம், இலக்கணம், உரை விளக்கம், புதினங்கள், தமிழாய்வுக் கட்டுரைகள், தொகுப்புகள், அகராதிகள், பயண நூல்கள், தத்துவ நூல்கள் எனப் பல்வேறு தலைப்பில் ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டது. சென்னை, திருச்சி மட்டுமல்லாமல் சேலம், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய இடங்களிலும் கிளைகளைக் கொண்டு பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் செயல்பட்டது.

குழந்தைப் பதிப்பகம்

செ.மெ. பழனியப்பச் செட்டியார், சிறார் இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சிறார் நூல்களை வெளியிடுவதற்காகவே, குழந்தைப் பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை நிறுவினார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவை பதிப்பாசிரியராகக் கொண்டு பல சிறார் நூல்களை வெளியிட்டார். மாதம் ஒரு புத்தகத்தை குழந்தை பதிப்பகம் வெளியிட்டது.

குழந்தை எழுத்தாளர் சங்கம்

செ.ம. பழனியப்பச் செட்டியார், குழந்தை எழுத்தாளர் சங்கம் உருவாக அழ. வள்ளியப்பாவுடன் இணைந்து செயல்பட்டார். ஏப்ரல் 15, 1950-ல், செ.ம. பழனியப்பச் செட்டியாரின் இல்லத்தில் குழந்தை எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. சக்தி. வை. கோவிந்தன் தொடக்க காலத்தில் தலைவராக இருந்தார். பின் அழ. வள்ளியப்பா தலைவராகச் செயல்பட்டார்.

தொழில்கள்

செ.ம. பழனியப்பச் செட்டியாரின் மூத்த மகன் காந்தி அமெரிக்காவில் மருத்துவராக இருந்தார். அவரைச் சந்தித்துவிட்டு வந்த பழனியப்பச் செட்டியார், மருத்துவம் சார்ந்து புதிதாகத் தொழில் நிறுவனம் ஒன்றைத் தொடங்க எண்ணினார். ஆனால், அதற்கு மாறாக, பொறியியல் சார்ந்த நிறுவனமான ஏஷியன் பேரிங் லிமிடெட் (Asian Bearing Limited) என்ற நிறுவனத்தை, ஓசூரில், 1982-ல் தொடங்கினார். தொடர்ந்து பல தொழில்களில் ஆர்வம் காட்டினார்.

கோனார் நினைவு

செ.மெ. பழனியப்பச் செட்டியார் சென்னை ராயப்பேட்டையில் தான் அமைத்த இல்லத்திற்கு ‘கோனார் மாளிகை’ என்று பெயர் சூட்டினார். ஐயன்பெருமாள் கோனார் மறைவுக்குப் பின், அவரது நினைவைப் போற்றும் வகையில் அழ. வள்ளியப்பாவின் இலக்கிய வட்டத்துடன் இணைந்து செயல்பட்டார். பன்னிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு கோனார் நினைவுப் பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.

விருதுகள்

  • சிறந்த அச்சக உரிமையாளர் - தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் – 1993
  • இந்திய அரசின் சிறந்த பதிப்பாளர் விருது
  • தமிழக அரசின் சிறந்த பதிப்பாளர் விருது
  • குழந்தை எழுத்தாளர் சங்க விருது
  • அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது

மறைவு

செ.மெ. பழநியப்பச் செட்டியார், செப்டம்பர் 1, 2005 அன்று காலமானார். பழனியப்பச் செட்டியாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ப. செல்லப்பன் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியாகச் செயல்பட்டார்.

நினைவு

செ.மெ. பழநியப்பச் செட்டியார் நினைவாக, பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் செ.மெ. பழநியப்பச் செட்டியார் நினைவு சிறுவர் இலக்கியப் போட்டியை நடத்துகிறது. அப்போட்டியில் சிறந்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் சிறார் படைப்பாளிகளுக்குப் பரிசளிப்பதுடன் அவர்களது படைப்புகளையும் நூலாக வெளியிடுகிறது.

மதிப்பீடு

செ.மெ. பழநியப்பச் செட்டியார், புத்தக விற்பனையாளர், அச்சகர், பதிப்பாளர் என்று செயல்பட்டார். இவை தவிர்த்துச் சிறந்த தொழிலதிபராகவும் இயங்கினார். சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். பதிப்பகம் நடத்திய நகரத்தார்களுள் முன்னோடிப் பதிப்பாளராக செ.மெ. பழநியப்பச் செட்டியார் அறியப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page