நாரண துரைக்கண்ணன்: Difference between revisions
(நாட்டுடைமை ஆக்கப்பட்ட தகவல் சேர்க்கப்பட்டது) |
|||
Line 34: | Line 34: | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
1964 கலைமாமணி (நாடகச் செயல்பாடுகளுக்காக) | 1964 கலைமாமணி (நாடகச் செயல்பாடுகளுக்காக) | ||
====== நாட்டுடைமை ====== | ====== நாட்டுடைமை ====== | ||
நாரண துரைக்கண்ணனின் படைப்புக்களை | நாரண துரைக்கண்ணனின் படைப்புக்களை 2007-ல், தமிழக அரசு [[நூல்கள் நாட்டுடைமை|நாட்டுடைமை]] ஆக்கியது. | ||
== மறைவு == | == மறைவு == | ||
ஜூலை 22, 1996 அன்று நாள் தன் 90-வது வயதில் மறைந்தார். | ஜூலை 22, 1996 அன்று நாள் தன் 90-வது வயதில் மறைந்தார். |
Revision as of 20:57, 23 December 2022
நாரண துரைக்கண்ணன் (ஆகஸ்டு 24, 1906 - ஜூலை 22, 1996) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். விடுதலைப்போராட்ட வீரர். தொடக்ககால இதழாளர்களில் ஒருவர், எழுத்தாளர் சங்கச் செயல்பாட்டாளர். தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பின்னர் சுயமரியாதை இயக்க ஆதரவாளராகவும் திகழ்ந்தவர்.
பிறப்பு, கல்வி
நாரண துரைக்கண்ணன் ஆகஸ்டு 24, 1906 அன்று நாள் க.வே.நாராயணசாமி - அலமேலு அம்மையாரின் மகனாகப் பிறந்தார்.பெற்றோர் இட்ட பெயர் நடராஜன். ஆனால், வீட்டில் செல்லமாக அழைத்த 'துரைக்கண்ணு’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. முதலில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், பிறகு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். குப்புசாமி முதலியார் என்னும் ஆசிரியரிடம் மரபானமுறையில் தமிழ் கற்றார். திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மைக்கேலிடம் ஆங்கிலம் கற்றார். பின்னர் டி.என். சோஷாசலம் என்பவரிடம் தமிழ் இலக்கியம் கற்றார்.மறைமலை அடிகளாரிடமும் சிறிதுகாலம் தமிழ் பயின்றார்.நாதமுனி என்பவரிடம் நாதசுரக் கலையையும், ஆந்திர இசைக் கலைஞர் சாச்திரியிடம் பிடில் வாசிப்பதையும் பயின்றார்
தனிவாழ்க்கை
1932-ஆம் ஆண்டு, தன் 25-வது வயதில் மீனாம்பாளை மணந்தார். சென்னை அடிசன் நிறுவனத்திலும் அச்சகங்களிலும் தொடக்கத்தில் இவர் பணியாற்றினார். ஜீவா பதிப்பகம் என்ற இவருடைய சொந்த பதிப்பில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக, அக்கடனை அடைக்கத் தன் சொந்த வீட்டை விற்றார்.
1973-ஆம் ஆண்டு மயிலாப்பூர் சீனிவாச சாஸ்திரி அரங்கில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் நாரண. துரைக்கண்ணன் தமது பேச்சில் தன் வறுமைச்சூழலை சொன்னார். அதையொட்டி ஒளவை நடராஜன் முன்னெடுப்பில் ’திரு.நாரணதுரைக்கண்ணர் நலவாழ்வு நிதி’ எனும் நிதி உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி நிதி சேரவில்லை. ’அன்னை கலை, இலக்கிய நற்பணி மன்றம்’ என்னும் அமைப்பு டிசம்பர் 23, 1973 அன்று கோகலே மண்டபத்தில் நடந்த விழாவில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி மூலம் நாரண. துரைக்கண்ணரிடம் ஒப்படைத்தது.
1982-ல் மனைவி மறைந்தபின் தனிமையும் பொருளியல் நெருக்கடியும் அடைந்தார். அவரது படைப்புக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது வந்த சிறிய நிதியில் வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
நாரண துரைக்கண்ணனின் முதல் கட்டுரை 'சரஸ்வதி பூஜை' 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் வெளியாகியது. 1932-ல் ஆனந்தபோதினி இதழில் 'அழகாம்பிக்கை’ என்ற முதல் சிறுகதையை எழுதினார். மை வண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, லியோ என வெவ்வேறு புனைப் பெயர்களில், கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்களை எழுதி வந்தார். 'ஜீவா’ என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக அறியப்பட்டது. செந்தமிழ்ச்செல்வி, திராவிடன், தமிழ்நாடு, தமிழரசு, சிந்தாமணி, தேசபந்து போன்ற இதழ்களில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
1930-ல் வெளிவந்த புருடோத்தமன் கதை அல்லது கோனாட்சியின் வீழ்ச்சி இவர் எழுதிய முதல் நாவல்.1942-ல் ’உயிரோவியம்' என்ற நாவலை எழுதியபோது வ.ராமசாமி ஐயங்கார் (வ.ரா) அந்த நாவலுக்கு முன்னுரை வழங்கினார்.
நாரண துரைக்கண்ணன் சமூகசீர்திருத்த நோக்கத்துடன் எழுதியவர். சமூகப்போராட்டங்களின்போது அவற்றை ஆதரித்து நாவல்களை எழுதியிருக்கிறார். தேவதாசி ஒழிப்புச்சட்ட இயக்கத்தின் போது அதை ஆதரித்து ’தாசிரமணி' என்னும் நாவலை எழுதினார். தரங்கிணி என்னும் இவருடைய நாவல் சாதிக்கலப்பு திருமணம் பற்றியது.
நாடகவாழ்க்கை
நாரண துரைக்கண்ணன் நாடகத்துறையில் தீவிரமாக ஈடுபட்டார். அவருடைய நாடகங்களில் உயிரோவியம் புகழ்பெற்றது. நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7,8,9 தேதிகளில் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவு, 'தமிழில் நாடகம்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன.
அரசியல்
நாரண துரைக்கண்ணன் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராகவும் காந்திய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் போது 'தீண்டாதார் யார்?’ போன்ற நூல்களை எழுதினார். ராஜாஜிக்கு அணுக்கமானவராக இருந்த அவர் ராஜாஜியின் முதல் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். பின்னர் சுயமரியாதை இயக்கத்துடன் அணுக்கமானார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1948-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் குழுத் தலைவராகச் செயல்பட்டுள்ளார். ஈ.வே.ராமசாமி பெரியார், சி.என்.அண்ணாத்துரை, பாரதிதாசன் ஆகியோர் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இதழியல்
நாரண துரைக்கண்ணன் பரலி சு.நெல்லையப்பர் பரிந்துரையில் 'லோகோபகாரி’ வார இதழின் ஆசிரியரானார். 1932-ஆம் ஆண்டு 'ஆனந்தபோதினி’ இதழின் ஆசிரியர் ஆனார். தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். 1934-ல் பிரசண்ட விகடன் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இறுதிவரை இதழாளராகவே பணியாற்றினார்.
அமைப்புப்பணிகள்
நாரண துரைக்கண்ணன் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், சென்னை கம்பர் கழகச் செயலாளர், முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர், தென்னிந்தியப் பத்திரிக்கையாளர் பெருமன்றத் தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
1949-இல் மகாகவி பாரதியார் இலக்கியங்களை நாட்டுடைமையாக்கப் போராட ஏற்பட்ட குழுவில் தலைமை வகித்தார். அதற்கென ஏற்பட்ட குழுவினர் சார்பில் பாரதியின் துணைவியார் செல்லம்மாளை திருநெல்வேலிக்குச் சென்று, கண்டு, ஒப்புதல் கடிதம் வாங்கினார்.
புதுமைப்பித்தன் மறைவுக்குப்பின் அவர் குடும்பத்திற்கு உதவ எழுத்தாளர் சங்கம் சார்பில் நிதி திரட்டிய குழுவின் தலைமை வகித்தார். இராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடு வாங்கி அளிக்கப்பட்டது.
விருதுகள்
1964 கலைமாமணி (நாடகச் செயல்பாடுகளுக்காக)
நாட்டுடைமை
நாரண துரைக்கண்ணனின் படைப்புக்களை 2007-ல், தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.
மறைவு
ஜூலை 22, 1996 அன்று நாள் தன் 90-வது வயதில் மறைந்தார்.
வாழ்க்கை வரலாறு
- நாரண துரைக்கண்ணன் வாழ்வும் பணியும் - முகம் மாமணி
- நாரணதுரைக்கண்ணன் வாழ்க்கை வரலாறு- இராம குருநாதன். இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை (இணையநூலகம்)
நூல்கள்
பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள்,சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
நாவல்கள்
- புருடோத்தமன் கதை அல்லது கோனாட்சியின் வீழ்ச்சி
- உயிரோவியம்
- புதுமைப்பெண்
- யான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?
- தாசி ரமணி
- காதலனா? காதகனா?
- சீமான் சுயநலம்
- தியாகத்தழும்பு
- புதுமைப்பெண்
- நடுத்தரு நாராயணன்
- வேலைக்காரி
- தரங்கிணி
சிறுகதைகள்
- முத்தம்படா அதரம்
- சபலம்
- அழகாம்பிகை
- பார்வதி
- தேவகி
- மேனகா
- ஹம்ஸானந்தி
- ஜீவாவின் சிறுகதைகள்
நாடகங்கள்
- தீண்டாதார் யார்?
- உயிரோவியம்
- குமரி முதல் காஷ்மீர் வரை
- எழுதாத ஓவியம்
- திருவருள் பிரகாச வள்ளலார்
பாடல்கள்
- திருமலைக் கவிராயர் கவிதைகள்
- இதய கீதம்
- அருட்கவி அமுதம் (பக்திப்பாடல் தொகுப்பு)
ஆய்வுகள்
- தமிழர் யார்?
- சிவகாமி சரித ஆராய்ச்சி
- தமிழ்நாடகம்
- திருவருட்பா ஆய்வு
- இலட்சிய புருடன்
வாழ்க்கைவரலாறுகள்
- வள்ளலார்
- தந்தை பெரியார்
- சங்கரர்
- சுபாஷ் சந்திர போஸ்
- விவேகானந்தர்
- அரவிந்தர்
- காந்தி
- பாரதி
- இராஜாஜி
கட்டுரைநூல்கள்
- அரசியல் சிந்தனைகள்
- அறிவுக்கு விருந்து
- எழுத்தாளர் சகோதரர்களுக்கு
- இலக்கியக் குரல்
- தன்மதிப்பு
- தமிழகத்தின் தனித் தலைவர்கள்
உசாத்துணை
- https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun2017/33297-2017-06-16-19-59-15
- http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2371
- http://thfreferencelibrary.blogspot.com/2014/04/blog-post_8216.html
- நாரண துரைக்கண்ணன் வாழ்க்கை வரலாற்று நூல்
- நாரண துரைக்கண்ணன் நூல்கள் மூலம்
- பேரா பசுபதி பதிவுகள்
- https://www.keetru.com/index.நாரணதுரைக்கண்ணன்13
✅Finalised Page