first review completed

காசிவாசி செந்திநாதையர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 56: Line 56:
* [https://noolaham.net/project/746/74588/74588.pdf காசிவாசி செந்திநாதையர்: க. கணேசலிங்கம்: விவேகானந்தம் அச்சகம் லிமிடட் யாழ்ப்பாணம்]
* [https://noolaham.net/project/746/74588/74588.pdf காசிவாசி செந்திநாதையர்: க. கணேசலிங்கம்: விவேகானந்தம் அச்சகம் லிமிடட் யாழ்ப்பாணம்]
* [https://archive.org/details/acc.no.24917sivagnanabotham1996 சிவஞானபோத வசனாலங்காரதீபம்]
* [https://archive.org/details/acc.no.24917sivagnanabotham1996 சிவஞானபோத வசனாலங்காரதீபம்]
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:53, 23 November 2022

காசிவாசி செந்திநாதையர்

காசிவாசி செந்திநாதையர் (சி. செந்திநாதையர்)(அக்டோபர் 2, 1848 - மே 15, 1924) ஈழத்துத் தமிழறிஞர். கட்டுரைகளும், கண்டனங்களும் எழுதினார். சமயத் தொண்டாற்றி பல நூல்களைப் பதிப்பித்தவர். நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காசிவாசி செந்திநாதையர் இலங்கை யாழ்ப்பாணம் ஏழாலையில் சிந்நய ஐயர், கெளரி அம்மாள் இணையருக்கு மகனாக அக்டோபர் 2, 1848-ல் பிறந்தார். இயற்பெயர் அகோரசிவம். ஏடு தொடங்கப்பட்ட பின், புன்னலைக் கட்டுவன் என்னும் ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த தனது மாமனாராகிய கதிர்காமையரிடத்தில் தமிழும் சமஸ்கிருதமும் கற்றார். யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார். இருபது வயதில் ஆங்கிலக் கல்வி பெறுவதை நிறுத்தி விட்டு, நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றார். 1871-ல் இவர் தமது தந்தையுடன் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள திருக்கோயில்களைத் தரிசித்தார்.

ஆசிரியப்பணி

1872-ல் ஆறுமுக நாவலரால் வண்ணார் பண்ணையில் நிறுவப்பட்ட சைவ வித்தியாசாலையில் ஆறு ஆண்டுகளும், அவரால் நிறுவப்பட்ட ஆங்கில வித்தியாசாலையிலே ஓர் ஆண்டும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1878-ல் ஆசிரியத் தொழிலிலிருந்து விலகி இந்தியாவுக்குச் சென்றார். இந்தியாவில் திருவனந்தபுரத்துக்கு சென்று திருவனந்தபுரத்தின் பிரதம நீதிபதியாய் விளங்கிய தா. செல்லப்பா பிள்ளையவர்கள் துணையாலும் ஆறுமுக நாவலர்அளித்த குணநலச் சான்றிதழின் துணையாலும், சுப்பா சாஸ்திரியார், அனந்தகிருஷ்ண சாஸ்திரியாரிடம் சமஸ்கிருத காவியம், வியாகரணம், தருக்கம் முதலியவற்றைக் கற்றார்.

திருச்செந்தூர் பழனி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தமது தந்தையார் அழைப்பின்படி யாழ்ப்பாணம் திரும்பினார். 1880-ல் கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த தம்பையா முதலியாரின் வேண்டுகோளின்படி கொழும்புக்குச் சென்று அவருடைய தருமசத்திரத்தில் ஏறக்குறைய ஆறுமாத காலம்வரை சைவ சித்தாந்த விரிவுரைகள் ஆற்றினார். அங்கிருந்து கதிர்காமத்துக்குச் சென்று அக்கோயிலிலிருந்து கந்த புராணத்தினைப் பன்னிரண்டு நாட்களுக்குள்ளே படித்து முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்தை அடைந்தார். 1882-ல் இவர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று திருநெல்வேலியிலுள்ள சைவப் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902-ல் திருப்பரங்குன்றத்துச் சந்நிதி வீதியில் ”வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த வித்தியா சாலை” என்னும் பெயருடன் ஒரு வித்தியாசாலையினை நிறுவி, அதிலே தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கற்பித்தார்.

இதழியல்

1883-ல் திருநெல்வேலி முன்சீப் சுப்பிரமணியபிள்ளை நடாத்திவந்த 'சுஜனமநோரஞ்சனி” பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். 1888-ல் 'அமிர்த போதினி” என்னும் வார வெளியீடு ஒன்றினைத் திருப்பற்றூரிலிருந்து சில காலம் வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தமக்கு ஒய்வு கிடைக்கும் போது கோயில்களிலும், சமயச் சபைகளிலும், மடங்களிலும் விரிவுரைகள் ஆற்றினார். 1888 முதல் 1898 வரை இவர் காசியிலே வசித்து வந்ததால் ”காசிவாசி செந்திநாதையர்” என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 1904-ஆம் ஆண்டு அருட்பா மருட்பா என்ற வழக்கில் நா. கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக நின்றவர். கருங்குழி இராமலிங்க பிள்ளையின் பாடல் காரணமாகப் புலோலியூர் நா. கதிரைவேற்பிள்ளைக்கும் சென்னையிலிருந்தோர் சிலருக்குமிடையில் சென்னைத் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சாட்சியளித்தவர்களுள் இவரும் ஒருவர். இலங்கை நேசன் பத்திரிகையில் இவருடைய கட்டுரைகளை பொதுமக்கள் விரும்பிப் படித்தனர்.

கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் போன்ற நூல்களை, மக்கள் தேவை கருதி, எளிமையான வசனநடையில் ஆறுமுக நாவலர் எழுதினார். அவற்றின் உள்ளார்ந்த சித்தாந்தக் கருத்துக்களையும் கொள்கைகளையும் விளக்கும் நோக்குடன் 'கந்தபுராண நவநீதம்' என்ற நூலை செந்திநாதையர் எழுதினார். சிவஞானபோதத்தை எளிதில் விளக்கும் நோக்கில் செந்திநாதையர் எழுதிய உரைநூல் 'சிவஞானபோத வசனாலங்கார தீபம்'. அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணி மூல நூல்களை ஆராய்ந்து, அதன் விளக்கமாக அமைந்த சில கருத்துக்கள் மூல நூலிலுள்ளவற்றை மாற்றியும் திரித்தும் வெளிவந்தவை எனக் கண்டு, இவற்றை விளக்குவதாக நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பை எழுதினார். வேதங்களிலுள்ள கருத்துக்களையும் தேவாரத்திலுள்ள கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அவற்றுக்கிடையில் உடன்பாடு கண்டு எழுதப்பட்ட நூல் 'தேவாரம் வேதசாரம்'. வேதம் காட்டும் ஆத்மானந்த அனுபவமே வேதாந்தம் என்பதன் பொருள், அது காரண இடுகுறிப் பெயராக வந்தது, என்ற கருத்தை அவரின் 'சைவ வேதாந்தம்' என்னும் நூலில் எழுதினார்.

பதிப்பாளர்

தேவகோட்டை, அரு.சோம. சோமசுந்தரச் செட்டியார், அரு.நா. இராமநாதச் செட்டியார் இருவரும்அளித்த பொருளுதவியைக் கொண்டு 1906-ல் "செந்திநாதைய சுவாமி யந்திரசாலை" என்னும் அச்சகத்தை நிறுவினர். அவ்வச்சகத்தில் இவர் இயற்றிய நூல்களுள் பெரும்பாலானவை வெளியிடப்பட்டன.

காசிவாசி செந்திநாதையரின் நினைவு மண்டபம்

விருதுகள், பட்டங்கள்

  • திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் இவரது மும்மொழிப் புலமையைப் பாராட்டியது.
  • ஆறுமுக நாவலர் இவர் திறனைப் பாராட்டி, நன்னடத்தைப் பத்திரிக்கை எனும் சான்றிதழ் அளித்தார்.
  • காசிவாசி செந்திநாதையரின் சைவப்பணிகளை பாராட்டி 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்தது.

நினைவிடம்

இலங்கை யாழ்ப்பாணத்தில் காசிவாசி செந்திநாதையரின் நினைவு மண்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மறைவு

காசிவாசி செந்திநாதையர் மே 15, 1924-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • கந்தபுராண நவநீதம்
  • ஞானரத்தினவளி(1888)
  • சைவ வேதாந்திம்
  • தேவாரம் வேதசாரம்
  • தத்துவ விளக்கம் மூலமும் உரையும்(1918)
  • சிவஞானபோத வசனாலங்காரதீபம்
  • வஜ்ரடங்கம்
  • வச்சிரதண்டம்
  • சாண் ரத்திரியப் பிரசண்டமாருதம்
  • ஞானபோதவிளக்கச் குருவளி
  • சிவனுந்தேவன என்னுந் தீய நாவுக்கு ஆப்பு
  • வீரபத்திராஸ்திரம்
  • விவிலிய குற்சித கண்டன திக்காரம்
  • விவிலிய குற்சிதக் குறிப்பு
  • தாந்திரிக துண்ட கண்டன கண்டனம்
  • மகா வுக்கிர வீரபத்திராஸ்திரம்(1915)
  • வைதிக கீத்தாத்துவித சைவசித்தாந்தப் படம்
  • வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப்படம் வினவிடை
  • ஸ்ரீசீகாழிப் பெருவாழ்வின் ஜீவகாருண்ய மாட்சி(1907)
மொழி பெயர்ப்பு
  • நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழி பெயர்ப்பு
  • பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்
இவரைப்பற்றிய நூல்கள்
  • காசிவாசி செந்திநாதையர் - க. கணேசலிங்கம்
  • காசிவாசி செந்திநாதையர் - கணேசையர், சி, குலரத்தினம், க.சி

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.