under review

தமிழ் நேசன்: Difference between revisions

From Tamil Wiki
(Moved template to bottom of article)
No edit summary
Tag: Reverted
Line 80: Line 80:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய இதழ்கள்]]
[[Category:மலேசிய இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]

Revision as of 10:14, 10 December 2022

தமிழ் நேசன்
தமிழ் நேசன்
தமிழ் நேசன் விடைபெறும் குறிப்பு

தமிழ் நேசன் (செப்டம்பர் 10, 1924 - ஜனவரி 31, 2019) மலேசியத் தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து,  வணிகத் தகவல்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. பின்னர், தோட்ட தொழிலாளர்களின் குரலாக சமுதாய நலனுக்காக இயங்கியது. இறுதியில் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழாக உருவமெடுத்தது. 1970 வரை தமிழ் நேசனின் இலக்கிய முன்னெடுப்புகள் மலேசிய தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாகும்.

இதழ் வரலாறு

தொடக்கம்

கி.நரசிம்ம ஐயங்கார் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி தமிழ் நேசனை துவங்கினார். செப்டம்பர் 24, 1924-ல் முதல் இதழ் வெளிவந்தது.  அவர் தனது சகோதரருடன் கூட்டாக அம்பாங் வீதியில் உள்ள 'ஆட்ப் பிரிண்டிங் ஒர்க்’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அப்போது தமிழ் நேசன் வார இதழாக இருந்தது. பிறகு வாரம் இருமுறை, வாரம் மும்முறை என பரிணாமம் எடுத்து, பிப்ரவரி 20, 1937-ல் நாளிதழாக மாற்றம் கண்டது.

ஜி. பார்த்தசாரதி
சீனர்களிடம் விற்பனை
கி.நரசிம்ம ஐயங்கார்

ஜப்பானிய ஆட்சிக்குப் பிறகு, பத்திரிகை தாள் கிடைப்பது கஷ்டமாக இருந்ததால், தமிழ் நேசனும், அதன் இணைவெளியீடான ஆங்கில பத்திரிகை 'மலாயன் டெய்லி நியூஸ்’ இதழும் பாதிக்கப்பட்டன. நரசிம்ம ஐயங்காரின் மனைவி லட்சுமி அம்மாள் 'மலாயன் டெய்லி நியூஸ்’ ஐ நிறுத்திவிட்டு தமிழ் நேசனை மட்டும் தொடரலாம் என ஆலோசித்தார். நரசிம்ம ஐயங்காரின் மைத்துனரும், அப்போதைய நாளிதழின் ஆசிரியருமான ஜி. பார்த்தசாரதி இதை ஏற்காதனால் அவர்களிடையே மனத்தாங்கல் ஏற்பட்டது. லட்சுமி அம்மாள் சார்பில் தமிழ் நேசன், மலாயன் டெயில் நியூஸ் , அச்சுக்கூடம் அனைத்தையும் விற்க சீன வக்கில்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டு, முன்தொகையும் பெறப்பட்டிருந்தது. இதற்கிடையில், தமிழ் நேசனை இந்தியர் சார்பாக வாங்கி நடத்த அப்போதைய மலேசிய இந்திய காங்கிரஸின் முதல் தலைவராக இருந்த ஜாந்திவி முயன்றார். அவர் சீனர்களிடம் பேசி அவர்கள் சம்மதித்தும் போதிய பணமில்லாமல் அம்முயற்சி தோல்வியுற்றது. இதன்பிறகு, நேசன் உரிமையாளர்களிடமிருந்து, ஜாந்திவி பேசிய விலைக்கு சீனர்கள் தமிழ் நேசனை வாங்கிக்கொண்டனர்.

தமிழர்களிடம் உரிமை

ஆகஸ்ட் 31,1957 அன்று மலேசியா விடுதலை அடைந்தபின், வழக்கறிஞர்களான கூ டெக் ஈ மற்றும் யாங் ஷுக்லினிடமிருந்து, தமிழ் நேசன் என்ற பெயர் உரிமையை முரு.நா.மலையாண்டி செட்டியாரும் பழனியப்ப செட்டியாரும் கூட்டாக விலைக்கு வாங்கினர்.இந்த நாளிதழுக்காகச் சொந்த சிறு அச்சகத்தையும் கூட்டாக நிறுவினர். பழைய கட்டடத்திலேயே செயல்பட்ட தமிழ் நேசனை சிறிது காலம் அவர்கள் தொடர்ந்து நடத்தினர். பின் ஆம்பாங் சாலை 37-க்கு பதிப்பகம் மாற்றம் கண்டது.

வளர்ச்சியும் சரிவும்

1980-களில் இந்நாளிதழை முன்னால் அமைச்சரான துன் சாமிவேலுவின் குடும்பம் வாங்கியது. டத்தின் இந்திராணி சாமிவேலு நாளிதழ் உரிமையாளராக செயல்பட்டார்.   அதனைத்தொடர்ந்து, அரசாங்கத்தின் கொள்கையைப் பரப்பும் சாதனமாகத் தமிழ் நேசன் கையாளப்பட்டது. மேலும் தமிழ்நேசன் மலேசிய இந்திய காங்கிரஸின் உட்கட்சிப் பூசல்களில் ஒரு தரப்பு செய்திகளை மட்டும் வெளியிடும் நிலைபாட்டை கொண்டிருந்தது. அது இதழின் நம்பகத்தன்மையை மிகவும் பாதித்தது.2000-க்குப் பின்னர் தமிழ் நேசன் அலுவலகம் பத்துமலைக்கு இடமாற்றம் கண்டது. 

நிறுத்தம்

95 வருடங்களைக் கடந்து நடந்து வந்த மலேசிய இதழான தமிழ் நேசன் 2019-ல் உருவான வர்த்தகப் பிரச்சனைகளால் ஜனவரி 31,2019 அன்று நிறுத்தப்பட்டது.

கு.அழகிரிசாமி

தமிழ் நேசனின் வெற்றிக்கான காரணங்கள்

அ. சமுதாய குரல் & அரசியல் உரிமை

தமிழ் நேசன் தோட்டத் தொழிலாளர்களின் குரலாகச் செயல்பட்டது. பிப்ரவரி 1924-ல் தோட்ட தொழிலாளர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் விசாரணையில் ஆண்களுக்கு 35 காசும், பெண்களுக்கு 27 காசாகவும் சிலாங்கூர் மாநிலப் பகுதிகளில் நிர்ணயமிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 1929 முதல் தேதி முதல் தோட்டத் தொழிலாளரான ஆண்களுக்கு 50 காசு, பெண்களுக்கு 40 காசு, சிறுவர்களுக்கு 20 எனக் கிள்ளானில் அந்த வருடம் அக்டோபரில் நடந்த இந்திய இமிகிரேஷன் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பளத்திற்கு குறைவாக கொடுத்தால் 1928 ஜனவரி முதல் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிம அனுமதி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்று இந்திய இமிகிரேஷன் கமிட்டி கூறும் நிலைமை ஏற்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமைக்காகப் பேசிய அப்போதைய இந்தியா ஏஜென்ட் ராவ்சாகிப் சுப்பையா நாயுடுவிற்கு வேண்டிய தகவல்களான தொழிலாளர் வாழ்க்கைச் செலவு பற்றிய புள்ளி விவரங்களை தமிழ்நேசன் அளித்தது. பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதிலும் தமிழ் நேசன் பங்காற்றி உள்ளது. சீனத் தொழிலாளர்களுக்கு 60, 70 காசு என்ற சம்பளம் அளிக்கப்படுவதனால் இந்திய தொழிலாளர்களுக்கும் அதற்கிணையாக மேற்கொண்டு 10 காசு உயர்த்தி 50 காசிலிருந்து 60 காசு ஊதியம் கொடுக்க வேண்டுமென '10 காசு சம்பள உயர்வு போராட்டம்’ தமிழ்நேசனில் இருந்தே தொடங்கியது. 1938-ல் தமிழ் நேசனில் ஆசிரியரான ஆர். எச். நாதன் எனும் ஆர். ஹாலாசிய நாதன் அதை தமிழ்நேசனில் எழுதி தொடங்கிவைத்தார்.

மலேசிய தமிழர்களின் அரசியல் உரிமை உள்ள குடிமக்களாக திகழ வேண்டுமெந்ற கோரிக்கையை தமிழ்நேசன் முதன்மையாக முன்வைத்தது, அன்றைய பிரிட்டிஷ் அரசால் 1909-ல் உருவாக்கப்பட்டிருந்த நாடளாவிய கூட்டுச் சட்டசபையான 'தேசச் சட்டமன்றம்’ என்னும் அமைப்பிலும், சிலாங்கூர் சமஸ்தானச் சபையிலும் இந்தியர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என சி. நரசிம்ம ஐயங்கார் தமிழ் நேசன் மூலம் கோரிக்கை விடுத்துப் போராடினார். மலாயா சுதந்திரம் பெற்ற போது தமிழ் நேசன் 'மெர்டேக்கா மலர்’ 1957-ல் வெளியிட்டது. சுதந்திர நாட்டில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அதில் வலியுறுத்தப்பட்டது. இம்மலரில் 'இதயத்தில் இந்தியராக இருங்கள்' என்று வழக்கறிஞர் ஆர் ரமணி எழுதிய புகழ்பெற்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது.

முருகு சுப்ரமணியம்

ஆ. தமிழ்பள்ளி மாணவர் நிதி

1974-ல் முகமது பாச்சாவின் அறிவுரைக்கு இணங்க அன்றைய தமிழ் நேசன் ஆசிரியர் குழுவில் இருந்த தமிழ்ப்பள்ளி மாணவர் நிதி உருவாக்கப்பட்டது.

இ. ஜப்பானியர் ஆட்சி காலத்திலும் தொடந்த பிரசுரம்

ஜி. பார்த்தசாரதி ஆசியராக இருந்தபோது, மலாயாவில் டிசம்பர் 1941-ல் ஜப்பானியர் ஆதிக்கம் ஆரம்பமாகியது. குண்டுவெடிப்புகளின் காரணமாக நேசன் காரியாலயத்தைத் தற்காலிகமாகப் பூட்டிக்கொண்டு நேசன் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் தலைமறைவாயினர். அவர்கள் அப்போதைய ஆசிரியர் பை.கி.ஶ்ரீநிவாச ஐயங்காருடன் மலேசியாவில டமன்சாரா தோட்டத்தில் வேணுகோபால் ஐயங்கார் என்ற தமிழ்ப் பாடசாலை ஆசிரியர் வீட்டில் அடைகலம் புகுந்தனர். ஜனவரி 11, 1942-ல் ஜப்பானரியர் ஆட்சி கோலாலம்பூரில் அமைந்தபோது ஜப்பானிய ராணுவம் அவர்களைத் தேடி வந்து காரியாலத்தைத் திறக்கும்படியும், ஜப்பானிய ராணுவ ஆட்சியினர் அளிக்கும் அறிக்கைகளை பிரசுரிக்கும்படியும் ஆணையிட்டது. அதன்படி நேசன் உரிமையாளர்ககள் நான்கு பக்க நாளிதழாக தமிழ்நேசனை வெளியிட்டனர்.

ஜனவரி 20,1941-ல் ஜாவாவிலிருந்து டச்சு விமாங்கள் திடீரெனத் தாக்கியததை ஒட்டி பின்னர் ஜப்பான் ராணுவத்தின் எதிர்தாக்குதல் இரண்டு நாட்கள் நீடித்தது. அக்காலகட்டத்திலும் அதன் பின்னர் தொடர்ந்த போர் காலத்திலும் தமிழ் நேசன் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நேசனுக்கு நிகராக, ஆங்கில பத்திரிக்கை "மலாய் மெயில்" ஜப்பான் பத்திரிக்கை "மாராய் மெயிரு" (ஜப்பான் மொழியில் 'எல்’ எழுத்து இல்லாத காரணத்தால்), சிங்கையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஷொனான் ஷிம்பன் என்ற பெயரிலும் 4 பக்கங்களுடன் நடைபெற தொடங்கின. இதே சமயம் தமிழ்நேசனின் இணை பத்திரிகையான, 'மலாயன் டெய்லி நியூஸ்' வெளிவரத் தொடங்கியது.

ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் பலவாறான இடர்களும் சோதனைகளும் இருந்தபோதும் தமிழ் நேசன் வெளிவந்தமை தமிழ் மக்களிடையே அது பரவலாகப் படிக்கப்பட வழிவகுத்தது. ஜப்பானியர் மனப்போக்கை விளக்கும் வேடிக்கையான சோதனையை அப்போதைய தமிழ் நேசன் ஆசிரியரான பை.கி. ஶ்ரீநிவாச ஐயங்கார் நேசன் நாற்பதாவது நினைவு மலரில் எழுதியுள்ளார். ஜப்பானியச் சக்கரவர்த்தி தென்னோ ஹெய்காவின் பிறந்தநாளையொட்டி நேசனிலும் அதன் ஆங்கில அங்கமான 'மலாயன் டெய்லி நியூஸிலும்' அவரது முழு உருவப்படம் முதல் பக்கத்தில் பெருமையுடன் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் அதை தங்கள் சக்கரவர்த்திக்கு செய்த ஒரு அவமரியாதையாகக் கருதி விட்டார்கள். தெய்வ பிறவியாக ஜப்பானில் கருதப்பட்ட சக்கரவர்த்தி படத்தைத் தினப்பத்திரிக்கையில் பிரசுரிப்பதால் அப்படம் பலவாறு கிழிந்தும், காலில் மிதிப்பட்டும், மதிப்பிழந்து போகும் என அவர்கள் நம்பினர். எனவே, கோபம் கொண்டு ஜப்பானிய ராணுவ அதிகாரி ஒருவர் நேசன் காரியாலயத்திற்கு வந்து, ஆசிரியரை அழைத்து சிப்பந்திங்கள் அனைவருக்கும் அன்று வரை சம்பளத்தை கணக்கு தீர்த்துக் கொடுக்க சொல்லியபின், எல்லோரையும் வெளியே வர சொல்லி காரியாலயத்தை இழுத்துப் பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்று விட்டார். ஆனால் இந்தத் 'தண்டனை’ இரண்டு நாளுக்குதான் நீடித்தது. மூன்றாவது நாள் அதே ஜப்பானிய அதிகாரி நேசன் காரியாலயத்திற்கு வந்து, பக்கத்தில் உள்ள கடைக்காரரிடம் நேசன் ஆசிரியரை தன்னை வந்து பார்க்கும்படி தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டு போனார். தகவல் கிடைத்ததும், ஆசிரியர் பார்த்தசாரதி அந்த ராணுவ அதிகாரியை பார்க்க சென்றபோது, இராணுவ அதிகாரி எச்சரிக்கையுடன் சாவியைத் திரும்பி கொடுத்து மீண்டும் பத்திரிகையைத் தொடர்ந்து பிரசுரிக்க அனுமதியளித்து அனுப்பினார்.

வே.விவேகானந்தன்

ஈ. இலக்கிய முன்னெடுப்பு

சிறுகதை

1932-ல் தமிழ் நேசன் கதைப் பகுதியைத் தொடங்கிய கோ. பார்த்தசாரதி 'தோட்டக்கலை மர்மம்’ அல்லது 'பத்து மலைக் கள்வன்’ எனும் தொடர்கதை எழுத ஆரம்பித்தார். 1933-ல் தமிழ் நேசன், புதன், சனி ஆகிய இரு நாட்களில் வாரம் இருமுறை வெளிவந்தது. இந்த இரு வெளியீடுகளிலும், தமிழ் நேசன் முதல் முறையாக சிறுகதைளைப் பிரசுரிக்க ஆரம்பித்தது. 1933-ல் தமிழ் நேசன் கிறிஸ்துமஸ் சிறப்பு மலரில் இரு சிறுகதைகள் உள்ளன . தமிழ் நேசனில் முதலில் சிறுகதை எழுதியவரும் நரசிம்ம ஐயங்கார்தான். 'கிராமபோன் சத்தியாவந்தனம்’ ஆகஸ்ட் 2, 1933-ல் வெளிவந்தது. அதன்பின், 'மூக்கந்துரையைப் பாம்பு கடித்தது’ என்னும் சிறுகதை வெளிவந்தது, மலாயாவில் ரப்பர் விலை சரிவால் ஏற்பட்ட சூழ்நிலைக்குத் தகுந்த மலேசிய சிறுகதை அது. ரசிம்ம ஐயங்கார் மலேசியாவின் சிறுகதைக்கான தளத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

கதை வகுப்பு

தமிழ் நேசன் முன்னெடுத்த 'கதை வகுப்பு' மலேசிய நவீன இலக்கியத்தில் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கதை வகுப்பு சுப. நாராயணனும் (கந்தசாமி வாத்தியார்), பைரோஜி நாராயணனும் (வானம்பாடி) இணைந்து நவம்பர் 26, 1950 முதல் ஆகஸ்ட் 19, 1951 வரை நடத்தினர். கதை வகுப்பின் முடிவில் இதில் பங்கேற்ற இளம் எழுத்தாளர்களுக்குப் தேர்வு வினாக்கள் எழுப்பப்பட்டன. தமிழ் நேசன் முன்னெடுத்த கதைவகுப்பு 50-களில் எழுதவந்தவர்களுக்குப் பயிற்சிப் பட்டறையாக அமைந்தது.

இலக்கிய வட்டம்

கு. அழகிரிசாமி 1952 முதல் 1957 வரை தமிழ் நேசனில் ஞாயிறு பதிப்பு ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். 'இலக்கிய வட்டம்’ எனும் இலக்கிய சந்திப்புகளை ஆரம்பித்து, எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி, கறாரான விமர்சனத்துடன் ஊக்கம் கொடுத்தார். 'இலக்கிய வட்டம்’ என ஜனவரி 1957 முதல் அக்டோபர் வரை மாதமொரு முறையென பத்து சந்திப்புகளின் வழியாக மலேசிய எழுத்தாளர்களிடம் நவீந இலக்கியப் புனைவுக்கான நுட்பங்களை கொண்டுவந்து சேர்த்தார். மலேசியாவில் எழுதும் நல்ல எழுத்தாளர்களையும் சிறுகதைகளையும் கண்டடைந்து அவற்றை திருத்தி தமிழ் நேசனில் வெளியிட்டார். 1957-ல் அழகிரிசாமி மலேசிய தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி எழுதிய தலையங்கம் அரசின் சீற்றத்துக்கு ஆளானபோது அவரை தமிழ்நேசன் இதழ் பணிநீக்கம் செய்தது.

பவுன் பரிசு

முருகு சுப்ரமணியன் தமிழ் நேசனில் 1962 முதல் 1975 வரை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் போது, மலேசிய எழுத்தாளகளுக்கு உந்துதல் கொடுப்பதாக பவுன் பரிசு திட்டம் இருந்தது. இந்த பவுன் பரிசுத் திட்டத்தால் ரெ. கார்த்திகேசு, இராம கண்ணபிரான், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி, எம். ஏ. இளஞ்செல்வன், பாவை, மாயதேவன் என 70-களில் இளம் எழுத்தாளர் குழு உருவானது.

ஆனால், 80-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இலக்கிய முயற்சிகள் எதையும் தமிழ் நேசன் எடுக்கவில்லை. அது பழமை போக்குகளுடன் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.

நிதி சேகரிப்பு

தமிழ் நேசன் பலநோக்கங்களுக்காக நிதி கோரி இயக்கங்களை நடத்தியுள்ளது. 1975-ல் தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டுமென மேல்தட்டு மக்களின் வற்புறுத்தலை எதிர்த்து, தமிழ் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கான நிதியை திரட்டிய இயக்கத்தில் தமிழ் நேசனும் பங்காற்றியுள்ளது. அந்த காலத்தில் சென்னையில் எரிந்து போன காங்கிரஸ் மாளிகையை புதுப்பித்து கட்டவும், தமிழகப் புயல் பேரிடர்  நிவாரணம் வழங்கவும் குவேட்டா துருக்கி பூகம்ப பேரிடர் நிவாரணம் வழங்கவும் தமிழ் நேசன் நிதி வசூலித்தது. பல்வேறு சூழல்களில் கைவிடப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான தொகை நிதி சேர்த்து உதவியுள்ளது தமிழ் நேசன்.

தமிழ் நேசன் ஆசிரியர்கள்

  • நரசிம்ம ஐயங்கார் [10.9.1924 - 4.2.1938]
  • வே. விவேகானந்தன் [1959-1996]
  • பி. மலையாண்டி [1997-2007]
  • கே. பத்மநாபன் [2008-2019]

வரலாற்று இடம்

தமிழ் நேசன் மலேசிய வரலாற்றில் மலேசிய இந்தியர்களின் அரசியலுரிமைக்குப் போராடிய இதழாகவும், மலேசிய நவீன இலக்கியத்தை தொடங்கிவைத்த இதழாகவும் இடம்பெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page