under review

கிளாரிந்தா: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(changed template text)
Line 24: Line 24:
* [https://www.commonfolks.in/bookreviews/a-matavaiyavin-clarinda அ. மாதவையாவின் 'கிளாரிந்தா', அ. மார்க்ஸ், commonfolks.in Book Reviews]
* [https://www.commonfolks.in/bookreviews/a-matavaiyavin-clarinda அ. மாதவையாவின் 'கிளாரிந்தா', அ. மார்க்ஸ், commonfolks.in Book Reviews]
* [https://namathu.blogspot.com/2017/07/blog-post_79.html கோகிலா - கிளாரிந்தா ஆன கதை ! எரியும் சிதையில் இருந்து மீண்ட பார்ப்பன பெண் !, namathu.blogspot.com, ஜூலை 2017]
* [https://namathu.blogspot.com/2017/07/blog-post_79.html கோகிலா - கிளாரிந்தா ஆன கதை ! எரியும் சிதையில் இருந்து மீண்ட பார்ப்பன பெண் !, namathu.blogspot.com, ஜூலை 2017]
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:32, 15 November 2022

To read the article in English: Clarinda (Novel). ‎

கிளாரிந்தா
கிளாரிந்தா ஆங்கிலம்
கல்வெட்டு,பாளையங்கோட்டை கிளாரிந்தா ஆலயம்

கிளாரிந்தா (1915) அ.மாதவையா எழுதிய ஆங்கில நாவல். திருநெல்வேலியில் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வாழ்க்கையை அடியொற்றி எழுதப்பட்டது. இதன் தமிழ் மொழியாக்கம் சரோஜினி பாக்கியமுத்துவால் செய்யப்பட்டது.

எழுத்து, வெளியீடு

அ. மாதவையா எழுதிய மூன்றாவது ஆங்கில நாவல். முதல் நாவல் தில்லை கோவிந்தன் (1903). அடுத்த நாவல் சத்தியானந்தன் (1909). கிளாரிந்தா நாவலை அ.மாதவையா 1915-ல் எழுதினார். வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரிக்கு கிளாரிந்தா சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

மொழியாக்கம்

1976-ல் கிளாரிந்தா நாவலை சரோஜினி பாக்கியமுத்து மொழியாக்கம் செய்து கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (CLS) வெளியிட்டது. அ.மாதவையாவின் மகனும் முன்னாள் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியுமான மா.அனந்த நாராயணன் முன்னுரை எழுதியிருந்தார்

வரலாற்றுப் பின்புலம்

இந்நாவல் கிளாரிந்தா (1746-1806) எனும் வரலாற்று ஆளுமையின் கதை. தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய அரசர் பிரதாப சிம்மனின் அவையில் அவரது ஆசிரியராக இருந்தவர் மராட்டிய பிராமணர் பண்டித ராவ். அவருடைய பேத்தி பிறந்தநாளிலேயே பெற்றோரை இழந்து தாத்தாவால் வளர்க்கப்பட்டு முதியவர் ஒருவருக்கு மணம்புரிந்து கொடுக்கப்பட்டாள். கணவன் இறந்ததும் அவளை உடன்கட்டை ஏற்ற முயன்றார்கள். அவளை ஆங்கிலத் தளபதி லிட்டில்டன் (Capt. Harry Lyttleton) காப்பாற்றி தூக்கி வந்து சிகிச்சை அளித்தார். அவளையே மணந்துகொண்டார். அவள் கிளாரிந்தா என பெயர் மாற்றம் செய்துகொண்டு கிறிஸ்தவ மதத்தில் இணைந்தாள். திருநெல்வேலிக்கு வந்து மதப்பணி புரிந்து 1806-ல் மறைந்தாள். கிளாரிந்தா வெட்டிய கிணறு இன்றும் பாளையங்கோட்டையில் உள்ளது. அது பாப்பாத்தியம்மா கிணறு என அழைக்கப்படுகிறது. கிளாரிந்தா கட்டிய சிறு கிறித்தவ தேவாலயமும் பாளையங்கோட்டையில் உள்ளது.

கதைச்சுருக்கம்

கிளாரிந்தாவின் உண்மை வரலாறு ஆங்கிலேய கிறிஸ்தவ மதப்பணியாளரான ஷ்வார்ட்ஸ் பாதிரியாரின் குறிப்புகளில் உள்ளது. பாளையங்கோட்டையில் செவிவழிச்செய்தியாகவும் புழக்கத்திலுள்ளது. அக்கதைகளை பெரும்பாலும் நேரடியாக அடியொற்றியே மாதவையா தன் நாவலை எழுதியிருக்கிறார். கிளாரிந்தாவின் தஞ்சை வாழ்க்கையில் தொடங்கும் நாவல் அவர் மதம் மாறி மதப்பணி ஆற்றும் சித்திரத்தில் நிறைவு கொள்கிறது.

தஞ்சை மன்னனிடம் அமைச்சராக இருக்கும் பண்டித ராவ் தன் மகனை படைப்பணிக்கு அனுப்புகிறார். அவன் அறந்தாங்கி அருகே நடந்த போரில் மறைகிறான். அவன் மனைவி அதிர்ச்சியில் மறைகிறாள். அவர்களின் மகள் கோகிலாவை பண்டிதரே வளர்க்க நேரிடுகிறது. அவரும் மறையவே அரசரே கோகிலாவை வளர்க்கிறார். சாரதா என்னும் சேடி அவளுக்கு பணிவிடை செய்து வருகிறாள். ஒரு சூழ்ச்சிக்கூட்டம் கோகிலாவுக்கு மன்னர் மானியமாக அளித்த கிராமங்கள் மற்றும் செல்வத்தை கவர நினைக்கிறது. அவர்கள் கோகிலாவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக அரசரிடம் பொய் சொல்லி வயோதிகரான திவானுக்கு 12 வயதான கோகிலாவை மணம்புரிந்து வைக்கிறார்கள்.

கோகிலாவை மணந்த திவான் உயிரிழக்கிறார். அந்த சூழ்ச்சிக்கூட்டம் கோகிலாவை உடன்கட்டை ஏறச்செய்ய முயல்கிறது. கிளாரிந்தா அதற்கு மறுக்கிறாள். அவர்கள் அவளை கட்டாயப்படுத்தி சிதையில் ஏற்ற முயல்கையில் லிட்டில்டன் என்னும் ஆங்கிலேயப் படைத்தளபதி அவளை காப்பாற்றுகிறார். மராட்டிய பிராமணர்கள் அவரைப்பற்றி தஞ்சையின் புதிய மன்னரும் பிரதாபசிம்மரின் மகனுமான சாயாஜியிடம் முறையிடுகிறார்கள். சாயாஜி கோகிலாவை விட்டுவிடும்படி சொன்னாலும் லிட்டில்டன் அதை ஏற்கவில்லை.

லிட்டில்டன் கோகிலாவை மணக்க விரும்புகிறார். கோகிலா மதம் மாற விரும்புகிறார். ஆனால் இரண்டுக்கும் சீர்திருத்தக் கிறிஸ்தவத் திருச்சபையும் ஆங்கிலேய கம்பெனியும் ஒத்துக்கொள்ளவில்லை. லிட்டில்டன் தஞ்சையில் இருந்து நெல்லைக்கு மாற்றம் வாங்கிக்கொண்டு கோகிலாவையும் அழைத்துச் சென்றார். அங்கே கோகிலா மானசீகமாக மதம் மாறி தன்னை கிளாரிந்தா என பெயர் மாற்றம் செய்துகொண்டு மதப்பணிகளில் ஈடுபட்டாள்.

1773-ல் விக்டோரியா மகாராணி அழைப்பின்பேரில் லிட்டில்டன் லண்டன் சென்றார். உடல்நலமின்றி இருந்த அவர் அங்கே மறைந்தார். அவர் தன் சொத்துக்களை கிளாரிந்தாவுக்கு எழுதி வைத்திருந்தமையால் அவை அவளுக்கு உரிமையாயின. 1778-ல் ஷ்வார்ட்ஸ் பாதிரியார் அவளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். பாளையங்கோட்டையில் மதப்பணி செய்த கிளாரிந்தா அங்கே 1785-ல் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தையும் ஏழைகளுக்காக ஒரு கிணற்றையும் வெட்டினாள். அம்மக்கள் அவளை ராசா கிளாரிந்தா என அழைத்தனர். சாரதா மதம் மாறி சாரா என ஆனாள். கிளாரிந்தாவின் வளர்ப்பு மகன் ஹென்றி லிட்டில்டன் என பெயர்பெற்றான்.

இலக்கிய இடம்

அ.மாதவையா தமிழில் எழுதிய பத்மாவதி சரித்திரம், முத்துமீனாட்சி போன்ற நாவல்கள் தமிழ் வாசகர்களுக்கு நவீன யதார்த்தக்கதைகளை வாசிப்பதற்கான பயிற்சி இல்லை என்பதை கருத்தில்கொண்டு விளக்கங்களும் ஆசிரியர்குரலும் கலந்து வடிவப்பிசிறுகளுடன் உள்ளன. அவருடைய ஆங்கில நாவல்களில் முதிர்ச்சியான நவீனக் கதைசொல்லும் முறை உள்ளது. அவற்றில் கிளாரிந்தா சிறப்பானது. ஒரு காதல்கதையாகவும் உணர்வுச்செறிவு மிக்க வாசிப்பை அளிக்கிறது. வரலாற்று நிகழ்விலிருந்து நவீனப்புனைவை உருவாக்குவதற்கும் இந்நாவல் முன்னோடியானது.

உசாத்துணை


✅Finalised Page