பல்லவன் (கவிஞர்): Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
Line 52: Line 52:
*இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள், முனைவர் ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2004.
*இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள், முனைவர் ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2004.
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|21-Sep-2025, 06:59:36 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 03:44, 22 September 2025

கவிஞர் பல்லவன்

பல்லவன் (கவிஞர் பல்லவன்; பாவலர் பல்லவன்; வீரராகவன்) (அக்டோபர் 04, 1941 - ஜூலை 12, 2012) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். திராவிட இயக்க ஆதரவாளர்.

பிறப்பு, கல்வி

வீரராகவன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் பல்லவன், அக்டோபர் 04, 1941 அன்று, அன்றைய காஞ்சிபுரம் (இன்றைய செங்கல்பட்டு) மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றத்தில், கன்னையன் - வீரம்மாள் இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

பல்லவன், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். மணமானவர். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்.

கவிஞர் பல்லவன் கவிதை (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர்)

இலக்கிய வாழ்க்கை

பல்லவனின் முதல் கவிதை ஆகஸ்ட் 14, 1961-ல் வெளியானது. இலக்கியவீதி அமைப்பின் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார்.

“மம்மி என்றது குழந்தை

அம்மா என்றது மாடு”

என்ற கவிதையின் வழியாகப் பரவலான கவனம் பெற்றார். தொடர்ந்து இலக்கிய இதழ்களில் பல்வேறு கவிதைகளை எழுதினார். இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. ’கிழவனல்ல அவன் கிழக்குத் திசை’ என்று ஈ.வெ.ரா. பெரியார் குறித்து இவர் எழுதிய பாடல் புஷ்பவனம் குப்புசாமியால் பாடப்பட்டு கவனம் பெற்றது. கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இவரது கவிதை இடம்பெற்றது. பல்லவனின் ’சின்ன நதிகள்’ என்னும் ஹைக்கூ தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்ட மேற்படிப்புக்குத் துணை நூலாய் வைக்கப்பட்டது.

புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பல படைத்துள்ளார்.

அமைப்புச் செயல்பாடுகள்

கவிஞர் பல்லவன் தமிழ்வழி கல்விக்குப் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர் பேரவையின் தொடக்கத்துக்குக் காரணமானார். முத்தமிழ் இலக்கிய மன்றம், இலக்கியவீதி போன்ற தமிழியக்க அமைப்புகளில் செயலாளராய் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். சென்னையில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தோன்ற உறுதுணையாக இருந்தார். பட்டிமன்றங்களிலும் பாட்டரங்குகளிலும் தொடர்ந்து பங்கேற்றார்.

விருதுகள்

  • பாவலர் பட்டம்
  • பண்பாளர் விருது
  • புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருது
  • கண்ணதாசன் விருது
  • தந்தை பெரியார் தமிழிசை மன்றம் விருது
  • முகம் இதழ் வழங்கிய ’முகம் மாமணி’ விருது
  • பல்வேறு கவிதைப் போட்டிகளில் தங்க மற்றும் வெள்ளிப் பதக்கங்கள்
  • சோவியத் பண்பாட்டு மையத்தில் புஷ்கின் இலக்கியப் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் தொடர்ந்து நான்கு முறை முதல் பரிசு

மறைவு

கவிஞர் பல்லவன் ஜூலை 12, 2012 அன்று காலமானார்.

மதிப்பீடு

கவிஞர் பல்லவன் இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதிலும் தமிழ் உணர்வாளர்களை எழுதத் தூண்டுவதிலும் ஆர்வத்தோடு உழைத்தார். மரபுப் பாடல்கள், புதுக் கவிதை, ஹைக்கூ அனைத்திலும் தேர்ந்தவராக இருந்தார். சமூக அவலங்களைச் சாடும் பல கவிதைகளை எழுதினார். ம.இலெ. தங்கப்பா, தாராபாரதி வரிசையில் குறிப்பிடத்தகுந்த கவிஞராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • மயில் தோகை - 1984
  • நெற்றியில் ஓர் எரிமலை - 1991
  • நிலவைப் பிடித்த மக்கள் - 1991
  • சின்ன நதிகள் - 1994

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2025, 06:59:36 IST