உவகைக் கலுழ்ச்சி: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 69: | Line 69: | ||
* [https://puram400.blogspot.com/2011/10/288.html புறம்400] | * [https://puram400.blogspot.com/2011/10/288.html புறம்400] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|18-Jun-2025, 10:30:35 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 19 June 2025
உவகைக் கலுழ்ச்சி தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. போரில் உவகையும் வருத்தமும் கலந்த நிலையைக் கூறுவது.வாளால் வீர மரணம் எய்திய, புண்பட்ட உடம்பையுடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தலும் மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தலும் உவகை கலுழ்ச்சி.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வாளால் ஏற்பட்ட வடுக்கள் நிறைந்த உடம்பினைக் கண்டு மகிழ்ந்து கண்ணீர் சிந்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வாள் வாய்த்த வடு யாக்கைக்
கேள் கண்டு கலுழ்ந்துவந்தன்று (கொளு 7.25)
வெண்பா
வெம்தொழில் கூற்றமும் நாண் இன்று வெம்களத்து
வந்த மறவர் கைவாள் துமிப்பப் - பைந்தொடி
ஆடு அரிமா அன்னன் கிடப்ப அகத்து உவகை
ஓடு அரிக்கண் நீர் பாய் உக (151)
பொருள்: கூற்றுவனும் நாணும் வண்ணம் படைக்களத்தில் எதிரிகளின் வாள் ஒடியப் போர் செய்து வீழ்ந்து கிடந்த வீரனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்தவளின் துயரக் கண்ணீர் ஆறாகப் பாய்ந்தது.
எடுத்துக்காட்டு
புறநானூறு 277
- பாடியவர்: பூங்கணுத்திரையார்
- திணை: தும்பை; துறை: உவகைக் கலுழ்ச்சி
மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்,
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
பொருள்: மீன் உண்ணும் கொக்கின் இறகுபோன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப்பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத்துளிகளைவிட அதிகமானவை.
புறநானூறு 278
- பாடியவர்: கழாத்தலையார்
- திணை: தும்பை; துறை: உவகைக் கலுழ்ச்சி
நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே.
பொருள்: நரம்புகள் தோன்றிய, வற்றிய மெலிந்த தோள்களையும், தாமரை இலை போன்ற வயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன் பகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூறினர். அதைக் கேட்ட அத்தாய், தீவிரமாக நடைபெற்ற போரைக்கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன் என்று, வாளைக் கையிலேந்திப் போர்களத்திற்குச் சென்றாள். அங்கே, குருதி தோய்ந்த போர்க்களத்தில், கீழே விழுந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துத், தன் மகனின் உடலைத் தேடினாள். சிதைந்து பலதுண்டுகளாகிய விழுப்புண்பட்ட அவன் உடலைக் கண்டு, அவனைப் பெற்ற பொழுது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
புறநானூறு 295
- பாடியவர்: ஔவையார்
- திணை: தும்பை; துறை: உவகைக் கலுழ்ச்சி
கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
பொருள்: கடல் எழுந்தாற்போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில், தீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி, தன் படையை ஏவித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில் எதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்த வீரன் ஒருவன் படைகளின் நடுவில் துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்தான். புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அவ்வீரனின் தாய்க்குத் தன் மகன் வீரமரணம் அடைந்ததைக் கண்டதால், அன்பு மிகுந்தது. அவளுடைய வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Jun-2025, 10:30:35 IST