மா. வயித்தியலிங்கன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 65: | Line 65: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|31-Mar-2025, 10:01:59 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 10:34, 31 March 2025
மா. வயித்தியலிங்கன் (நவம்பர் 29, 1935 – மே 22, 2022) தமிழிசை அறிஞர். குடந்தை ப.சுந்தரேசனாரின் மாணவர். தமிழிசையை கல்விப்புலத்திலும் வெகு மக்களிடமும் கொண்டு சேர்க்க பணியாற்றியவர்.
பிறப்பு,கல்வி
மா. வயித்தியலிங்கன் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பேட்டை நாணயக்கார தெருவை சேர்ந்த வயி. மாசிலாமணி செட்டியார் - மா. மீனாட்சி அம்மாள் இணையருக்கு நவம்பர் 29, 1935-ம் ஆண்டு பிறந்தார். இவர்களின் குடிவழியினர் சோழபுரம் செட்டியார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். உடன்பிறந்த இளைய சகோதரர் மா. கோடிலிங்கம்.
மா. வயித்தியலிங்கன் தொடக்கக் கல்வியை கும்பகோணத்தில் அமைந்த நகர உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளங்கலை(பி.ஏ. ஆனர்ஸ்) மற்றும் முதுகலை(எம்.ஏ) தமிழ் பட்டப்படிப்பை முடித்தார். ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்) படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்றார்.
தனிவாழ்க்கை
மா. வயித்தியலிங்கன் 1960-ம் ஆண்டு நாகரத்தினத்தை மணந்தார். இவர்களுக்கு சிவசங்கரன், சிவகுமாரன், சிவசுப்ரமணியன் என மூன்று மகன்கள்.
ஆசிரியப்பணி
மா. வயித்தியலிங்கன் திண்டுக்கல்லில் உள்ள ஜீ. டீ.என் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1965 முதல் 1994 வரை பணியாற்றி ஓய்வுபெற்றார். திண்டுக்கல்லில் ஜீ. டீ.என் கலைக்கல்லூரியில் பேராசிரியாராகப் பணியாற்றிய போது 'தெய்வ நன்னெறி சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு இலக்கிய அறிமுகம், மேடைப்பேச்சு திறன், தமிழறிஞர்களை சந்தித்தல் என துறை சார்ந்த பரந்த அறிவு ஏற்பட வழி செய்தார்.
இசைப்பணி
மா. வயித்தியலிங்கன் தமிழிசை அறிஞர் குடந்தை.ப.சுந்தரேசனாரிடமிருந்து நேரடியாகத் தமிழிசை பயின்றார். குடந்தை ப.சுந்தரேசனாரின் வழியில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய நூல்களை இசையாகப் பாடி தமிழிசையை வெகுமக்களிடம் கொண்டு சென்றார்.
- சென்னை வானோலி மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று தமிழிசையின் பரவலாக்கத்திற்கு பங்காற்றினார்.
- மக்கள் தொலைக்காட்சிக்காக 'பண் இசை வித்தகர்கள்' என்ற தொடரினை டாக்டர் சுந்தர், இசைக்கவி இரமணன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார்.
- சிலப்பதிகாரத்தைப் பல்வேறு இசை வடிவங்களில் ஊடகங்களில் வெளியிட்டு, சிலப்பதிகார இசை பரவுவதற்குத் காரணமாக இருந்தார்.
- இலால்குடி எனப்படும் திருத்தவத்துறையில் குடந்தை ப.சுந்தரேசனார் நிறுவிய நாடுகாண் குழுவின் பணிகளில் அவர் மறைவுக்குப் பிறகு இருபத்தைந்தாண்டுகளாகப் பணியாற்றியவர். கமலத் தியாகராசன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து விருதளித்தார்.
- பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நிறுவிய இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலராகப் பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை முதலிய ஊர்களில் தமிழிசை பரவுவதற்கு பங்காற்றினார்.
- ச.இராமதாஸால் நிறுவப்பட்ட பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் ஆண்டு விழாக்களில் இசையறிஞர்களை அழைத்து, அந்த நிகழ்வுகளை நடத்தினார்.
- சென்னைக் கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள இறைப் பணி மன்றத்தின் சார்பில் இசைப்பணிகள், இறைப்பணிகள் செய்தார்.
- மா. வயித்தியலிங்கன் 2017-ம் ஆண்டு தமது தம்பி மா. கோடிலிங்கத்துடன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இசையமர்வை நடத்தினார்.
- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் உலக தமிழ் மன்றம் சார்பில் இசையமர்வு நடத்தினார்.
- செம்மொழி நிறுவனத்துக்காகப் பத்துப்பாட்டு, தொல்காப்பியம், திருக்குறள் முதலானவற்றை இசைவட்டுகளில் தமிழிசை மரபுப்படி பாடினார்.
- தமிழர் பண்பாடு, ஓம் சக்தி, ஞானத்திரள் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
- செம்மொழி நிறுவனத்துக்காகப் பத்துப்பாட்டு, தொல்காப்பியம், திருக்குறள் முதலானவற்றை இசைவட்டுகளில் தமிழிசை மரபுப்படி பாடினார்.
பொறுப்புகள்
- இராமலிங்கர் பணி மன்றம், பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம், சென்னை இசைச் சங்கம், தமிழ் இசைக்கல்லூரிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், சிறப்புரைகள் வழங்கும் பேராசிரியராகவும் விளங்கினார்.
- இராணி மேரிக் கல்லூரியில் இசைத்துறைத் தேர்வாளராக இருந்தார்.
நாடகப்பணி
- பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம், நாடக அறிஞர் சே. ராமானுஜம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து கைசிகி நாடகம் அரங்கேறுவதற்கு உதவியாக இருந்தார்.
- சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, 'புறஞ்சேரி' என்னும் இசைநாடகம் புதிய நாடக உத்திகளுடன் இவரால் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் நடிக்கப்பட்டது.
விருதுகள்
- இளங்கோ அடிகள் விருது - தமிழ்நாடு அரசு
- சைவப் பேரிசைககடல் - சிருங்கேரி மடம்
- சம்பந்தர் தமிழ்நெறிச் செல்வர் - திருவாவடுதுறை ஆதீனம்
- தமிழ்நெறிச் செம்மல் - கோவைத் தமிழ்ச்சங்கம்
- தமிழாகரர் - குன்றக்குடி ஆதீனம்
- பெரும்பாண நம்பி - ப. சு .நாடுகாண் குழு
மறைவு
மா. வயித்தியலிங்கன் மே 22, 2022-ம் ஆண்டு மறைந்தார்.
நூல் பட்டியல்
- பண் வகுத்தது எப்படி?
- அய்யனார்
- மாரிமுத்தா பிள்ளை பிரபந்த திரட்டு
- சைவ நியமம்
- பெரிய புராணம் வினா-விடை
- கட்டுரைத் திரட்டு
வெளி வராத நூல்கள்
- வடிவுடை மாணிக்க மாலை
- விண்ணப்பக் கலிவெண்பா
- அருள் விளக்க மாலை
- பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி உரை
- நலந்தரு பதிக உரை
- மூத்த பிள்ளையார் பிரபந்த திரட்டுத் தொகுப்பு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:01:59 IST
