under review

ந. பிச்சமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 97: Line 97:


*இந்திய இலக்கிய சிற்பிகள் , ந. பிச்சமூர்த்தி - அசோகமித்திரன், சாகித்ய அகாடமி, புது தில்லி, 2002.
*இந்திய இலக்கிய சிற்பிகள் , ந. பிச்சமூர்த்தி - அசோகமித்திரன், சாகித்ய அகாடமி, புது தில்லி, 2002.
*எனது இலக்கிய நண்பர்கள் எம்.வி.வெங்கட்ராம்
*இலக்கிய முன்னோடிகள்.( ந.பிச்சமூர்த்தி சுமையாகும் தரிசனம்) ஜெயமோகன்
*ந.பிச்சமூர்த்தியின் கலை- மரபும் மனிதநேயமும்- சுந்தர ராமசாமி
*
*

Revision as of 18:02, 25 January 2022

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


Na Pichamurthy.jpg

ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ரா.வுடன் (கு.ப. ராஜகோபாலன்) இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ரா.வின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.

பிறப்பு கல்வி

வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை உடைய ந. பிச்சமூர்த்தி, 1900ம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று கும்பகோணத்தில் நடேச தீட்சிதர், காமாட்சியம்மா தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விடவே, பெற்றோர் இவருக்கு பிச்சை என்று பெயரிட்டுஅழைத்தனர். இந்த பெயரே பின்னாளில் ந. பிச்சமூர்த்தி ஆகியது.நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர். ந. பிச்சமூர்த்தியின் தந்தை இவருக்கு ஏழு வயதாகும்போது இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி, கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் உயர்கல்வி கற்று பின் நேட்டிவ் கலாசாலையில் தத்துவத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். அதன்பின் சென்னையில் சட்டம் படித்தார்

தனிவாழ்க்கை

ந.பிச்சமூர்த்தி 1924ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என கருதி, அத்தொழிலை 1938ல் விட்டு விட்டார். 1938ம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் ஏழு மாத காலம் ஹனுமான் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். சுமார் ஆறு மாத காலம் குடந்தை நகர சபை அங்கத்தினராகவும் பதவி வகித்துள்ளார். பின் அப்பணியிலிருந்தும் விலகி, 1939ல் இந்து அறநிலையத்துறையில் அதிகாரியாக சேர்ந்தார். 1956ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின் நவ இந்தியா தினசரியில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

1924ம் ஆண்டு, சாரதா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பின்னும் துறவு வாழ்க்கையை விரும்பி அலைந்திருக்கிறார். 1935ம் ஆண்டு, திருவண்ணாமலையில் ரமண மகிரிஷையையும் சித்தர் குழந்தைசாமியையும் சந்தித்து துறவு நிலை அருளுமாறு வேண்ட, அவர்கள் இவருக்கு மண வாழ்வே ஏற்றது என்று கூறிவிட்டனர். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு.

இடையில் 1938ம் ஆண்டு வெளி வந்த ஸ்ரீ ராமானுஜர் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ந. பிச்சமூர்த்தியின் முதல் கதை ‘சயன்ஸுக்கு பலி’ கலைமகள் இதழில் 1932ம் ஆண்டு வெளி வந்தது. ஆனால் 1933ல் கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற இவரது சிறுகதையான ‘முள்ளும் ரோஜாவும்’ தான் இவருக்கு பரவலான அறிமுகத்தை பெற்று தந்தது.இதற்கும் முன் 1922ம் ஆண்டிலேயே ‘இளைஞன்’ மற்றும் ’நாஸ்திகன் கடிதம்’ என்னும் இரு கதைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.பின்னர் 1933ல், இவ்விரு கதைகளையும் ’மோஹினி’ மற்றும் ‘ஆராய்ச்சி’ என்ற பெயர்களில் தமிழில் வெளியிட்டார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு ’பதினெட்டாம் பெருக்கு’ 1944ல் வெளி வந்தது. இவரது முதல் கவிதை ’காதல்’ 1934ம் ஆண்டு வெளியானது. இதன் பின் மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு ஆகிய இதழ்களில் பல கதை, கவிதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ரேவதி, பிக்ஷ (bikshu) போன்ற புனை பெயர்களிலும் எழுதியுள்ளார்.

ந.பிச்சமூர்த்தி தாகூரின் எழுத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தாகூரின் கவிதைகள், கதைகள் இரண்டின் செல்வாக்கும் அவரிடமுண்டு. அவருடைய தோற்றமே தாகூரில் இருந்து அவர் பெற்றுக்கொண்டதுதான். ந.பிச்சமூர்த்தி கு.ப.ராஜகோபாலனை கும்பகோணத்தில் 1933ல் நடைபெற்ற மாமாங்கம் கதர்க்கண்காட்சியில் சந்தித்தார். அதன்பின் அவருடன் நெருக்கமான நட்பு இருந்தது. பெரும்பாலும் திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் வாழ்ந்த ந.பிச்சமூர்த்தி திருலோகசீதாராமையும் அவருடைய சிவாஜி இதழையும் மையமாக்கி திருச்சியில் இருந்த இலக்கியக் குழுவில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். கு.ப.ராஜகோபாலன் திருச்சிக்கு வந்து ந.பிச்சமூர்த்தியைச் சந்திக்கும் வழக்கம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் பிற ஊர்களிலும் அறநிலையத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் கடுமையான உள அழுத்தம் அவருக்கு இருந்தது. பதினெட்டாண்டுகள் அவர் ஏதும் எழுதவில்லை. மீண்டும் தினசரியில் வேலைக்குச் சேர்ந்தபின்னரே எழுதினார்.

ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி இலக்கிய இதழுடன் சேர்த்து அடையாளம் காணப்படுகிறார். சிவாஜி, கிராமஊழியன் போன்ற அக்காலத்தைய இதழ்கலில் அவர் எழுதியிருக்கிறார். மணிக்கொடி இலக்கியத்திற்கான தனி வரையறையையும் தன்னடையாளத்தையும் உருவாக்கி கொண்டிருந்த இதழ் என்பதும் அதையொட்டி இணையான உலகப்பார்வையும் அழகியலும்கொண்டவர்கள் அதில் இணைந்துகொண்டார்கள் என்பதுமே காரணம். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி மூவரும் மணிக்கொடியின் முகங்கள் என அறியப்படுகிறார்கள். மணிக்கொடி தேசியப்பார்வை கொண்டிருந்த இதழ். ஆனால் இலக்கியத்தில் அது புதியவடிவங்களையும் மீறல்பார்வைகளையும் அனுமதித்தது. புதுமைப்பித்தன் சீற்றமும் எள்ளலும் கொண்ட கதைகளை எழுதினார். கு.ப.ராஜகோபாலன் பாலியல் உசாவல்கள்கொண்ட கதைகளை எழுதினார். ஆனால் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் அன்றிருந்த சமூகப்பிரச்சினைகளையும், அவற்றைக் கடந்துசெல்வதற்கான ஆன்மிக உந்துதல்களையுமே பேசின.

ந.பிச்சமூர்த்தி பாரதியின் வசனகவிதைகளாலும் தாகூரின் கவிதைகளின் ஆங்கில (வசன) மொழியாக்கங்களாலும் கவரப்பட்டு வசனகவிதைகள் எழுதினார். அவை அப்போது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. ஆனால் சி.சு.செல்லப்பா பின்னர் ஜனவரி 1959 ல் எழுத்து சிற்றிதழைத் தொடங்கியபோது அதில் ந.பிச்சமூர்த்தி எழுதிய பெட்டிக்கடை நாரணன் என்னும் கவிதையை மறுபிரசுரம் செய்தார். அப்போது சூழல் மாறி புதுக்கவிதையில் ஆர்வம்கொண்ட ஓர் இளைஞர் குழு உருவாகியிருந்தது. அவர்கள் தொடர்ச்சியாக வசனகவிதைகளை எழுத்து இதழுக்கு அனுப்பினர். எழுத்து இதழில் புதுக்கவிதை இயக்கம் உருவாகியது. தொடக்கத்தில் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், மரபுசார் அறிஞர்களின் கடும் எதிர்ப்பு இருந்தாலும் புதுக்கவிதை இயக்கம் வேரூன்றியது. பாரதியிடம் தமிழ் வசனகவிதை தோன்றியதென்றாலும் புதுக்கவிதை இயக்கத்தின் பிதாமகராக ந.பிச்சமூர்த்தியே கருதப்படுகிறார்.

கவிதையின் (கலைகளின்) சித்தாந்தம் பற்றி எழுதும்போது ந.பிச்சமூர்த்தி ‘அழகுத்தெய்வமும் அன்புத்தெய்வமும் அகத்துள் அடிவைத்துச்செல்லும்கால் கலையுணர்ச்சி பொங்குகிறது’( காவியத்தின் மூன்று கிளைகள்’ இலக்கியம் பற்றிய அவருடைய பார்வை இதுவே

இலக்கிய இடம்

ந.பிச்சமூர்த்தி தமிழில் அடக்கமான, குறைத்துச்சொல்லும் யதார்த்தவாத அழகியலை முன்வைத்த சிறுகதையாசிரியர். அவருடைய சிறுகதைகள் மூன்று தளங்களில் முக்கியமானவை. அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகள். ஆன்மிகமான தேடலைச் சொல்லும் கதைகள். எளிய மனிதாபிமானத்தை முன்வைக்கும் கதைகள். இக்கதைகள் பின்னர் வந்த எழுத்தாளர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்தன. தலித் இலக்கியத்திற்கு முன்னுதாரணமாகச் சொல்லக்கூடிய கதைகளையும் பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார். தமிழில் கு.அழிகிரிசாமி அடுத்த தலைமுறையில் கந்தர்வன் என ந.பிச்சமூர்தி மரபு என ஒன்றை சுட்டிக்காட்ட முடியும்

தமிழ்ப்புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி ஒரு முன்னோடி. புதுக்கவிதை எழுத்து இதழ் வழியாக புதிய வடிவம் எடுத்தபோது அவர் தொடர்ச்சியாக எழுதி படிமக்கவிதைக்கு உதாரணமான முக்கியமான படைப்புக்களை எழுதினார். அவருடைய கவிதைபாணியை பின்பற்றும் தி.சொ.வேணுகோபாலன் போன்ற கவிஞர்கள் எழுத்து இதழிலேயே உருவானார்கள். அதன்பின் மூன்று தலைமுறையாக எழுதும் பல கவிஞர்களில் பிச்சமூர்த்தியின் மரபு தொடர்கிறது. காட்சிவடிவமான படிமங்கள், உறுத்தாமல் குறிப்புணர்த்தும் பாணி ஆகியவை அவருடைய கவிதைகளின் இயல்புகள். கிளிக்குஞ்சு, ஆத்தூரான் மூட்டை, கொக்கு போன்றவை உதாரணம்.

தமிழ் இலக்கியத்தில் இலட்சியவாத எழுத்தின் முகமாகவும் ந.பிச்சமூர்த்தி அறியப்படுகிறார். அவருடைய இலட்சியவாத யுகம் ஐம்பதுகளிலேயே மெல்லமெல்ல காலாவதியாகியது என்று சுந்தர ராமசாமி ‘ந.பிச்சமூர்த்தி மரபும் மனிதநேயமும்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார். ஆயினும் அவர் நன்னம்பிக்கை மனிதநேயம் இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை ஆகிய விழுமியங்களை முன்வைக்கும் படைப்பாளியாகவே நீடிக்கிறார்

மறைவு

ந. பிச்சமூர்த்தி, நவம்பர் 15, 1976 ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று வார கால தீவிர சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 4, 1976 அன்று நினைவு திரும்பாமலேயே காலமானார்.

படைப்புகள்

சிறுகதைகள்
  • பதினெட்டாம் பெருக்கு
  • ராகு கேது
  • தாய்
  • வானம்பாடி
  • ஆராய்ச்சி
  • மருதாணி விரலெங்கே? அழகெங்கே?
  • விழிப்பு
  • முள்ளும் ரோஜாவும்
  • சொக்கு
  • மீனி
  • புருஷன் எழுதின கதை
  • காபூலிக் குழந்தைகள்
  • அடகு
  • அரைப்பைத்தியம்
  • மீனலோசனி
  • ஜம்பரும் வேஷ்டியும்
  • மோஹினி
  • குடும்ப ரகசியம் (குறு நாவல்)
  • மாங்காய் தலை
  • இரட்டை விளக்கு
  • காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்)
  • வானம்பாடி
  • தரிசனம்
  • பலூன் பைத்தியம்
  • நெருப்புக் கோழி
  • புலியின் வரிகள்
  • முதல் பிடில்
  • காவல்
  • வெறும் செருப்பு
  • ஞானப்பால்
கவிதைகள்
  • காட்டு வாத்து (1962)
  • வழித்துணை (1964)
  • குயிலின் சுருதி (1970)
  • கோடை வயல்
கட்டுரைகள்

மனநிழல் (1977)

நாடகங்கள்
  • காளி (1946)

உசாத்துணைகள்

  • இந்திய இலக்கிய சிற்பிகள் , ந. பிச்சமூர்த்தி - அசோகமித்திரன், சாகித்ய அகாடமி, புது தில்லி, 2002.
  • எனது இலக்கிய நண்பர்கள் எம்.வி.வெங்கட்ராம்
  • இலக்கிய முன்னோடிகள்.( ந.பிச்சமூர்த்தி சுமையாகும் தரிசனம்) ஜெயமோகன்
  • ந.பிச்சமூர்த்தியின் கலை- மரபும் மனிதநேயமும்- சுந்தர ராமசாமி