under review

பூதத்தம்பி விலாசம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 36: Line 36:
*[https://noolaham.net/project/45/4499/4499.pdf பூதத்தம்பி விலாசம் செங்கை ஆழியான்]
*[https://noolaham.net/project/45/4499/4499.pdf பூதத்தம்பி விலாசம் செங்கை ஆழியான்]
*யாழ்பாண சரித்திர. செ.ராசநாயகம் . 1933
*யாழ்பாண சரித்திர. செ.ராசநாயகம் . 1933
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|24-Dec-2022, 19:21:15 IST}}
[[Category:நாடகங்கள்]]
[[Category:நாடகங்கள்]]
[[Category:19ம் நூற்றாண்டு]]
[[Category:19ம் நூற்றாண்டு]]
[[Category:ஈழ படைப்புகள்]]
[[Category:ஈழ படைப்புகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:05, 13 June 2024

பூதத்தம்பி விலாசம்

பூதத்தம்பி விலாசம் (1888) கொஸ்தான் எழுதிய நாடகநூல். இந்நூல் இலங்கையில் ஒல்லாந்தவர் (ஹாலந்து நாட்டினர்) ஆட்சி செய்த காலகட்டத்தில் இராசவாசல் முதலியார்களில் ஒருவராக விளங்கிய பூதத்தம்பி என்பவரின் வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய நாட்டார்ப்பாடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்நூலை ஒட்டி பின்னாளில் பல கூத்துகளும் நாடகங்களும் உருவாயின.

எழுத்து, வெளியீடு

இந்த நாடகநூலை கொஸ்தான் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆசிரியர் பற்றி மேலதிக தகவல்கள் இல்லை. 1888-ல் மயிலிட்டி நல்லையாபிள்ளை இந்நூலை வெளியிட்டார். தாவீது கொஸ்தீன் இயற்றி மயிலிட்டி நல்லய்ய பிள்ளை பரிசோதித்து அச்சிட்டது என நூலில் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் நல்லூரை புவிநாயக முதலியார் என்பவர் வரிவசூல் அதிகாரியாக பணியாற்றினார். இராசவாசல் முதலியார் என அழைக்கப்பட்ட அவருடைய மகன் பூதத்தம்பி கச்சாய் வன்னிமை கைலாயபிள்ளையின் சகோதரியை மணந்தார். 16 மார்ச் 1658-ல் ஒல்லாந்தார் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதும் பூதத்தம்பி டோன் லூயிஸ் என்னும் பெயர் மாற்றம் பெற்று, கிறிஸ்தவராக அறிவித்துக்கொண்டு, ஒல்லாந்தவரிடம் ஒத்துழைத்து அரசிறைக்குப் பொறுப்பான முதலியாராகப் பணியாற்றினார்

ஒல்லாந்தவர்களின் சீர்திருத்த கிறிஸ்தவ முறைகளை ஏற்காத போர்ச்சுக்கீசிய கத்தோலிக்க மதகுரு கல்தேறா பாதிரியாரும், மன்னாரைச் சேர்ந்த ஒரு கோயில்பற்று தலைவனும், ஒல்லாந்தவர் சேவையில் இருந்த ஐந்து போர்ச்சுக்கீசிய வீரர்களும் பூதத்தம்பியுடன் சேர்ந்துகொண்டு 1658, செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருந்த ஒல்லாந்தவரை தாக்கி கொல்ல முயன்றனர். அங்கே சிங்கள முதலியார் மனுவேல் அந்திராடோ தன் வீரர்களுடன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அவர் தங்களுடன் சேர்வார் என பூதத்தம்பியும் துணைவர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அவர்களை எதிர்த்துப் போரிட்டார். அதே வேளையில் கோட்டையை விட்டு வெளியே சென்றிருந்த ஒல்லாந்து காப்டனும் திரும்பி வரவே பூதத்தம்பியும் பிறரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

நாடக வடிவம்

கதை மாந்தர்

பூதத்தம்பி இந்நாடகத்தில் முதலியார் பூதத்தம்பி என்று சொல்லப்படுகிறார்.

பூதத்தம்பியின் மனைவி அழகவல்லி.இவள் இரணவீரசிங்கனின் மகள்.

அந்திராடோ (Andrado) என்ற வரலாற்றுப் பாத்திரம் நாடகத்தில் அந்திராசி என அழைக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் ஒல்லாந்தக் கொமுசாறியான (தேசாதிபதி) றைக்ளோப் வன் ஹஜன்ஸ் (வன்கோயன்) என்பானை பெரிய ஒல்லாந்தேசு எனவும், பூதத்தம்பியின் நண்பனாகச் சித்திரிக்கப்படும் யாழ்ப்பாணக் கமாண்டர் றுத்தாஸ் என்பானைச் சின்ன ஒல்லாந்தேசு எனவும் இந்நாடகம் குறிப்பிடுகின்றது.

கதை

பூதத்தம்பியின் மனைவியும் இரணவீரசிங்கனின் மகளுமான அழகவல்லி பேரழகி. பூதத்தம்பி இல்லத்துக்கு விருந்து வந்த அந்திராசி அவளை கண்டு காமம் கொண்டு பரிசுப் பொருட்களுடன் தூது அனுப்பி மீள் பரிசாக விளக்குமாற்றையும் செருப்பையும் பெற்றமையால் வஞ்சம் கொள்கிறான். கல்தேறா எனும் கத்தோலிக்கக் குருவும் போர்ச்சுகீசியரும் செய்த சதியில் பூதத்தம்பியைச் சிக்கவைத்து தண்டனை வாங்கி தருகிறான். பூதத்தம்பி ஒல்லாந்தவர்களால் கொல்லப்படுகிறான்.

நாடக அமைப்பு

இந்நாடகம் சைவ சமயக் கடவுளர் துதிகளையும் சைவசமயப் போற்றுதல்களையும் கொண்டுள்ளது.

இரண்டு சாதிகளுக்கிடையிலான (வெள்ளாளன், குருகுலத்தவன்) உணவு, உடை, நடத்தைகளைப் பாடும்போது ஒன்றை உயர்த்தியும் மற்றையதை இழிவு படுத்தியும் பேசுகின்றது

அழகவல்லியின் பாதங்களை மட்டுமே அந்திராசி கண்டதாகவும் அவற்றிலிருந்து அழகவல்லியின் அழகை முழுமையாக அவன் ஊகித்தறிந்ததாகவும் நாடகம் சொல்கிறது. இது பில்ஹணன் நாடகத்தின் சாயல் கொண்ட பகுதி.

வெட்டறா மூலிகை ஒன்றினைப் பூதத்தம்பி தன் கொண்டையில் முடிந்து வைத்திருந்ததாகவும், அதனை அறிந்திருந்த அந்திராசி, அதனை எடுத்துவிட்டு பூதத்தம்பியின் சிரசைக் கொய்யுமாறு ஆணையிட்டதாகவும் நாடகம் சொல்கிறது. இது நாட்டார்கதைகளில் இருந்து பெறப்பட்டது

பூதத்தம்பியால் விருந்திற்கு அழைக்கப்பட்ட அந்திராசி அழகவல்லியைக் காணல், தூதனுப்பல், அவமானப்படல், பழி வாங்கும் நோக்குடன் வெற்றுக்காகிதத்தில் பூதத்தம்பியின் ஒப்பம் பெறல், அதனைப் பயன்படுத்தி அவனுக்கும் போர்த்துக்கேயருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறிப் பெரிய ஒல்லாந்தேசு மூலம் பூதத்தம்பியைக் கொல்வித்தல் ஆகியவை இந்நாடகத்தின் காட்சிகள்.

இலக்கிய இடம்

பூதத்தம்பி இலங்கையில் சிங்கையாரியனுக்குப் பின் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இரண்டாவது தலைவர் என்றும், ஆகவேதான் அவர் நாட்டார் வாய்மொழியில் கதைத்தலைவர் தகுதி பெற்றார் என்றும் செ.இராசநாயகம் கருதுகிறார். ‘பூதத்தம்பி அந்நியருக்கு எதிராகக் கிளர்ந்து எழ முயன்றவன். அவன் புரட்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டது. ஆனாலும் அவன் என்றும் நினைவு கூரப்படுவான்’ என்று சொல்லும் செங்கை ஆழியான் அவ்வரலாற்றை ஏறத்தாழ அவ்வரலாறு நிகழ்ந்து ஒரு தலைமுறைக் காலத்திற்குள் இலக்கியமாக படைக்கப்பட்ட இந்நாடகம் முதன்மையான ஓர் இலக்கியப் படைப்பு என்றும், பின்னாளில் இந்நாடகமே வெவ்வேறு வடிவில் கூத்துக்களாகவும் நாடகமாகவும் ஆடப்பட்டது என கருதுகிறார்.

பூதத்தம்பி விலாசம் வரலாற்றில் இருந்து சற்று மாறுபட்டு ஒரு கதையை முன்வைக்கிறது. ஆனால் ஒரு செவ்வியல் அவல நாடகத்திற்குரிய எல்லா கூறுகளும் கொண்டதாக இது அமைந்துள்ளது. கதைநாயகன் தன் தனிச்சிறப்பாலேயே வீழ்ந்துபடுவது, கதைநாயகியின் அழகு அழிவுக்கு காரணமாக ஆவது, கதைநாயகிமேல் ஆசைகொண்டவனின் வஞ்சம் ஆகியவை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்திற்கு சமானமானவையாக உள்ளன. தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாடகங்களில் பூதத்தம்பி விலாசமே முதன்மையானது என்று ஆய்வாளர் கருதுகிறார்கள்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 19:21:15 IST