first review completed

கு.ராஜவேலு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 49: Line 49:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
<references />
<references />
{{Standardised}}
{{first review completed}}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:31, 6 April 2022

கு.ராஜவேலு

கு.ராஜவேலு (ஜனவரி 29, 1920 - செப்டெம்பர் 9, 2021) தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். காந்தியத் தாக்கத்துடன் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றிய நாவல்களை எழுதியவர் . விடுதலைப்போரில் சிறைசென்றவர். அரசியல் செயல்பாட்டாளர்

பிறப்பு, கல்வி

கு.ராஜவேலு சேலம் மாவட்டம் போடிநாயக்கன் பட்டியில் ஜனவரி 29, 1920-ல் பிறந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரத்தில் இருந்த அரசர் கல்லூரியில் தமிழ் இளங்கலை பயின்றார். சென்னை பச்சையப்பா கல்லூரியில் எம்.ஏ. ஆனர்ஸ் (தமிழ்) படித்தார்.

தனிவாழ்க்கை

கு.ராஜவேலு குடந்தை அரசுக்கல்லூரி, சென்னை கலைக்கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவற்றில் தலைமைப்பொறுப்பு வகித்தார். ஓய்வுபெற்றபின்னரும் தமிழ் பண்பாட்டு இயக்ககத்தில் தலைமைப்பொறுப்பில் இருந்தார். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் நீண்டகாலம் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

கு.ராஜவேலு 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு!’ இயக்கத்தில் தனது மாணவப் பருவத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்த வரலாற்றை இவர் தனது “ஆகஸ்ட் 1942” எனும் நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். கு.ராஜவேலு 1942ல் திருவையாறு நகரத்தில்அரசர் கல்லூரியில் தமிழ் படித்து வந்தார். ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அன்றே காந்தியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் கூடி தலைவர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பந்தல் தீக்கு இரையாகியது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அரசர் கல்லூரியின் மாணவர்களான ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்கிருத மாணவர் எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் ,கு.ராஜவேலு ஆகியோர் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆட்கொண்டார் சந்நிதி எனப்படும் கடைத்தெரு பகுதியில் போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. கூட்டத்திலிருந்து கலைந்து சென்றவர்கள் தபால் அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தின, காவிரி ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் இருந்த முன்சீப் கோர்ட் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சூறையாடினர்.தஞ்சாவூரிலிருந்து மலபார் போலீசார் கலவரத்தை அடக்க வந்து சேர்ந்தனர். அப்போது முன்சீப் கோர்ட் உள்ளே இருந்த கு.ராஜவேலு காவிரியின் வெள்ளத்தில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் எனும் ஊரில் கரை ஏறி, பிறகு அவருடன் படித்துக் கொண்டிருந்த அவ்வூர் மாணவனின் உதவியுடன் திருவையாறு வந்தார். அன்று மாலையே இவரும் மற்றும் 42 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்த வழக்கில் இவரும் மற்ற 42 பேரும் தண்டிக்கப்பட்டனர். கு.ராஜவேலு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம் (அவரும் அப்போது அந்தக் கல்லூரி மாணவர்) பதினெட்டு வயது ஆகாதவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். கு.ராஜவேலு பதினொரு ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கு.ராஜவேலு அரசியலில் கு.காமராஜுக்கு மிக நெருக்கமானவர். காமராஜ் ஆட்சியில் அவருடைய எண்ணமறிந்து செயலாற்றுபவராக இருந்தார்[1].

இலக்கியவாழ்க்கை

தன் 14-வது வயதில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் கு.ராஜவேலு. கல்லூரி மாணவராக இருக்கையில் இவருடைய முதல்நாவல் ‘காதல் தூங்குகிறது’ கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல்போட்டியில் முதல்பரிசு பெற்றது. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு.வரதராசனார் இருவரும் இவருடைய இலக்கியத் தோழர்கள். மு.வரதராசனாரின் பாணியில் நாவல்களை எழுதினார்.

இலக்கிய இடம்

கு.ராஜவேலு மாணவர்கள் பயில்வதற்குரிய நல்லொழுக்க அறிவுறுத்தல்கொண்ட நாவல்களை எழுதியவர். அவை கல்லூரிகளில் பாடமாக இருந்தன. அவற்றில் அழகு ஆடுகிறது குறிப்பிடத்தக்கது.

விருதுகள், சிறப்புகள்

கு.ராஜவேலுவுக்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது.

மறைவு

கு.ராஜவேலு செப்டெம்பர் 9, 2021 அன்று சென்னையில் மறைந்தார்.

நூல்கள்

  • கொடைவளம்
  • சத்தியச்சுடர்கள்
  • வைகறை வான்மீன்கள்
  • வள்ளல் பாரி
  • வானவீதி
  • காந்தமுள்
  • மகிழம்பூ
  • தேயாத நிறைநிலா
  • இடிந்தகோபுரம்
  • அழகு ஆடுகிறது
  • அடிவானம்
  • தங்கச்சுரங்கம்
  • சாலையோரம்

உசாத்துணை

குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories. }